இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சிங்கிள் சார்ஜில் 300 கிமீ ஓடுமா! இந்தியாவை கலக்கப்போகும் தமிழக தயாரிப்பு
பல்வேறு மாற்றங்களுக்கு பிறகு சிம்பிள் எனர்ஜி நிறுவனம் ஒரு வழியாக தனது சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுக தேதியை அறிவித்துவிட்டது. இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
இந்தியாவில் ஸ்கூட்டர் செக்மெண்டில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மவுசு அதிகமாகி வருகிறது. குறிப்பாக ஓலா மற்றும் ஏத்தரின் வருகைக்குப் பிறகு ஏராளமான மக்கள் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வரிசையில் ஓலாவுக்கும் ஏத்தருக்கும் போட்டியாக சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தின் சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஸ்கூட்டர் அறிமுகத்தின் போதே சிறப்பான வரவேற்பு கிடைத்த நிலையில் இந்த ஸ்கூட்டர் தயாரிப்பில் கால தாமதம் ஏற்பட்டது. ஒரு வழியாகத் தமிழகத்தில் இந்நிறுவனம் ஆலையை அமைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியைத் துவங்கிவிட்டது. இந்நிலையில் இதற்கு முன்னர் பல்வேறு முறை ஸ்கூட்டரின் அறிமுக தேதி குறித்துத் திட்டமிடப்பட்டு அதை கேன்சல் ஆகி கடைசி ஒரு வழியாக தற்போது இறுதியாகத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 23ம் தேதி சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரான சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிடுகிறது. பெங்களூருவில் தனது அறிமுக நிகழ்ச்சியை நடத்துகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை பொருத்தவரை இந்தியாவிலேயே அதிக ரேஞ்ச் கொண்ட ஸ்கூட்டர்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் 2 ஆண்டுகளுக்கு முன்பே வடிவமைக்கப்பட்டாலும், இந்த ஸ்கூட்டர் தயாரித்து விற்பனைக்குக் கொண்டு வர இந்தியாவில் சில ஆட்டோமொபைல் ஸ்டாண்டர்டுகள் உள்ளது. 156 தர கட்டுப்பாடுகள், 3 பேட்டரி தர கட்டுப்பாடுகள் ஆகியவற்றைக் கடந்து தற்போது உற்பத்தி துவங்கி நடந்து வருகிறது. வரும் மே மாதம் முதல் விற்பனையும் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிம்பிள் எனர்ஜி ஒன் ஸ்கூட்டரை பொருத்தவரை சின்ன பேட்டரியில் 236 கி.மீ ரேஞ்ச் கொடுக்கூடியது. இதன் பெரிய பேட்டரி ஆப்ஷனில் 300 கி.மீ வரை ரேஞ்ச் தரும் என சொல்லப்படுகிறது. இது 0-40 கி.மீ வேகத்தை வெறும் 2.77 நொடியில் பிக்கப் செய்யும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டர் அதிகபட்சமாக 105 கி.மீ வேகத்தில் சீறிப் பாயும் அம்சம் கொண்டது.

இந்த சிம்பிள் ஒன் ஸ்கூட்டரின் பேட்டரியை பொருத்தவரை 4.8 கிலோ வாட் ஹவர் மற்றும் 8.5 கிலோ வாட் ஹவர் என இரண்டு பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரில் பிரேக்கை பொருத்தவரை இரண்டு வீலர்களிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. இது கம்பைன் பிரேக்கிங் சிஸ்டத்துடன் சேர்ந்து இயங்கும் திறன் கொண்டது. இந்த ஸ்கூட்டரில் சீட்டிற்குக் கீழே 30 லிட்டர் ஸ்டோரேஜ் வசதி இருக்கிறது.
இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 4 கலர்களில் விற்பனைக்கு வருகிறது. பிரேஸன் பிளாக், நம்ம ரெட், அசூர் ப்ளூ மற்றும் கிரேஸ் ஒயிட் ஆகிய கலர்களில் இது கிடைக்கிறது. இந்த ஸ்கூட்டரில் டச் ஸ்கிரின் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் வழங்கப்பட்டுள்ளது. இது பல்வேறு கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் இருக்கிறது. இந்த ஸ்கூட்டரின் விலையைப் பொருத்தவரை ஸ்டாண்டர்டு வேரியன்ட் ரூ1.10 லட்சம் என்ற விலையிலும் எக்ஸ்ட்ரா ரேஞ்ச் வேரியன்ட் ரூ1.45 லட்சம் என்ற விலையிலும் விற்பனைக்கு வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிம்பிள் என்ர்ஜி நிறுவனம் நீண்ட எதிர்பார்ப்புக்கிடையில் இந்த சிம்பிள் ஒன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்குக் கொண்டு வருகிறது. இந்த ஸ்கூட்டர் மார்கெட்டில் ஓலா மற்றும் ஏத்தர் ஆகிய நிறுவனங்களுக்கு கடும் போட்டியைக் கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த ஸ்கூட்டர் வந்ததும் அதன் ரிவியூவை காணக் காத்திருப்போம்.


Click it and Unblock the Notifications









