பைக் டாக்சிக்கு ஆப்பு... கோவையில் அப்படி என்ன சொன்னார் போக்குவரத்து துறை அமைச்சர்!
போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வந்து சமீபத்தில் ஓய்வு பெற்றவர்கள் மற்றும் விருப்ப ஓய்வு பெற்றவர்களுக்கு நல திட்டங்களை வழங்கும் நிகழ்வு கோவையில் நடைபெற்றது. சாய்பாபா காலனி மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ள கோவை புதிய பேருந்து நிலையத்திலேயே இந்த நிகழ்வு தமிழக போக்குவரத்துத் துறை சார்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்று நலத் திட்டங்களை பயனாளிகளுக்கு வழங்கினர். இந்த பண பலன் திட்டமானது பணியின்போது இயற்கை எய்தியவர்களின் வாரிசுதாரர்களுக்கும் வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த அமைச்சர்கள், விரைவில் தமிழகத்தில் புதிதாக ஓட்டுநர்கள், நடத்துநர்கள் பணியமர்த்தப்பட இருப்பதை உறுதிப்படுத்தினார். இதுபோன்று இன்னும் பல முக்கிய தவல்களை அவர்கள் பகிர்ந்துக் கொண்டனர். குறிப்பாக, தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் பைக் டாக்சி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் பதிலளித்தார்.
அவர் கூறி இருப்பதன்படி, தமிழகத்தில் பைக் டாக்சிகளை இயக்க அனுமதி இல்லை என்பது உறுதியாகி உள்ளது. இன்னும் இரண்டு சக்கர வாகனங்கள் பைக் டாக்சி வாகனங்களாக பயன்படுத்த அங்கீகரிக்கப்படவில்லை என்பதைக் காரணமாக கூறி, அவற்றை தமிழகத்தில் பயன்படுத்தக் கூடாது என தெரிவித்தார்.

மேலும், இதுதொடர்பாக காவல்துறையும் பல்வேறு இடங்களில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார். அமைச்சரின் இந்த பதில் பைக் டாக்சி சேவையைப் பயன்படுத்தி வருபவர்களுக்கும், பைக் டாக்சி இயக்கி வருபவர்களுக்கும் பேரதிர்ச்சியாக அமைந்திருக்கின்றது. நாட்டில் இப்போதும் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றது.
படித்த படிப்பிற்கு வேலை இல்லாத காரணத்தினால் பல பட்டதாரி இளைஞர்கள் டெலிவரி மற்றும் பைக் டாக்சி பிரிவில் பணியாற்றி வருவதை நம்மால் காண முடிகின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே பைக் டாக்சிகளுக்கு ஆப்பு வைக்கும் விதமாக ஓர் பதிலை போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவ சங்கர் கூறி இருக்கின்றார்.

ஆரம்பத்தில் மலிவு விலையில் இருந்த ஆட்டோக் கட்டணங்கள் தற்போது பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஒருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்றிருந்தாலும் நூற்றுக் கணக்கில் கட்டணமாக ஆட்டோக்களுக்குச் செலுத்த வேண்டி இருக்கின்றது. ஆனால், பைக் டாக்சிக்கு ஒரு சில பத்து ரூபாய்களே போதுமானதாக இருக்கின்றது.
இதனால்தான் பைக் டாக்சிக்கு நாடு முழுவதும் வரவேற்பு அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆனால், அரசு பைக் டாக்சியை அங்கீகரிக்கவில்லை. இதனால், பைக் டாக்சி ஓட்டுநர்கள் பலர் பாதிப்படைய இருக்கின்றனர். அதே நேரத்தில் அமைச்சரின் இந்த கருத்தை ஆட்டோ ஓட்டுநர்கள் வரவேற்கத் தொடங்கி இருக்கின்றனர்.
பைக் டாக்சி ஓட்டுநர்களால் தங்களுக்கு கிடைக்க வேண்டி சவாரி பைக் டாக்சிகளால் பாதிக்கப்படுவதாக அவர்கள் கடந்த காலங்களில் புலம்பிக் கொண்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், நாட்டின் குறிப்பிட்ட சில பகுதிகளில் பைக் டாக்சி ஓட்டுநர்கள் மற்றும் ஆட்டோ டிரைவர்களுக்கு இடையே மோதலும் அரங்கேறியது.
தமிழகத்திலும் இதுபோன்ற மோதல் சம்பவங்கள் அரங்கேறியிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே பைக் டாக்சி குறித்த தமிழக அரசின் நிலைப்பாடு தெரிய வந்திருக்கின்றது. கோவையில் தற்போது பார்வையற்றோர் மற்றும் வயதானவர்கள் பலன் பெறும் விதமாக நிறுத்தம் பற்றிய அறிவிப்பை வழங்கும் ஸ்பீக்கர்கள் பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இந்த பேருந்துகளை அமைச்சர்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வந்தனர். அறிவிப்பு கருவிகள் மட்டுமின்றி ஜிபிஎஸ் கருவிகளும் சில பேருந்துகளில் பொருத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், 2000 புதிய பேருந்துகளை வாங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் இந்த பத்திரிக்கையாளர்கள் சந்திப்பின்போது அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்தார்.
"இது மாநில அரசின் நிதியில் வாங்கப்படும் என்றும், கேஎம்டபிள்யூ வங்கியின் நிதி உதவியுடன் 2,400 பேருந்துகள் வாங்குவதற்கான பணிகள் தொடங்கி இருப்பதாகவும்" அவர் அமைச்சர் கூறினார். இந்த புதிய பேருந்துகள் 4 முதல் 6 மாதத்திற்குள் பயன்பாட்டிற்கும் வரும் என கூறப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பேருந்துகளில் புதிய இடத்திற்கு முதல் முறையாக பயணிப்பவர்கள் தாங்கள் எந்த இடத்தில் இருக்கின்றோம் என்பது தெரிந்துக் கொள்வது மிக சிரமமானதாக இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதை அறிந்துக் கொள்ளும் விதமாக கோவையில் உள்ள பேருந்துகளில் நிறுத்தங்களை அறிவிக்கும் கருவி பொருத்தப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









