டார்க் க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்கை இனி பெங்களூரில் வாங்கலாம்!! தமிழ்நாட்டிற்கு அருகே புதிய டார்க் ஷோரூம்!
டார்க் மோட்டார்ஸ் (Tork Motors) நிறுவனம் பெங்களூரில் அதன் முதல் எக்ஸ்பிரீயன்ஸ் ஷோரூம் மண்டலத்தை திறந்துள்ளது. பெங்களூர் மட்டுமின்றி, மொத்த கர்நாடகாவிலேயே டார்க் மோட்டார்ஸ் அமைத்துள்ள முதல் ஷோரூமான இதில் க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்குகள் விற்பனை செய்யப்படுவது மட்டுமின்றி, அதனை வாங்கும் கஸ்டமர்களுக்கு தேவையான பராமரிப்பு சேவைகள் மற்றும் உதிரி பாகங்களும் விற்பனை செய்யப்பட உள்ளன.
இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான டார்க் மோட்டார்ஸ் நாடு முழுவதும் தனது ஷோரூம்களை விரிவுப்படுத்தி வருகிறது. ஆனால், இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூரில் மட்டும் டார்க் மோட்டார்ஸின் நெட்வொர்க் இல்லாமல் இருந்தது. இந்தியாவில் தற்சமயம் உள்ள பெரும்பாலான இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் பெங்களூரில் உருவானவையே.

ஆனால், அப்படிப்பட்ட மாநகரத்தில் தனது தயாரிப்புகள் விற்பனை செய்யப்படாமல் உள்ளதை குறையாக கருதிய டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் ஒருவழியாக பெங்களூரில் அதன் முதல் எக்ஸ்பிரீயன்ஸ் ஷோரூம் மண்டலத்தை திறந்துள்ளது. பெங்களூரில் ஜெயாநகர் 5வது பிளாக்கில் திறக்கப்பட்டுள்ள இந்த ஷோரூம் மூலமாக கர்நாடகாவில் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் நுழைந்துள்ளது. பெங்களூரில் இனி திறக்கப்படும் டார்க் மோட்டார்ஸ் ஷோரூம்கள் அனைத்தும் தற்போது திறக்கப்பட்டுள்ள மண்டலத்தின் கீழ் செயல்படும்.
ஏற்கனவே கூறியதுபோல், இந்த புதிய ஷோரூமில் க்ராடோஸ்-எஸ் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் விற்பனை செய்யப்பட உள்ளன. அவற்றை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு தேவையான சேவைகள் மற்றும் உதிரி பாகங்களும் இந்த புதிய எக்ஸ்பிரீயன்ஸ் மண்டலத்தில் விற்பனை செய்ய டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் தயாராகி வருகிறது. கர்நாடகாவில் இதற்கு முன் டார்க் மோட்டார்ஸின் ஷோரூம் எதுவுமில்லை என்றாலும், இந்த மாநிலத்தில் டார்க் க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்கை யாரும் வைத்தில்லை என கூறிவிட முடியாது.

குறிப்பாக, தலைநகர் பெங்களூரிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் சில க்ராடோஸ்-ஆர் பைக் உரிமையாளர்களை டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுள்ளது. அவர்கள் அனைவரையும் இந்த புதிய எக்ஸ்பிரீயன்ஸ் ஷோரூம் மண்டலம் மூலமாக ஒருங்கிணைக்க திட்டமிட்டுள்ள டார்க் மோட்டார்ஸ் நிறுவனம், இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் பைக்கான க்ராடோஸ்-ஆரை இந்த ஷோரூம் வாயிலாக பெங்களூர் சாலைகளில் விரிவாக டெஸ்ட் டிரைவ் செய்து பார்த்து வாங்கலாம் என தெரிவித்துள்ளது.
இந்த எக்ஸ்பிரீயன்ஸ் ஷோரூம் திறப்பு நிகழ்ச்சியின் போது பேசிய டார்க் மோட்டார்ஸ் நிறுவனத்தின் நிறுவனரும், தற்போதைய சிஇஓ-வுமான கபில் ஷெல்கே, "எங்களது முதல் எக்ஸ்பிரீயன்ஸ் மண்டலத்தை பெங்களூரில் திறப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். இந்த நகரம் நாட்டின் தொழிற்நுட்ப தலைநகரம் என புகழப்படுகிறது. மேலும் இது மோட்டார்சைக்கிள் ஓட்டுபவர்களின் நகரமாகவும் உள்ளது. ஆதலால், இது எங்களுக்கு மிகவும் குறிப்பிடத்தக்க சந்தையாக அமைகிறது.

