ஹைட்ரஜனில் ஓடும் பர்க்மேன் ஸ்கூட்டரை தயாரிக்கும் சுஸுகி! சிஎன்ஜி-லாம் இதுக்கு முன்னாடி ஒன்னுமே இல்ல!
வாகன உற்பத்தி நிறுவனங்கள் அனைத்தும் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிக்கும் முயற்சியில் மிக மும்பரமாக ஈடுபட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்த மாதிரியான சூழ்நிலையில், முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான சுஸுகி, ஹைட்ரஜனில் இயங்கும் இருசக்கர வாகனத்தைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
சுஸுகி (Suzuki) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் சூப்பரான ஸ்கூட்டர் மாடல்களில் பர்க்மேன் (Burgman)-ம் ஒன்றாகும். இது ஓர் மேக்ஸி ரக ஸ்கூட்டர் ஆகும். கொழுகொழு பாயைப் போல உருவம் கொண்டிருக்கும் இந்த ஸ்கூட்டருக்கே சிறப்பு சேர்க்கும் பணியில் தயாரிப்பு நிறுவனமான சுஸுகி தீவிரமாகக் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனம் இந்த வாகனத்தை ஹைட்ரஜனில் இயங்கும் வாகனமாகவே உருவாக்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதையே நிலவரப்படி பெட்ரோலில் இயங்கும் எஞ்ஜின் கொண்ட வாகனமாக மட்டுமே பர்க்மேனை சுஸுகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டு இருக்கின்றது. இதனுடன் சேர்த்து இன்னும் சில புதிய அவதாரங்களையும் இந்த ஸ்கூட்டரில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதே நிறுவனத்தின் நோக்கம் ஆகும்.
மிக முக்கியமாக மின்சார வெர்ஷனில் பர்க்மேனை விற்பனைக்குக் கொண்டு வருவதே சுஸுகியின் மிகப் பெரிய நோக்கமாக இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சுஸுகி பர்க்மேன் எலெக்ட்ரிக் வெர்ஷனின் ஸ்பை படங்கள் கடந்த காலங்களில் வெளியாகின. ஆகையால், பலரின் எதிர்பார்ப்பில் இந்த வாகனம் முக்கிய இடத்தை பிடித்தது.
இந்த மாதிரியான சூழலிலேயே சுஸுகி நிறுவனம் பர்க்மேனை மின்சார அவதாரத்தில் மட்டுமல்ல ஹைட்ரஜனில் ஓடும் வாகனமாகவும் தயார் செய்துக் கொண்டிருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த வாகனம் விரைவில் நடைபெற இருக்கும் ஜப்பான் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த மாதம் இறுதி அல்லது நவம்பர் மாத தொடக்கத்தில் ஹைட்ரஜனில் ஓடும் பர்க்மேன் காட்சிப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த தகவல்களுக்கு கூடுதல் வலுசேர்க்கும் விதமாக சுஸுகி ஜப்பான், ஹைட்ரஜன் பர்க்மேனின் படங்களை வெளியீடு செய்திருக்கின்றது. ஆனால், இதன் உற்பத்தி பணிகள் எப்போது தொடங்கப்படும் என்பது தெரியவில்லை.
தற்போது விற்பனையில் இருக்கும் பர்க்மேனைப் போலவே மிகவும் கட்டுமஸ்தான பாடி பேனல்களால் அந்த வாகனம் அலங்காரம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் பாடி பேனல்கள் கூடுதல் கவர்ச்சியான தோற்றம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. இத்தகைய கவர்ச்சியான தோற்றத்திலேயே ஹைட்ரஜன் பவர்டு சுஸுகி பர்க்மேன் விரைவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்போதைய நிலவரப்படி இதன் விற்பனை வருகை பற்றிய எந்தவொரு தகவலையும் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. அதன் வெளியீடு குறித்த தகவல்கள் மட்டுமே வெளியாகி இருக்கின்றன. தொடர்ந்து, இந்த வாகனத்தில் ஃப்யூவல் செல் தொழில்நுட்பத்தைப் பெறப் போவதில்லை என்றும், அதற்கு பதிலாக உள் எரிப்பு எந்திரமே இந்த வாகனத்தில் இடம் பெற இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, பெட்ரோலுக்கு பதிலாக ஹைட்ரஜனில் ஓடக் கூடிய வாகனமாக மாட்டுமே பர்க்மேன் மாற்றப்பட இருக்கின்றது. இதுபோன்ற கான்செப்ட் மாடல்கள் வெளியீட்டைப் பெறுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே வாகன உற்பத்தியாளர்கள் பலர் இதுமாதிரியான கான்செப்ட் மாடல்களை இந்த உலகிற்கு அறிமுகம் செய்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹைட்ரஜன் ஃப்யூவல் செல்லில் ஓடும் வாகனங்கள் மாசாக நீராவியையே வெளியேற்றும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், இந்த சுஸுகி பர்க்மேன் மாசாக எதை வெளியேற்றும் என்பது தெரியவில்லை. அதேவேளையில், சிஎன்ஜி வாகனங்களை விட குறைவான மாசையே இது வெளியேற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இருப்பினும் இதன் வருகை அநேகர் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








