இந்த தீபாவளிக்கு இதில் ஒரு ஸ்கூட்டரை வாங்கலாம்!! எல்லாம் 125சிசி மாடல்ஸ்...
தீபாவளி (Diwali) பண்டிகை காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த சமயத்தில் புதிய வாகனங்களை வாங்கவே நம்மில் பெரும்பாலானோர் விரும்புவர். குறைந்தது ஸ்கூட்டரை ஆவது வாங்க விரும்புவோம். ஏனெனில் ஸ்கூட்டருக்கு பெரியதாக பணத்தை செலவழிக்க வேண்டியிருக்காது.
கடனுதவியை பெறாமல் கூட பலரால் புதியதாக ஒரு ஸ்கூட்டரை வாங்கியிருக்க முடியும். ஆனால், இதில் பிரச்சனை என்னவென்றால், எந்த மாதிரியான ஸ்கூட்டரை, எந்த அளவிலான என்ஜின் உடன் வாங்குவது என்பது பலருக்கு தெரியவில்லை. அத்தகையவர்களுக்காக, இந்த தீபாவளிக்கு 125சிசி-இல் வாங்க ஏற்ற 5 ஸ்கூட்டர் மாடல்களை பற்றி இனி பார்க்கலாம்.

டிவிஎஸ் என்டார்க் 125: இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டும் சிறந்த ஸ்கூட்டர்கள் என்று எடுத்து பார்த்தால் அதில், நிச்சயமாக என்டார்க் 125-இன் பெயரும் இருக்கும். ஸ்டைலில் மட்டுமின்றி, செயல்படுதிறனிலும் இந்த டிவிஎஸ் ஸ்கூட்டர் சிறப்பானது. தமிழகத்தில் ஓசூரில் உற்பத்தி செய்யப்படும் இந்த ஸ்கூட்டரில் 124.8சிசி, 3-வால்வு, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

சுஸுகி அவெனிஸ் 125: டிவிஎஸ் எண்டார்க்கை போல் ஸ்டைலான தோற்றம் கொண்ட சுஸுகி ஸ்கூட்டர் அவெனிஸ் 125 ஆகும். எண்டார்க்கை விட மாடர்னானது அவெனிஸ் 125 ஆகும். ஏனெனில், சுஸுகி நிறுவனத்தில் இருந்து இந்த ஸ்கூட்டர் கடந்த 2022ஆம் ஆண்டில் தான் அறிமுகப்படுத்தப்பட்டது. அவெனிஸ் 125 ஸ்கூட்டரில் 124.3சிசி, ஏர்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஹோண்டா கிரேஸியா 125: ஹோண்டா நிறுவனம் ஆக்டிவா ஸ்கூட்டருக்கு தான் பிரபலமானது. ஆனால், அதேநேரம் கிரேஸியா 125 போன்ற ஸ்கூட்டர்களும் ஹோண்டாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படுகின்றன. கிரேஸியாவில் பொருத்தப்படும் 124சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 8.14 பிஎச்பி மற்றும் 5,000 ஆர்பிஎம்-இல் 10.3 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

யமஹா ரே இசட்.ஆர் 125: இந்தியாவில் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டத்துடன் விற்பனை செய்யப்படும் ஒரே 125சிசி ஸ்கூட்டர். இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படும் 125சிசி, ஏர்-கூல்டு என்ஜின் உடன் சைலண்ட் ஸ்டார்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோ ஸ்டார்ட்/ ஸ்டாப் செயல்பாடு வழங்கப்படுகிறது. இந்த அட்வான்ஸ்டு தொழிற்நுட்பங்கள் ஸ்கூட்டரின் எரிபொருள் திறனை மேம்படுத்தும் விதமாக வழங்கப்படுகின்றன.

ஏப்ரிலியா எஸ்.ஆர்125: இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலையுயர்ந்த 125சிசி ஸ்கூட்டர். இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.23 லட்சம். இது மேலே கூறப்பட்ட 125சிசி ஸ்கூட்டர்களை காட்டிலும் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையில் அதிகமாகும். இவ்வளவு அதிகமான விலைக்கு முக்கிய காரணம், இந்த ஏப்ரிலியா ஸ்கூட்டரில் வழங்கப்படும் விரைப்பான சஸ்பென்ஷன் செட்அப் ஆகும். இந்த ஸ்கூட்டரில் 9.97 பிஎச்பி மற்றும் 10.33 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஸ்கூட்டர்களை 125சிசி என்ஜின் உடன் வாங்குவதே நல்லது என சொல்வோம். அத்தகைய ஸ்கூட்டர்களை தீபாவளி சமயத்தில் வாங்குவது உங்களை பொருளாதார ரீதியாகவும் பாதுகாக்கும். அதாவது, இந்த சமயத்தில் வாங்குவதன் மூலம் குறிப்பிட்ட தொகையை சேமிக்க முடியும். ஏனெனில், தீபாவளியை டார்க்கெட் செய்து சலுகைகளும், தள்ளுபடிகளும் ஒவ்வொரு வருடமும் அறிவிக்கப்படுகின்றன.


Click it and Unblock the Notifications









