ஆக்டிவா, டியோ, ஜூபிடர்னு எதா இருந்தாலும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா மாத்திடலாம்.. இந்திய நிறுவனத்தின் அசத்தலான மூவ்
பெட்ரோலில் ஓடும் ஸ்கூட்டரை இனி சுலபமாக மின்சாரத்தில் ஓடும் வாகனமாக மாற்றிக் கொள்ள முடியும். இந்த சூப்பரான அறிவிப்பையே இந்தியாவை மையமாகக் கொண்டு இயங்கும் ஓர் நிறுவனம் வெளியிட்டு இருக்கின்றது. எந்த நிறுவனம் அது? எந்தெந்த மாதிரியான நிறுவனங்களின் தயாரிப்புகளை எல்லாம் அது மின்சார வாகனமாக மாற்ற இருக்கின்றது? என்பது பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவில் இப்போதும் மின்சார வாகனங்கள் சற்று அதிக விலைக் கொண்டதாக இருப்பதை நம்மால் உணர முடிகின்றது. ஒரு தரமான எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்க வேண்டும் எனில் ஒரு லட்சம் ரூபாய் அல்லது அதற்கும் மேல் செலவழிக்க வேண்டும் என்கிற நிலையே தற்போது தென்படுகின்றது.

இதனாலேயே ஒரு சிலருக்கு மின்சார இருசக்கர வாகனங்கள் எட்டாக் கனியாக மாறி இருக்கின்றன. குறிப்பாக, நடுத்தர மற்றும் வறுமை கோட்டிற்குள் இருக்கும் நபர்களுக்கு மின்சார வாகனங்கள் கனவு வாகனமாகவே மாறிவிட்டன. இதற்கு பின்னால் அதிக விலை மட்டுமே முக்கிய காரணமாக இருக்கின்றது.
இந்த மாதிரியான சூழலிலேயே ஓர் நிறுவனம் பழைய ஸ்கூட்டர்களை மின்சாரத்தால் ஓடும் வாகனமாக மாற்றி தரும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனைவரும் மின்சார இருசக்கர வாகனத்தை பயன்படுத்த வேண்டும் என்கிற ஒற்றைக் கருத்தை மையமாகக் கொண்டே இந்த பணியை கையில் எடுத்து இருப்பதாக அந்த நிறுவனம் கருத்து தெரிவித்து இருக்கின்றது.

ஸ்டார்யா மொபிலிட்டி எனும் நிறுவனமே வழக்கமான பெட்ரோலில் ஓடக் கூடிய இருசக்கர வாகனங்களை மின்சாரத்தில் ஓடும் வாகனமாக மாற்றி தர இருக்கின்றது. சமீபத்தில் இந்த பணியில் ஈடுபடுவதற்காக நிதியை திரட்டும் பணியில் இந்த நிறுவனம் களமிறங்கியது. இதன் அடிப்படையில் சுமார் 2 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (ரூ. 16.4 கோடி) நிதி திரட்டப்பட்டது.
இந்த நிலையிலேயே ஸ்டார்யா நிறுவனம் பெட்ரோல் டூ-வீலர்களை மின்சார வாகனமாக மாற்றும் பணியில் ஈடுபட இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. நிறுவனம் தற்போது ஸ்கூட்டர்களையே மின்சார வாகனமாக மாற்றி தர இருக்கின்றது. ஹோண்டா ஆக்டிவா, டியோ, டிவிஎஸ் ஜூபிடர், ஹீரோ பிளஷ்ஷர் என எந்த பிராண்டின் ஸ்கூட்டராக இருந்தாலும் தங்கள் நிறுவனம் மின்சார வாகனமாக மாற்றி தரும் என தெரிவித்து இருக்கின்றது.
