16 வருடங்களில்... சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் இமாலய சாதனை!! ஃபேக்டரியில் புரோடக்ஷன் தாறுமாறா எகிறுது!
இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்றாக சுஸுகி ஆக்ஸஸ் விளங்குகிறது. இந்த நிலையில், ஆக்ஸஸ் (Access) ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் புதிய சாதனையை படைத்துள்ளது. இதுகுறித்தும், சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் 125சிசி என்ஜின் உடன் அறிமுகப்படுத்தப்பட்ட முதல் ஸ்கூட்டர் சுஸுகி ஆக்ஸஸ் ஆகும். இதனை பலர் மறந்திருந்து போய் இருப்பீர்கள். ஏனெனில் ஆக்ஸஸ் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு சுமார் 16 வருடங்கள் உருண்டோடி விட்டது. இத்தனை வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் சுஸுகி புதிய மைல்கல்லை கடந்துள்ளது.

அது வேறொன்றும் இல்லை, ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் உற்பத்தியில் 50 இலட்சம் என்ற இமாலய எண்ணிக்கையை சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனம் கடந்திருப்பது ஆகும். 16 வருடங்களாக இந்தியாவில் விற்பனையில் இருந்தாலும், 50 இலட்ச ஸ்கூட்டர்கள் உற்பத்தி என்பது உண்மையில் ஆச்சரியமளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.
50 இலட்சமாவது ஆக்ஸஸ் ஸ்கூட்டர் ஹரியானா மாநிலத்தின் குருக்ராமில் உள்ள சுஸுகி நிறுவனத்தின் கேர்கி தவுலா தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றப் பட்டுள்ளது. சுஸுகி ஆக்ஸஸ் ஸ்கூட்டர் சமீபத்தில் ஒபிடி2-க்கு இணக்கமானதாக மற்றும் இ20 எரிபொருளை ஏற்கக்கூடியதாக அப்டேட் செய்யப்பட்டது. இதனால், மற்ற இருசக்கர வாகனங்களை போல், சுஸுகி ஆக்ஸஸும் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கும்.

சுஸுகி ஆக்ஸஸில் 125சிசி 4-ஸ்ட்ரோக், சிங்கிள்-சிலிண்டர், ஏர்-கூல்டு என்ஜின் ஃப்யுல் இன்ஜெக்ஷன் சிஸ்டத்துடன் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 6,750 ஆர்பிஎம்-இல் 8.7 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 10 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. டிசைனை பொறுத்தவரையில், ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரில் எல்இடி ஹெட்லேம்ப் உடன் மாடர்ன் தோற்றத்திற்காக க்ரோம் ஹைலைட்கள் கொடுக்கப்படுகின்றன.
எல்இடி விளக்குகள் இரவு மற்றும் மோசமான வானிலையின் போதும் பிரகாசமான ஒளியை வழங்கக்கூடியவைகளாக உள்ளன. பெட்ரோல் நிரப்பும் பகுதி இந்த சுஸுகி ஸ்கூட்டரில் வெளிப்பக்கத்தில் வழங்கப்படுகிறது. அதாவது பெட்ரோலை நிரப்ப ஸ்கூட்டரின் இருக்கையை தூக்க வேண்டிய தேவை இல்லை. அத்துடன், சைடு ஸ்டாண்ட் இண்டர்லாக் வசதியும் இந்த ஸ்கூட்டரில் வழங்கப்படுகிறது.

முக்கிய தொழிற்நுட்ப அம்சமாக ப்ளூடூத்தை ஏற்கக்கூடிய டிஜிட்டல் கன்சோல் ஆக்ஸஸில் கொடுக்கப்படுகிறது. இதன் மூலமாக டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், மிஸ்டு கால் அலார்ட், காலர் ஐடி, மொபைல் அழைப்பு, குறுஞ்செய்தி மற்றும் வாட்ஸ்அப் நோட்டிஃபிகேஷனை பெறலாம். அத்துடன், அதிவேகமாக சென்றால் எச்சரிக்கையும் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் திரையில் வெளிவரும். இடிஏ அப்டேட்கள் மற்றும் போன் பேட்டரி லெவல் டிஸ்பிளே உள்ளிட்ட விபரங்களையும் இன்ஸ்ட்ரூமெண்ட் திரை வழியாகவே பெறலாம்.
சுஸுகி ஆக்ஸஸின் மற்ற சிறப்பம்சங்கள் என்று பார்த்தால், முன்பக்க ஸ்டோரேஜ் பகுதி, யுஎஸ்பி சாக்கெட், என்ஜின் ஸ்டார்ட்/ஸ்டாப் ஸ்விட்ச், இரட்டை லக்கேஜ் கொக்கிகள் மற்றும் 21.8 லிட்டர் அண்டர்-சீட் ஸ்டோரேஜ் உள்ளிட்டவற்றை சொல்லலாம். சுஸுகி ஆக்ஸஸ் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.81 ஆயிரத்தில் இருந்து ரூ.91 ஆயிரம் வரையில் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: 16 வருடங்களாக விற்பனையில் இருக்கும் ஸ்கூட்டர் 50 இலட்ச யூனிட்கள் உற்பத்தியை கடப்பது ஒன்றும் பெரிய விஷயம் இல்லையே என உங்களுக்கு தோன்றலாம். ஆனால், இத்தனை வருடங்களில் எத்தனை புதிய, புதிய ஸ்கூட்டர்களை சமாளித்து இத்தகைய மைல்கல்லை ஆக்ஸஸ் உற்பத்தியில் கடந்திருக்கும் கஷ்டம் சுஸுகி மோட்டார்சைக்கிள் நிறுவனத்திற்கே தெரியும்.


Click it and Unblock the Notifications









