இவ்ளோ கம்மி விலைக்கு இ-பைக்கா! டார்க் க்ரடோஸ் ஆர் மாடலில் புதிய தேர்வு அறிமுகம்! நாள் முழுக்க வச்சு செய்யயலாம்
இந்தியாவை மையமாகக் கொண்டு மின் வாகன உற்பத்தியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் டார்க் மோட்டார்ஸ் (Tork Motors)-ம் ஒன்று. இந்நிறுவனத்தின் முதன்மையான தயாரிப்புகளில் ஒன்றாக க்ரடோஸ்-ஆர் (Kratos-R) இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு இந்திய மின்சார இருசக்கர வாகன பிரியர்கள் மத்தியில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த நிலையிலேயே இந்த பைக்கிற்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாக அதில் கூடுதலாக புதிய தேர்வு ஒன்றை டார்க் மோட்டார்ஸ் தற்போது விற்பனைக்குச் சேர்த்திருக்கின்றது. அர்பன் (Urban) எனும் புதுமுக ட்ரிம்மையே டார்க் க்ரடோஸ்-ஆர் பைக்கில் அது சேர்த்து இருக்கின்றது.

இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.67 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஸ்பிளெண்டர், ஆக்டிவா போன்ற ரெகுலர் பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் பைக்காகவே இந்த தேர்வு உருவாக்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. அதாவது, நகர பயன்பாட்டிற்கு ஏற்ப இதில் சிறப்பு வசதியை டார்க் மோட்டார்ஸ் சேர்த்திருக்கின்றது.
சிட்டி எனும் பிரத்யேக ரைடு மோடே இந்த இ-பைக்கில் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 70 கிமீ ஆகும். அதேநேரத்தில் முழு சார்ஜில் 100 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இந்த ரேஞ்ஜ் திறனுக்காக 4.0 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக் சேர்க்கப்பட்டு இருக்கின்றது.
மேலும், இந்த வாகனத்தை வீட்டிலேயே வைத்து சார்ஜ் செய்து கொள்ள முடியும். இதற்கான சார்ஜிங் கருவியும் வழங்கப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. நிற தேர்வை பொருத்தவரை ஸ்ட்ரீக்கி ரெட், ஓசோனிக் ப்ளூ மற்றும் மிட்நைட் பிளாக் என ஒட்டுமொத்தமாக மூன்று விதமான நிற தேர்வுகள் க்ரடோஸ் ஆர் எலெக்ட்ரிக் பைக்கில் வழங்கப்படுகின்றன.
இதன் மின்சார மோட்டாரை பொருத்த வரை ஆக்ஸியல் ஃப்ளக்ஸ் (Axial Flux) மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாருக்கு சமீபத்திலேயே நிறுவனம் காப்புரிமை பெற்றது. இதுவும், இந்த பைக்கில் இணைக்கப்பட்டிருக்கும் பேட்டரியும் ஐபி 67 தர சான்று பெற்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த புதிய மின்மோட்டார் சிறந்த செயல்திறனை வெளியேற்றும் திறன் கொண்டது.
டார்க் மோட்டார்ஸ் இந்த புதிய தேர்வில் சிட்டி ரைடு மோடுடன் சேர்த்து ஈகோ மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆகிய ரைடு மோட்களையும் வழங்கி உள்ளது. அது தவிர, ரிவர்ஸ் மோடையும் வாகனத்தை சுலபமாக ரிவர்ஸ் செய்து கொள்ள ஏதுவாக அது வழங்கி இருக்கின்றது.
மேலும், ஃபாஸ்ட் சார்ஜிங், நேவிகேஷன், ப்ளூடூத் இணைப்பு, டிராக் மோட் அனலடிக்ஸ், ஸ்மார்ட் அனலடிக்ஸ் மற்றும் கைடு மீ ஹோம் லைட் (வீடு செல்லும் வரை லைட்டுகள் ஒளிரும்) உள்ளிட்ட வசதிகளும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், இந்த வசதிகளை பெற வேண்டும் எனில் கூடுதலாக மாத சந்தா செலுத்த வேண்டும் என கூறப்படுகின்றது.
இந்த புதிய ட்ரிம் விரைவில் நாடு முழுவதும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. ஆகஸ்டு 15ஆம் தேதி அன்றே இந்த இ-பைக்கிற்கான புக்கிங் தொடங்கப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போது வாடிக்கையாளர்கள் புதிய க்ரடோஸ் ஆர் அர்பன் தேர்வை நிறுவனத்தின் தளத்தின் வாயிலாக புக் செய்துக் கொள்ள முடியும். ரூ. 999 என்கிற குறைவான கட்டணத்தில் புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நகர்புற பயன்பாட்டை மையமாகக் கொண்டு இந்த தேர்வு விற்பனைக்கு வந்திருப்பதால் கண்டிப்பாக ஸ்பிளெண்டர் மற்றும் ஆக்டிவா போன்றவற்றிற்கு போட்டியாளனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இந்த போட்டியில் இது வெற்றி பெறுமா அல்லது பின் தங்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