ஆனால், இப்போது முதற்கட்டமாக ஹோண்டா ஆக்டிவாவையே மின்சார வாகனமாக மாற்றுவதற்கான அப்ரூவலை ஸ்டார்யா மொபிலிட்டி பெற்றிருக்கின்றது. விரைவில் மற்ற பிராண்ட் ஸ்கூட்டர்களையும் அது மின்சார வாகனமாக மாற்றும் பணிகளை தொடங்க இருக்கின்றது. ஆனால், அந்த பணிகள் தொடங்க இன்னும் 12 மாதங்கள் முதல் 15 மாதங்கள் வரை எடுத்துக் கொள்ளும் என தெரிகின்றது.
ஆகையால், இப்போதைக்கு ஆக்டிவா பயன்பாட்டாளர்களால் மட்டுமே மின்சாரத்தில் ஓடும் வாகனமாக தங்களின் வாகனத்தை மாற்றிக் கொள்ள முடியும். வாடிக்கையாளர்கள் தங்களின் வாகனங்களை மின்சார வாகனமாக மாற்றிக் கொள்ள இரு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. முதல் ஒன்று, ஒட்டுமொத்த கட்டணத்தையும் முழுமையாக செலுத்துதல்.
இவ்வாறு செய்வதன் வாயிலாக மின்சார வாகனமாக மாற்றப்படும் வாகனத்தின் முழு உரிமையாளராக அந்த நபரால் மாறிவிட முடியும். மாற்றொரு ஆப்ஷன், பேட்டரி மற்றும் சார்ஜருக்கு ஆகக் கூடிய 40 சதவீதம் செலவை மட்டும் செலுத்தினால் போதும். முதல் 5 லட்சம் வாடிக்கையாளர்களால் மட்டுமே இந்த வசதியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
இது சப்ஸ்கிரிப்ஷன் பிளானைப் போன்ற திட்டம் ஆகும். இதை தேர்வு செய்யும் வாடிக்கையாளர், அந்த வாகனத்தை இயக்கும்போது மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும். அதுவும், ஒரு கிமீட்டருக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணமாக வசூலிக்கப்பட இருக்கின்றது. முதல் 50 ஆயிரம் கிமீட்டர்களுக்கு மட்டுமே இந்த கட்டணம் பொருந்தும்.
செல்போனுக்கு ரீசார்ஜ் செய்வது போல் இதையும் ரீசார்ஜ் செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும். தோராயமாக 50 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் 50 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த வசதியை நடுத்தர மக்களாலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
உள்-நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட 6-6.5 கிலோவாட் பவரை வெளியேற்றக் கூடிய மின்சார மோட்டாரையே பெட்ரோல் டூ-வீலர்களை எலெக்ட்ரிக் டூ-வீலர்களாக மாற்ற ஸ்டார்யா பயன்படுத்த இருக்கின்றது. இதனால் மணிக்கு 85 கிமீ வேகத்தில் இயங்க முடியும். மேலும், இதனால் வெறும் 3.6 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை தொட்டுவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதுதவிர, இந்த மோட்டார் 17 டிகிரி உயரமான சாலையைக் கூட அசால்ட் செய்துவிடும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. எனவே, பெட்ரோல் மோட்டாரில் இயங்கும் கிடைக்கக் கூடிய அதே சூப்பரான அனுபவம் மின்சார வாகனமாக மாற்றிய பின்னரும் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என தெரிகின்றது.
இதுதவிர, சுலபமான பயன்பாட்டை வழங்கக் கூடிய ஓர் செல்போன் செயலியையும் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றது. இந்த செயலி வாயிலாக இருசக்கர வாகனம் பற்றிய அனைத்து முக்கிய தகவல்களையும் தெரிந்துக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. குறிப்பாக, பயண விபரம், ரேஞ்ஜ் திறன் என அனைத்து தகவல்களையும் அறிந்துக் கொள்ள முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆனால், அதிக விலைக் காரணமாக ஒரு சிலரால் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்க முடிவதில்லை. இந்த நிலையிலேயே கன்வெர்ஷன் கிட்டை ஸ்டார்யா அறிமுகம் செய்திருக்கின்றது. ஆனால், இதன் விலையும் சற்று அதிகமாக இருப்பதாக கருத்துக்கள் எழும்பிய வண்ணம் இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