க்ராடோஸ்-ஆர், இந்திய பைக் ஓட்டிகளுக்காக முழுமையாக இந்தியாவில் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டதன் மூலம் பெங்களூருக்கு ஏற்றதாக விளங்குகிறது. பலதரப்பட்ட ரைடர்களுக்கு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அணுகக்கூடியதில் த்ரில்லை கொண்டுவரும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக் அதிநவீன தொழிற்நுட்பம் மற்றும் விலைக்கேற்ற செயல்திறன் என இரண்டும் கலந்த கலவையாக உள்ளது. பெங்களூரில் உள்ள தொழிற்நுட்ப ஆர்வலர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள் ஆர்வலர்களை இது நிச்சயமாக உற்சாகப்படுத்தும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்றார்.
டார்க் க்ராடோஸ்-ஆர் எலக்ட்ரிக் பைக்கை பொறுத்தவரையில், இதில் ஐபி67 சான்றளிக்கப்பட்ட 4kWh லித்தியம்-இரும்பு தொகுப்பு பொருத்தப்படுகிறது. இந்த பேட்டரி தொகுப்பின் உதவியுடன் செயல்படும் இந்த பைக்கின் 9 கிலோவாட்ஸ் எலக்ட்ரிக் மோட்டாரின் மூலம் அதிகப்பட்சமாக 38 என்எம் வரையிலான டார்க் திறனை 96 சதவீத திறனில் பெற முடியும். ஈக்கோ, சிட்டி, ஸ்போர்ட் என்கிற 3 விதமான ரைடிங் மோட்களில் வழங்கப்படும் இந்த எலக்ட்ரிக் பைக்கை குறிப்பிட்ட ரைடிங் மோடில் அதிகப்பட்சமாக 105kmph வரையிலான வேகத்தில் இயக்க முடியும்.

சந்தையை விரிவுப்படுத்த தொடர்ந்து முயற்சிகளில் ஈடுப்பட்டுவரும் டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் எதிர்காலத்தில் பல்வேறு பிரிவுகளில் எலக்ட்ரிக் பைக்குகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, பெரிய அளவிலான பேட்டரி உடன் இயங்கும் ஸ்போர்ட்ஸ் ரக எலக்ட்ரிக் பைக்குகளும் டார்க்கின் யோசனையில் உள்ளன. அதேநேரம், தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்ற அதிக ரேஞ்ச் கொண்ட எலக்ட்ரிக் பைக்குகளும் வெவ்வேறான ஸ்டைல்களில் டார்க் பிராண்டில் இருந்து வெளிவர உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: குஜராத், அகமாதபாத்தை சேர்ந்த டார்க் மோட்டார்ஸ் நிறுவனம் வட இந்தியாவில் (குறிப்பாக மேற்கு இந்திய மாநிலங்களில்) நன்கு காலூன்றி விட்டது. தற்போது இந்த நிறுவனத்தின் பார்வை தென்னிந்தியாவின் மீது விழ ஆரம்பித்துள்ளது. அதன் வெளிப்பாடாகவே, பெங்களூரில் முதல் எக்ஸ்பிரீயன்ஸ் மண்டலம் திறப்பு ஆகும்.


Click it and Unblock the Notifications









