ஆக்டிவா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் போட்டியை தாக்குப்பிடிக்குறது கஷ்டம் - சுஸுகியின் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!
உலகளவில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படும் சுஸுகி பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் படங்கள் முதல்முறையாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. மேலும் படங்களுடன் வெளியிடப்பட்டுள்ள ஸ்கூட்டரை பற்றிய விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் வளர்ச்சி பல்வேறு புதிய புதிய நிறுவனங்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளது. குறிப்பாக, உலகின் மிக பெரும் ஆட்டோமொபைல் சந்தைகளுள் ஒன்றான நமது இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் மட்டுமே ஏகப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் தங்களை ஸ்டார்ட்-அப் நிறுவனங்களாக அறிமுகப்படுத்தி கொண்டுள்ளன. ஏத்தர் எனர்ஜி, ஒகினவா, ஆம்பியர், ஓலா போன்றவை அத்தகைய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் குறிப்பிடத்தக்கவை.

அதேநேரம் சந்தையில் முன்னணி 2-வீலர் பிராண்ட்களும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை களமிறக்கும் திட்டத்தில் உள்ளன. இந்தியாவின் நம்பர்.1 இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் முற்றிலும் புதிய விடா என்ற பிராண்ட்டை அறிமுகம் செய்து, அதன் வழியாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பஜாஜ் ஆட்டோ மற்றும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனங்கள் கடந்த 2020இன் துவக்கத்தில் தங்களது எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்து விற்பனை செய்து வருகின்றன.
ஜப்பான் பிராண்ட்களான ஹோண்டா மற்றும் யமஹா எப்போது இந்தியாவில் தங்களது முதல் எலக்ட்ரிக் வாகனத்தை அறிமுகம் செய்ய உள்ளன என்பது தெரியவில்லை. இதில் ஹோண்டா இந்தியாவில் தனது பிரபலமான ஆக்டிவா ஸ்கூட்டரில் எலக்ட்ரிக் வெர்சனை அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோன்று, மற்றொரு ஜப்பான் 2-வீலர் பிராண்ட் சுஸுகி மோட்டார்சைக்கிளும் தனது மேக்ஸி-ஸ்கூட்டரான பர்க்மேனை எலக்ட்ரிக் மோட்டார் & பேட்டரி உடன் களமிறக்க தயாராகி வருகிறது.
இந்த நிலையில்தான் தற்போது இ-பர்க்மேனின் படங்களும், ஸ்கூட்டரை பற்றிய விபரங்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டு வரும் சுஸுகி இ-பர்க்மேன் ஸ்கூட்டர் ஜப்பானில் அட்வான்ஸ்டு சோதனை கட்டத்திற்குள் நுழைந்துள்ளது. ஜப்பானில் எலக்ட்ரிக் 2-சக்கர வாகன விற்பனையை அதிகரிக்க பேட்டரி சேரிங் முறை ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு சுஸுகி இ-பர்க்மேனின் பங்கு அந்த நாட்டில் முக்கியமானதாக விளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இதற்காக ஜப்பான் நாட்டில் கசாகோ என்ற டோக்கியாவை சேர்ந்த பேட்டரி சேரிங் நிறுவனத்துடன் இணைந்து சுஸுகி செயல்பட்டு வருவதாக அங்கிருந்துவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கூட்டணியின் கீழ், பேட்டரி சேரிங் சேவையை வருகிற ஏப்ரல் - ஜூன் மாதம் முடியும் வரையில் 3 மாத காலத்திற்கு நிஜ உலகில் சோதனை செய்ய சுஸுகி முடிவெடுத்துள்ளது.
இதன்படி, மொத்தம் 8 பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் தயாரிக்கப்பட்டு, அவற்றில் கசாகோ நிறுவனத்தின் பேட்டரியை பொருத்தி சோதித்து பார்க்க உள்ளனர். இந்த சோதனையின் கிடைக்கப்பெறும் தகவல்களை கொண்டே உலகிற்கான இ-பர்க்மேன் ஸ்கூட்டரை வடிவமைக்க சுஸுகி திட்டமிட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள விபரங்களின்படி பார்க்கும்போது, சுஸுகி பர்க்மேன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் நீளம் 1825மிமீ, அகலம் 765மிமீ மற்றும் உயரம் 1140மிமீ ஆகும்.
தரையில் இருந்து ஸ்கூட்டரின் இருக்கையின் உயரமானது 780மிமீ உயரத்தில் உள்ளது. ஸ்கூட்டரின் மொத்த கெர்ப் எடை, அதாவது பெட்ரோல் இன்றி 147 கிலோ ஆகும். மாறுதிசை மின்னோட்ட எலக்ட்ரிக் மோட்டார் உடன் இ-பர்க்மேன் ஸ்கூட்டரை சுஸுகி உருவாக்க உள்ளது. இதில் லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்படும். இவற்றின் மூலம் கிடைக்கும் அதிகப்பட்ச இயக்க ஆற்றல் 4 கிலோவாட்ஸ் மற்றும் 18 என்எம் டார்க் திறன் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
சுஸுகி நிறுவனமும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் இறங்குவது நல்ல விஷயம் தான். இருப்பினும் முதலாவதாக சற்று விலைமிக்க பர்க்மேன் மேக்ஸி ஸ்கூட்டரில் எலக்ட்ரிக் வெர்சனை கொண்டுவருவது நம் நாட்டு சந்தையை பொறுத்தவரையில் சரியான முடிவு போல் தெரியவில்லை. சுஸுகி ஆக்ஸஸ் இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்று, இதில் எலக்ட்ரிக் வெர்சனை கொண்டுவந்தால், விரைவாகவே நாடு முழுவதும் பிரபலமாகிவிடும்.


Click it and Unblock the Notifications








