நமது தமிழ்நாட்டு தயாரிப்பின் தரத்திற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணம் தேவையே இருக்காது!! டிவிஎஸ்-இன் புதிய சாதனை..
அப்பாச்சி பைக்குகள் விற்பனையில் புதியதொரு பிரம்மாண்ட மைக்கல்லை உலகளவில் டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் கடந்துள்ளது. எத்தகைய மைல்கல் அது? என்பதையும், இந்தியாவில் விற்பனையில் உள்ள அப்பாச்சி பைக்குகள் குறித்தும் கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
நமது தமிழ்நாடு மாநிலத்தின் சிறப்பம்சங்களுள் டிவிஎஸ் மோட்டார் நிறுவனமும் ஒன்று என்றால், அதில் மிகையில்லை. ஓசூரில் தொழிற்சாலை அமைத்து செயல்பட்டுவரும் டிவிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு உலகம் முழுவதிலும் பல்வேறு நாடுகளில் வரவேற்பு உள்ளதை மறுப்பதற்கில்லை. குறிப்பாக, அப்பாச்சி பைக்குகளை பற்றி கேள்விப்படாதவர்களே இருக்க மாட்டீர்கள் என்றுதான் நினைக்கிறேன்.

ஏனெனில் டிவிஎஸ் பிராண்ட்டிற்கு பெயர் வாங்கி கொடுத்த தயாரிப்புகளுள் அப்பாச்சி சப்-பிராண்ட் முதன்மை ஆனது. முதன்முதலாக 2005ஆம் ஆண்டில் முதல் டிவிஎஸ் அப்பாச்சி மோட்டார்சைக்கிள் வெளிவந்தது. அந்த வகையில் பார்க்கும்போது, சுமார் 18 வருடங்களாக சந்தையில் நீடித்துவரும் அப்பாச்சி பைக்குகள் தற்சமயம் 60க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனையில் உள்ளன. டிவிஎஸ் மோட்டாரின் ரேசிங் குழுவிற்கு கீழ் நேரடியாக செயல்படும் அப்பாச்சி பைக்குகள் பிரீமியம் மோட்டார்சைக்கிள்கள் பிரிவில் பல்வேறு பெஞ்ச் மார்க்குகளை உருவாக்கி உள்ளன.
அதில் மற்றுமொரு மைல்கல்லாக உலகளவில் விற்பனையில் 50 இலட்சம் என்ற இமாலய சாதனையை அப்பாச்சி பைக்குகள் எட்டியுள்ளன. இதனை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது அறிக்கையின் மூலம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தி உள்ளது. உலகம் முழுவதும் அப்பாச்சி பைக்குகளின் மீது ரசிகர்கள் வைத்துள்ள அன்பிற்கு இது சாட்சி என அந்த அறிக்கையில் டிவிஎஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த கூற்றை மறுக்க முடியாத வகையில், கடந்த காலங்களில் இருந்து அப்பாச்சி பைக்குகளில் ரேஸ்-ட்யூன் செய்யப்பட்ட ஃப்யுல் இன்ஜெக்ஷன் (RT-Fi), ரைடு மோட்கள், ட்யூவல்-சேனல் ஏபிஎஸ், ரேஸ் ட்யூன் செய்யப்பட்ட ஸ்லிப்பர் க்ளட்ச் மற்றும் ஸ்மார்ட் எக்ஸோனெக்ட் என பல்வேறு அம்சங்களை டிவிஎஸ் நிறுவனம் பிரிவிலேயே முதல்முறையாக அறிமுகப்படுத்தி உள்ளது.

மற்ற பைக்குகளுக்கு முன்பாக அப்பாச்சி பைக்குகளில் அறிமுகமான இந்த அம்சங்கள் இந்த பைக்குகளை பலத்தரப்பட்ட வாடிக்கையாளர்களிடமும், பைக் ஆர்வலர்களிடமும் கொண்டு சேர்த்துள்ளது. 50 இலட்ச அப்பாச்சி பைக்குகள் விற்பனை என்பதில் நிச்சயமாக உள்நாடான இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும். இவ்வளவு ஏன், இந்தியாவில் டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளுக்கு என்றே 2.5 லட்ச உறுப்பினர்கள் உடன் அப்பாச்சி உரிமையாளர்கள் க்ரூப் (AOG) செயல்பட்டு வருகிறது.
இந்தியாவின் மிக பெரிய அதிகாரப்பூர்வ மோட்டார்சைக்கிள் க்ரூப்பாக விளங்கும் இது இந்தியாவில் 60க்கும் மேற்பட்ட நகரங்கள் உள்பட உலகம் முழுவதும் பரந்து விரிந்துள்ளது. இந்தியாவில் அப்பாச்சி பைக்குகள் வரிசையில் அப்பாச்சி ஆர்டிஆர்160, அப்பாச்சி ஆர்டிஆர்180, ஆர்டிஆர்160 4வி, அப்பாச்சி ஆர்டிஆர்200 4வி மற்றும் டிவிஎஸ் மோட்டாரின் விலைமிக்க பிரதான மோட்டார்சைக்கிளான அப்பாச்சி ஆர்ஆர்310 உள்ளிட்டவை உள்ளன.
அப்பாச்சி பைக்குகள் விற்பனையில் 50 இலட்சம் என்ற இமாலய மைல்கல்லை கடந்திருப்ப்து குறித்து டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் பிரீமியம் - வணிகம் பிரிவின் தலைமை அதிகாரி விமல் சம்ப்ளே கருத்து தெரிவிக்கையில், "இந்த உலகளாவிய மைல்கல்லை எட்டுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மேலும் இந்த சாதனைக்காக உலகம் முழுவதும் உள்ள அனைத்து அப்பாச்சியர்களுக்கும் எங்களது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.


Click it and Unblock the Notifications








