ஹோண்டாவுக்கு மட்டும் எங்க இருந்துதான் இப்படிலாம் ஐடியா வருதோ! டிரஸ் கொண்டுபோகும் பெட்டி வடிவில் இ-ஸ்கூட்டர்!
உலகின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக ஹோண்டா (Honda) இருக்கின்றது. இந்த நிறுவனமே, "இதற்கு மட்டும் எங்க இருந்துதான் இப்படிலாம் ஐடியா வருதோ" என நினைக்கச் செய்யும் அளவிற்கு முற்றிலும் விநோதமான தோற்றம் கொண்ட எலெக்ட்ரிக் வாகனம் ஒன்றை வடிவமைத்து, அதனை அது தற்போது வெளியீடும் செய்து இருக்கின்றது.
வெகு விரைவில் உலக நாடுகளில் அந்த வாகனத்தை ஹோண்டா விற்பனைக்கும் கொண்டு வர இருக்கின்றது. மோட்டோ காம்பேக்டோ (Moto compacto) எனும் வாகனத்தையே நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. வெளியூர் செல்லும்போது துணி, மணிகளை எடுத்துச் செல்ல நாம் பயன்படுத்தும் பெட்டி போன்ற வடிவில் இந்த வாகனத்தை ஹோண்டா வடிவமைத்திருக்கின்றது.

இந்த வாகனத்தை பயன்பாட்டிற்கு பின்னர் நம்மால் மடித்து ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. கைப் பிடி (ஹேண்டில் பார்), இருக்கை, வீல் மற்றும் கால் வைக்கும் ரப்பர் கொண்ட கம்பி என அனைத்தையும் மடித்துக் கொள்ள முடியும்.
அவ்வாறு, இவை அனைத்தையும் மடித்து வைக்கும் பட்சத்தில் அது ஓர் சூட் கேஸைப் போலவே தெரியும். மேலும் இதன் ஒட்டுமொத்த எடையே 18 கிலோ கிராம் மட்டுமே ஆகும். ஆகையால், இதை கையாள்வது என்பது பெரிய அளவில் கஷ்டமாக இருக்காது. மிக சுலபமாகவே இருக்கும்.

தினசரி பயன்பாட்டிற்கு, குறிப்பாக, அலுவலகங்களுக்கு சென்று வர இந்த வாகனம் பெரும் உதவியாக இருக்கும். வீட்டில் இருந்து ரயில் நிலையம் அல்லது பேருந்து நிறுத்தம் வரை இந்த வாகனத்தில் சென்றுவிட்டு அதற்கு பின்னர் ஹோண்டா மோட்டோ காம்பேக்ட்டை சூட் கேஸைபோல் மடித்து வைத்துக் கொண்டு அதனுடன் அப்படியே பஸ்ஸிலோ அல்லது ரயிலிலோ டிராவல் செய்துக் கொள்ள முடியும்.
இது சூட்கேஸ்போல் இருப்பதால் பொது போக்குவரத்தில் எந்த தடையும் இன்றி பயணித்துக் கொள்ள முடியும். அதேவேளையில், இந்த வாகனத்தை நொடிப் பொழுதில் வாகன நிலையில் இருந்து சூட் கேஸாகவும், சூட் கேஸில் இருந்து வாகன நிலைக்கும் உயர்த்திக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஹோண்டா நிறுவனம் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 490வாட், பெர்மனன்ட் மேக்னட், டைரக்ட் டிரைவ் வகை மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இது அதிகபட்சமாக 16 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. அத்துடன், மணிக்கு 24 கிமீ வேகத்தில் இதில் பயணிக்க முடியும்.
இதுதவிர, ஓர் முழு சார்ஜில் 19 கிலோ மீட்டர் வரை பயணித்துக் கொள்ள முடியும். முழுக்க முழுக்க நகர்ப்புற மற்றும் அருகாமையில் இருக்கும் அலுவலகத்திற்கும் பயணிக்க பயன்படுத்தும் நோக்கில் மட்டுமே ஹோண்டா இந்த மோட்டோ காம்பேக்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை உருவாக்கி இருக்கின்றது.

இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை 110V சார்ஜிங் பாயிண்ட் வாயிலாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் அது முழுமையாக சார்ஜாக 3.5 மணி நேரம் வரை எடுத்துக் கொள்ளும். இந்த வாகனத்தை ஹோண்டா நிறுவனம் உலக நாடுகள் முழுவதும் விற்பனைக்குக் கொண்டு வரும் பிளானில் இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், எந்தெந்த நாடுகளில் அது விற்பனைக்குக் கிடைக்கும் என்பது தெரியவில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அது விற்பனைக்கு வருமா என்பது துள்ளியமாக தெரியவில்லை. இருப்பினும், இப்போது இல்லை என்றாலும், வரும் நாட்களில் அது விற்பனைக்குக் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்ட வருகின்றது. ஆகையால், ஹோண்டா மோட்டோ காம்பேக்டோ விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதன் வடிவமைப்பு இந்தியாவிற்கு ஏற்றது அல்ல என்கிற கருத்தும் பரவலாகக் கூறப்பட்டு வருகின்றது.


Click it and Unblock the Notifications









