மேல ஏறி வாரோம் ஒதுங்கி நில்லு!! ஓலா இ-ஸ்கூட்டரை வாங்குபவர்கள் அதிகரிப்பு - ஆக்டிவாவுக்கே டஃப் கொடுக்கும் போலயே
இந்திய சந்தையில் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றியும், அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கையையும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
எப்போதும் போல் இந்தியாவின் டாப் சேல்ஸ் ஸ்கூட்டராக முதலிடத்தை ஹோண்டா ஆக்டிவா பிடித்துள்ளது. கடந்த 2023 நவம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஆக்டிவா ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 1,96,055 ஆகும். ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 1,75,084 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 11.98% அதிகரித்துள்ளது. ஆக்டிவாவிற்கு அடுத்து மக்கள் பலரால் கடந்த நவம்பர் மாதத்தில் வாங்கப்பட்ட ஸ்கூட்டராக டிவிஎஸ் ஜூபிட்டர் உள்ளது. ஆனால், ஆக்டிவாவிற்கும், ஜூபிட்டருக்கும் இடையே சுமார் 1.20 இலட்சம் அளவிற்கு வித்தியாசம் உள்ளது. ஏனெனில், ஜூபிட்டர் ஸ்கூட்டரின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 72,859 ஆகும்.
ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் வெறும் 47,422 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, 2022 நவம்பரை காட்டிலும் கடந்த நவம்பரில் 25,437 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டு உள்ளன. சுஸுகி ஆக்ஸஸ் 52,512 யூனிட்களின் விற்பனை உடன் 3வது இடத்தை பிடித்துள்ளது.

ஆனால், 2022 நவம்பரில் 48,113 ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் மோட்டாரின் மற்றொரு பிரபலமான ஸ்கூட்டரான எண்டார்க் இந்த வரிசையில் 4வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எண்டார்க் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 30,396 ஆகும். ஆனால், 2022 நவம்பரில் 17,003 எண்டார்க் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்து இருந்தது.
5வது இடத்தில் உள்ள ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை எண்ணிக்கை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதத்திலும் 29,808 ஓலா எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் 16,385 எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்தியாவில் அதிக பேர் வாங்கும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக ஓலா எஸ்1 முதலிடத்தில் உள்ளது.

இந்த டாப்-10 லிஸ்ட்டில் ஓலா எஸ்1-க்கு அடுத்து ஹோண்டா டியோ 23,979 யூனிட்களின் விற்பனை உடன் 6வது இடத்தை பெற்றுள்ளது. ஆனால், 2022 நவம்பரில் டியோ ஸ்கூட்டர்களின் விற்பனை 16 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது. ஹீரோ பிளஷர் 7வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்பில் இருந்து அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் பிளஷர் ஆகும்.
ஆனால், இந்த டாப்-10 லிஸ்ட்டில் 7வது இடத்திலேயே உள்ளது. 2022 நவம்பரில் 19,739 பிளஷர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் 22,752 பிளஷர் ஸ்கூட்டர்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இந்த லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் (16,702), சுஸுகி பர்க்மேன் (12,941) மற்றும் ஹீரோ டெஸ்டினி (12,756) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த டாப்-10 லிஸ்ட்டில் ஹோண்டா, டிவிஎஸ் மற்றும் சுஸுகி நிறுவனங்களின் ஆதிக்கமே உள்ளது. ஹீரோ மோட்டோகார்ப் கூட கடைசி இடங்களிலேயே உள்ளது. யமஹா நிறுவனத்தின் ஒரு ஸ்கூட்டர் கூட இந்த டாப்-10 லிஸ்ட்டில் இல்லை. அதன் இடத்தை தான் ஓலா எஸ்1 பிடித்துள்ளது. இன்னும் வரும் மாதங்களில் மேலும் சில எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இந்த டாப்-10 லிஸ்ட்டில் எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









