இ20 பெட்ரோலில் ஓட கூடிய சுஸுகி ஸ்கூட்டர்கள் அறிமுகம்... ஆக்டிவாவிற்கு கும்மிடு போடுவதற்கான நேரம் வந்திடுச்சோ!
முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான சுஸுகி (Suzuki), இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தனது அனைத்து ஸ்கூட்டர் மாடல்களையும் அப்டேட் செய்து விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. நிறுவனத்தின் கீழ் மூன்று ஸ்கூட்டர் மாடல்கள் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. இவற்றையே சுஸுகி அப்டேட் செய்திருக்கின்றது.
விரைவில் நாட்டில் புதிய ஓபிடி 2 என்கிற புதிய மாசு உமிழ்வு விதி அமலுக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இந்த விதிக்கு இணங்கவே இந்த மூன்று ஸ்கூட்டர் மாடல்களும் தற்போது அப்டேட் செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, இ20 ரக எரிபொருளிலும் இயங்கக் கூடிய வாகனங்களாகவும் இவை அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றன.

20 சதவீதம் எத்தனால் 80 சதவீதம் பெட்ரோல் எனும் கலவையைக் கொண்ட எரிபொருளிலேயே இவை இயங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. காற்று மாசு, கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக இ20 ரக எரிபொருள் நாட்டில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஸ்கூட்டர்கள் அப்டேட் செய்யப்பட்டிருக்கின்ற நிலையிலும், அவற்றின் விலை இப்போதும் சற்று மலிவானதாகவே காட்சியளிக்கின்றது. சுஸுகி அக்செஸ் 125 ரூ. 79,400 என்கிற ஆரம்ப விலையில் இருந்து ரூ. 89,500 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். ரைடு கன்னெக்ட் எடிசன் கொண்ட சுஸுகி அக்செஸ்ஸே அதிக விலையைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது.

அப்டேட்டின் காரணமாக சுஸுகி அவெனிஸ் மாடலின் விலை சற்று உயர்ந்திருக்கின்றது. ரூ. 92 ஆயிரம் தொடங்கி ரூ. 92,300 வரையிலான விலையில் இது விற்கப்பட்டு வருகின்றது. சுஸுகி பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ரூ. 93 ஆயிரம் தொடங்கி ரூ. 97 ஆயிரம் வரையிலான விலையில் விற்கப்படுகின்றது.
இந்த விலைகள் அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. அப்டேட்டின் கீழ் புதிய நிற தேர்வையும் சுஸுகி ஸ்கூட்டர்களில் சேர்த்து இருக்கின்றது. அந்தவகையில், அவெனிஸ் மாடலில் புதிதாக மெட்டாலிக் சோனிக் சில்வர்/ மெட்டாலிக் ட்ரைடன் ப்ளூ ஆகிய நிற தேர்வுகளையும், பர்க்மேன் ஸ்ட்ரீட் மாடலில் பியர் மேட் ஷேடோ கிரீன் ஷேட் ஆகிய நிறங்களும் புதிதாக சேர்க்கப்பட்டு உள்ளன.

சுஸுகி நிறுவனம் ஸ்கூட்டர்களைத் தொடர்ந்து தனது ஒட்டுமொத்த தயாரிப்பையும் ஓபிடி2-ஏ விதி மற்றும் இ20 பெட்ரோலில் இயங்கும் திறன் ஆகியவற்றிற்கு உட்பட்டதாக விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக அறிவித்திருக்கின்றது. சுஸுகி நிறுவனத்தின் ஸ்கூட்டர்கள் உருவத்திலும், சிறப்பு வசதிகளும் மாறுபட்டதாகக் காணப்படலாம். ஆனால், இவை எஞ்ஜின் விஷயத்தில் ஒரே மாதிரியானதாகக் காட்சி அளிக்கின்றன.
குறிப்பாக, அக்செஸ் 125, அவெனிஸ் 125 மற்றும் பர்க்மேன் ஸ்ட்ரீட் 125 ஆகிய மாடல்களில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஃப்யூவல் இன்ஜெக்ட் வசதிக் கொண்ட மோட்டார் ஆகும். இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 8.5 பிஎச்பி பவரையும், 10 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.

மேலும், சுஸுகி நிறுவனம் அதன் அனைத்து ஸ்கூட்டர் மாடல்களிலும் தனது நவீன கால தொழில்நுட்ப வசதியான ரைடு கன்னெக்ட் அம்சத்தை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனை ப்ளூடூத் வசதிக் கொண்ட டிஜிட்டல் கன்சோல் வாயிலாகவே வழங்குகின்றது. மேலும், இந்த கருவியை உயர் நிலை தேர்வுகளில் மட்டுமே பெற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இந்த அம்சம் வாயிலாக வழி தடம் பற்றிய தகவலை திருப்பத்திற்கு திருப்பம் பெற்றுக் கொள்ள முடியும். இதுதவிர, செல்போனுக்கு வரும் அழைப்பு, மிஸ்டு கால்கள், குறுந்தகவல்கள், வாட்ஸ்-ஆப் அலர்ட், வேக வரம்பு எச்சரிக்கை, செல்போன் பேட்டரி லெவல் மற்றும் இடிஏ அப்டேட் ஆகியவற்றை ரைடர்களால் பெற்றுக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications









