தலையில தூக்கி வச்சு கொண்டாடிட்டு இருக்க நேரத்துல இப்படி பண்ணா சரியா! புக்கிங் கட்டணம், விலை ரெண்டுமே ஏறிடுச்சு
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில், டிரையம்ப் நிறுவனத்திற்காக இரண்டு புதுமுக மோட்டார்சைக்கிள் மாடல்கள் தயார் செய்யப்பட்டன. ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400 எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த இரண்டும் சமீபத்திலேயே இந்தியாவில் வெளியீட்டைப் பெற்றன. இந்த இரண்டில் ஸ்பீடு 400 பைக்கிற்கான விற்பனை பணிகள் மட்டுமே இந்தியாவில் தற்போது தொடங்கப்பட்டு இருக்கின்றது.
ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடலுக்கான விற்பனைப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. வரும் அக்டோபர் மாதத்திலேயே இந்த பைக்கிற்கான விற்பனைப் பணிகள் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவை இரண்டில் மலிவு விலை தயாரிப்பாக ஸ்பீடு 400 இருக்கின்றது. இந்த மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவு பணிகள் ஏற்கனவே நாட்டில் தொடங்கிவிட்டன.

இரண்டு சக்கர வாகன பிரியர்கள் எதிர்பார்த்ததைப் போலவே இந்த மோட்டார்சைக்கிள் சற்று குறைவான விலையில் விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. ஆகையால், அதற்கு வரவேற்பு கொஞ்சம் அதிகமாகதான் தென்படுகின்றது. அதாவது, இந்தியாவில் இந்த பைக்கை புக் செய்வோரின் தொடர்ச்சியாக உயர்ந்த வண்ணமே இருக்கின்றது.
இந்த நிலையிலேயே டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 பைக்கிற்கான புக்கிங் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக வெறும் 2 ஆயிரம் ரூபாய் முன் கட்டணத்திலேயே ஸ்பீடு 400 பைக்கிற்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வந்தநிலையில், தற்போது அதற்கான கட்டணம் ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரையம்ப் நிறுவனம் இந்த பைக்கின் முன் பதிவு கட்டணத்தை மட்டுமே உயர்த்தவில்லை, அதன் எக்ஸ்-ஷோரூம் விலையையும் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிரையம்ப் நிறுவனம் ஸ்பீடு 400 மோட்டார்சைக்கிளுக்கு அறிமுக விலையாக ரூ. 2.23 லட்சத்தை நிர்ணயம் செய்திருந்தது. இது சலுகை விலை மட்டுமே ஆகும்.
இந்த விலை முதல் 10 ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையிலேயே இதையும் நிறுவனம் உயர்த்தி இருக்கின்றது. ரூ. 10 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டு இருக்கின்றது. அதாவது, ரூ. 2.33 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் ஸ்பீடு 400 பைக் விற்கப்பட்டு வருகின்றது.

இந்த இரண்டு மாற்றங்கள் டிரையம்ப் ஸ்பீடு 400 பைக் பிரியர்களை வேதனையில் ஆழ்த்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. குறிப்பாக, எப்படியாவது இதை சலுகை விலையிலேயே வாங்கிவிடலாம் என எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை அடையச் செய்திருக்கின்றது டிரையம்ப்-இன் இந்த நடவடிக்கை.
மேலும், அதுக்குள்ளையா 10 ஆயிரம் பேர் இந்த பைக்கை வாங்கிட்டாங்க என ஆச்சரியமடையவும் இந்த தகவல் செய்திருக்கின்றது. அதேவேளையில், இந்த முன்தொகை பணம் என்பது முழுக்க முழுக்க ரீ-ஃபண்டபிள் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. ஒருவேளை பைக்கை புக் செய்தபின்னர் வேண்டாம் என நினைத்தால்கூட பெரியளவில் பிடித்தம் இன்றி தொகையை முழுமையாக பெற்றுக் கொள்ள முடியும்.
டிரையம்ப்-பஜாஜ் கூட்டணி இந்த பைக்கில் 398 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்யூடு கூல்டு மோட்டாரையே பயன்படுத்தி இருக்கின்றது. இதன் உடன் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரால் 39.5 பிஎச்பி பவரையும், 37.5 என்எம் டார்க்கையும் வெளியேற்ற முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவற்றுடன் சேர்த்து மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்க வேண்டி இந்த மோட்டார்சைக்கிளில் மிக சூப்பரான சஸ்பென்ஷன்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
அந்தவகையில், முன் பக்க வீலில் 10 ஸ்டெப் ப்ரீலோடு அட்ஜஸ்டபிள், மோனோஷாக் ஆகியவையே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், மிக சிறந்த பிரேக்கி வசதிக்காக ஸ்பீடு 400 பைக்கின் இரு முனைகளிலும் டிஸ்க் மற்றும் ஏபிஎஸ் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுபோன்ற பன்முக சிறப்பு அம்சங்களையும், மலிவு விலையையும் கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே ஸ்பீடு 400 அமோக வரவேற்பை இந்தியாவில் பெற்றுக் கொண்டிருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: திடீரென புக்கிங் கட்டணம் மற்றும் விலையைச டிரையம்ப் உயர்த்தி இருப்பது அதன் விற்பனையில் லேசான பாதிப்பை ஏற்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இது உறுதியானது அல்ல. பலர் டிரையம்ப் மற்றும் பஜாஜ் கூட்டணியின் தயாரிப்பு என்பதால் பெருத்த ஆர்வத்துடன் வாங்கத் தொடங்கி இருக்கின்றனர் என்பது கவனித்தகுந்தது.


Click it and Unblock the Notifications









