1 லட்ச ரூபாக்கு சிம்பிள் எனெர்ஜியின் புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்! ஓலாவ மட்டுமல்ல ஏத்தரையும் காலி பண்ண போகுது!
பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் சிம்பிள் எனெர்ஜி (Simple Energy) . இந்த நிறுவனம் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. மின்சார இருசக்கர வாகன சந்தையில் தற்போது போட்டி மிக மிக அதிகமாக நிலவுகின்றது.
இந்த போட்டியைச் சமாளிக்கும் பொருட்டே சிம்பிள் எனெர்ஜி நிறுவனம் புதிய மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. சிம்பிள் டாட் ஒன் (Simple Dot One) என்கிற பெயரில் இந்த புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும்.

இதற்கு அறிமுகமாக ரூ. 1 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விரைவில் இதன் டெலிவரி பணிகளைத் தொடங்க இருப்பதாக சிம்பிள் எனெர்ஜி தற்போது அறிவித்து இருக்கின்றது. அதேவேளையில், தற்போது அறிவித்து இருக்கும் விலையானது டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முன் கூட்டியே புக் செய்தவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இனி புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கான விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. புதிய வாடிக்கையாளர்களுக்கான புதிய விலை வருகின்ற ஜனவரி மாதத்திலேயே அறிவிக்கப்பட இருக்கின்றது. சிம்பிள் நிறுவனம் தன்னுடைய புகழ்பெற்ற ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை தயாரிக்க பயன்படுத்தும் அதே பிளாட்பாரத்தைப் பயன்படுத்தியே டாட் ஒன் மாடலையும் உற்பத்திச் செய்திருக்கின்றது.

இதனால்தான் இரண்டும் டிசைன் விஷயத்தில் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. ஆனால், மெக்கானிக்கல், பேட்டரி மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் இவற்றிற்கு இடையே லேசான மாற்றங்கள் தென்படுகின்றன. டாட் ஒன் ஒற்றை தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. அந்த வேரியண்டில் 3.7 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 151 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இத்துடன், 8.5 kW எலெக்ட்ரிக் மோட்டார் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் 72 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. இதுதவிர வெறும் 2.7 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டும் திறனையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் கொண்டிருக்கின்றன.
வீல்களைப் பொருத்த வரை 12 அங்குல வீல்களே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த வீல்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக சிபிஎஸ் மற்றும் டிஸ்க் ஆகிய இரு பிரேக் அம்சங்களும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
இந்த வாகனத்தின் இருக்கைக்கு அடியில் சுமார் 35 லிட்டர் அளவுள்ள பொருட்களை வைத்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 7.0 அங்குல தொடுதிரை இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த திரை, ஆன்ட்ராய்டு ஓஎஸ் வசதிக் கொண்டது.
இத்துடன், திருப்பத்திற்கு திருப்பம் வழித் தடம் பற்றிய தகவலை வழங்குதல், ப்ளூடூத் இணைப்பு, பேட்டரியின் ரேஞ்ச் திறன் மற்றும் ரேட்டரி சார்ஜ் சதவீதம் உள்ளிட்ட முக்கிய தகவல்களையும் அது வழங்கும். இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் அலர்டுகளையும் இந்த திரை வாயிலாக தெரிந்துக் கொள்ள முடியும்.
ஒட்டுமொத்தமாக ஆறு விதமான நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நம்மால் வாங்கிக் கொள்ள முடியும். நம்ம ரெட், ப்ரேசென் பிளாக், கிரேஸ் ஒயிட், அசுரே ப்ளூ ஆகியவற்றுடன் சேர்த்து லைட் எக்ஸ் மற்றும் ப்ரேசென் எக்ஸ் ஆகிய இரண்டு சிறப்பு நிற தேர்வுகளும் டாட் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு வரவேற்பு மிக பலமாக அதிகரித்துக் காணப்படுகின்றது. இந்த நிலையே நிறுவனங்களுக்கு இடையில் போட்டியை அதிகரிக்கச் செய்திருக்கின்றது. இதன் விளைவாகவே மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒவ்வொரு நிறுவனங்களாக இந்தியாவில் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. சமீபத்தில் ஏத்தர், ஓலா எலெக்ட்ரிக் ஆகியவை களமிறக்கின. இவர்களையே சிம்பிள் எனெர்ஜி தற்போது பின் தொடர்ந்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








