சுஸுகி ஜிக்ஸெரை இனி இந்த என்ஜின் உடன் வாங்கிட வேண்டியதுதான்!! ரன்னிங் செலவும் குறைவா இருக்கும்...
பெட்ரோலின் பயன்பாட்டை குறைக்கும் முயற்சியாக பெட்ரோலில் எத்தனாலை கலந்து உபயோகிக்கும் விதமான வாகனங்களை அறிமுகம் செய்யுங்கள் என்று கடந்த சில வருடங்களாகவே மத்திய அரசு ஆட்டோமொபைல் நிறுவனங்களை கேட்டு கொண்டு வருகிறது. இதன் எதிரொலியாக கிரேட்டர் நொய்டாவில் நடைப்பெற்றுவரும் ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு விதமான ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வாகனங்கள் வெளியீடு செய்யப்பட்டுள்ளன.
அவற்றுள் ஃப்ளக்ஸ்-ஃப்யுல் இருசக்கர வாகனங்களும் அடங்குகின்றன. இந்த ஃப்ளக்ஸ்-ஃப்யுல் 2-வீலர்களை ஒவ்வொன்றாக நமது செய்தித்தளத்தில் பார்த்துவரும் நிலையில், இந்த செய்தியில் சுஸுகி மோட்டார்சைக்கிள் சார்பில் ஆட்டோ எக்ஸ்போவில் பார்வைக்கு நிறுத்தப்பட்டுள்ள ஜிக்ஸெர் 250 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் மோட்டார்சைக்கிளை பற்றி இந்த செய்தியில் பார்க்கலாம்.

பிரபலமான ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்த ஆட்டோ எக்ஸ்போவில் கவர்ச்சிக்கரமாக பெரியதாக எந்த தயாரிப்பையும் காட்சிக்கு நிறுத்தவில்லை. சுஸுகியின் 250சிசி பைக் மாடலான ஜிக்ஸெர் 250 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் வெர்சனில் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், பைக்கிற்கு புதிய வெள்ளை-இளம் பச்சை கலந்த பெயிண்ட் தேர்வும் வழங்கப்பட்டுள்ளது.
சுஸுகியின் புதிய ஜிக்ஸெர் 250 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக் ஆனது இ20 -இல் இருந்து இ85 வரையிலான எத்தனால் கலந்த பெட்ரோலில் இயங்கக்கூடியது. எத்தனால் பொதுவாக 'E' எழுத்தினால் குறிக்கப்படுகிறது. அதன்பின் வரும் எண்கள் பெட்ரோலில் எத்தனாலின் சதவீதத்தை குறிப்பவை. உதாரணத்திற்கு இ20 என்றால் 20% எத்தனாலும், 80% பெட்ரோலும் கலந்த கலவையாகும். அதுவே இ85 என்றால் சுமார் 85% எத்தனாலும் வெறும் 15% மட்டுமே பெட்ரோல் கலந்த கலவை.

சுஸுகி ஜிக்ஸெர் 250 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக் ஆனது இ85 வரையிலான எரிபொருளை ஏற்கக்கூடியது என ஏற்கனவே கூறிவிட்டோம் அல்லவா. ஆனால் யமஹா இதே ஆட்டோ எக்ஸ்போவில் வெளியீடு செய்துள்ள எஃப்.இசட்-15 மோட்டார்சைக்கிள் ஆனது முற்றிலுமாக பெட்ரோல் கலக்காத 100% எத்தனாலில் இயங்கக்கூடியது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. சுஸுகி ஜிக்ஸெர் 250 ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக்கில் என்ஜின் பல்வேறு வகையான எத்தனாலை ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது.
இந்த பைக்கின் மாடிஃபைடு 249சிசி, சிங்கிள்-சிலிண்டர், ஆயில்-கூல்டு என்ஜின் ஆனது அதிகப்பட்சமாக 9,300 ஆர்பிஎம்-இல் 26.14 பிஎச்பி மற்றும் 7,300 ஆர்பிஎம்-இல் 22.2 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஜிக்ஸெர் 250 பைக்கின் நீளம் 2,010மிமீ, அகலம் 805மிமீ, உயரம் 1,035மிமீ ஆகும்.

வீல்பேஸ் எனப்படும் முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தூரம் ஆனது 1,340மிமீ ஆக உள்ளது. தரையில் இருந்து பைக்கின் அடிப்பகுதி 165மிமீ உயரத்திலும், பைக்கின் கெர்ப் எடை 156 கிலோ என்ற அளவிலும் உள்ளன. மாடிஃபை செய்யப்பட்ட என்ஜினை தவிர்த்து பைக்கின் மற்ற இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் 41மிமீ கன்வென்ஷ்னல் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோ ஷாக்கும் அப்படியே தொடரப்பட்டுள்ளன.
பிரேக்கிங் பணியை இரு சக்கரங்களிலும் சிங்கிள் டிஸ்க் பிரேக்குகளே கவனித்து கொள்கின்றன. ஆனால் முன்பக்க சிங்கிள் டிஸ்க் பிரேக் ஆனது 300மிமீ-லும், பின்பக்க சிங்கிள் டிஸ்க் பிரேக் ஆனது 220மிமீ-லும் பொருத்தப்படுகின்றன. அத்துடன் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்-உம் பயணிகளின் கூடுதல் பாதுகாப்பிற்காக வழங்கப்படுகின்றன. பைக்கின் என்ஜின் அதிகப்பட்சமாக வெளிப்படுத்தும் ஆற்றல் கிடைக்க பெற்றுள்ளதே தவிர்த்து இந்த ஃப்ளக்ஸ்-ஃப்யுல் பைக்கின் மைலேஜ் விபரங்கள் கிடைக்க பெறவில்லை.


Click it and Unblock the Notifications








