ரிவர் இன்டீ பற்றிய இந்த தகவல்கள் தெரிஞ்சா வேற இ-ஸ்கூட்டருக்கு செய்த புக்கிங்கை கேன்சல் பண்ணவும் தயங்கமாட்டீங்க
நேற்றைய தினம் (பிப்ரவரி 22) இந்திய மின் வாகன சந்தையில் ரிவர் இன்டீ (River Indie) எனும் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகமாகியது. கார்களில் எஸ்யூவி ரகம் இருப்பதைபோல், ஸ்கூட்டர்களுக்கு எஸ்யூவி ரகம் இது என்பதைப் போன்ற உருவத்தில் நிறுவனம் வடிவமைத்து இருக்கின்றது.
இந்த (எஸ்யூவி) அடைமொழியை பயன்படுத்தியே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயாரிப்பு நிறுவனமான ரிவரும் அறிமுகம் செய்தது. மிக நீளமான மற்றும் அகலமான உருவம், 14 அங்குல வீல்கள் என பார்ப்பதற்கே சற்று வித்தியாசமான வாகனமாக இன்டீ தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி அறிய வேண்டிய டாப் ஐந்து முக்கிய தகவல்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

கவர்ச்சியான அம்சங்கள்:
ரிவர் இன்டீ போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் பன்முக சிறப்பு வசதிகளைப் பெற்றிருக்கின்றது. மிக முக்கியமாக இந்தியாவின் பள்ளம் - மேடுகள் நிறைந்த சாலையை சமாளிக்கும் விதமாக இன்டீயின் முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ட்வின் ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, மிக சிறந்த பிரேக்கிங்கிற்காக இரு முனை வீல்களிலும் டிஸ்க்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
முன் பக்கத்தில் 240 மிமீ டிஸ்க்கும், பின் பக்க வீலில் 200 மிமீ டிஸ்க்கும் சிபிஎஸ் வசதி உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இவற்றுடன் சேர்த்து பெரிய எல்சிடி திரை முழு டிஜிட்டல் வசதி உடன், ரோபோக்களின் கண்களைப் போன்ற வித்தியாசமான தோன்ற கொண்ட எல்இடி லைட்டுகள், ரிவர்ஸ் பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் 2 யுஎஸ்பி சார்ஜிங் போர்ட்கள் ஆகிய அம்சங்கள் இந்த எஸ்யூவி ரக இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டிருக்கின்றன.

பேட்டரி பேக் மற்றும் ரேஞ்ஜ்
ரிவர் இன்டீ 4 kWh பேட்டரி பேக் தேர்வுடன் மட்டுமே விற்பனைக்கு வருகின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இது ரியல் வேர்ல்டு ரேஞ்ஜ் திறன் ஆகும். நிறுவனம் இந்த பேட்டரி பேக்கின் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக 5 ஆண்டுகள் மற்றும் 50,000 கிமீட்டர்கள் வாரண்டியை அறிவித்திருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை பலமடங்கு வேகத்தில் சார்ஜ் செய்து கொள்ள முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், அதுகுறித்த முழுமையான விபரங்கள் வெளியாகவில்லை.

மின் மோட்டார் மற்றும் அதன் செயல்திறன்
ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 6.7 kW திறன் வெளியேற்றம் கொண்ட மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. வாகனத்தின் நடு பகுதியிலேயே இந்த மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கின்றது. 18 கிரேடபிலிட்டியை பெற இந்த மோட்டார் அனுமதிக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் போட்டியாளனாக இருக்கும் ஓலா எஸ் 1 ப்ரோ 15 டிகிரி கிரேடபிலிட்டி வரை மட்டுமே அனுமதிக்கும் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். அதேவேளையில், 0-40 கிமீ எனும் வேகத்தை வெறும் 3.9 செகண்டுகளிலேயே இது எட்டிவிடும்.

ஸ்டோரேஜுக்காக மிக தாராளமான இட வசதி
இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் மற்றும் குளோவ் பாக்ஸ் பகுதியில் ஸ்டோரேஜ் வசதி கொடுக்கப்பட்டு உள்ளது. இதில், அதிக இட வசதியைக் கொண்டதாக இருக்கைக்கு அடியில் இருக்கும் ஸ்டோரேஜ் வசதி இருக்கின்றது. இங்கு 43 லிட்டர் வரையில் பொருட்களை வைத்துக் கொள்ள முடியும். அதேவேளையில், குளோவ் பாக்ஸில் 12 லிட்டர் வரையிலான பொருட்களை பத்திரப்படுத்திக் கொள்ள முடியும். ஒட்டுமொத்தமாக 55 லிட்டர் வரையிலான பொருட்களை இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வைத்துக் கொள்ள முடியும்.

விலை விபரம்:
அறிமுகமாக ரிவர் இன்டீ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 1.25 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆன்-ரோடில் இன்னும் சில ஆயிரங்கள் சேர்ந்தவாறு இது விற்பனைக்குக் கிடைக்கும். இது சற்று காஸ்ட்லியான விலை. இருப்பினும், இருசக்கர வாகனத்தில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்கள் மற்றும் அதன் ஸ்டைல் ஆகியவை இந்த பணத்திற்கு உகந்த தயாரிப்பு இன்டீ என்பதை காண்பிக்கின்றது. இந்த விலை எலெக்ட்ரிக் சார்ஜருக்குமானது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ரிவர் நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனமாக இன்டீயை உருவாக்கி இருக்கின்றது. இதனை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ள ஏதுவாக சார்ஜிங் கருவியையும் சேர்த்தே இன்டீ உடன் விற்பனைக்கு வழங்குகின்றது. இதன் வருகை தற்போது பல மின்சார ஸ்கூட்டர்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. குறிப்பாக, இதில் வழங்கப்பட்டிருக்கும் அம்சங்களான க்ராஷ் குவார்டுகள், அதிக ஸ்டோரேஜ் வசதி மற்றும் கூடுதல் லக்கேஜை ஏற்றி செல்வதற்கான வசதி உள்ளிட்டவை போட்டி நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications









