எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் அடித்து தூள் கிளப்பும் டிவிஎஸ்!! கடந்த பிப்ரவரியில் மொத்த விற்பனை எவ்வளவு?
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார் ஆகும். சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த 2023 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்ஸ் எண்ணிக்கைகள் குறித்து இனி இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.
டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் நடந்து முடிந்த 2023 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,76,150 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி 3-சக்கர டிவிஎஸ் வாகனங்களின் விற்பனை எண்ணிக்கைகளும் அடங்குகின்றன. அதாவது, மொத்த 2,76,150 எண்ணிக்கையில் 2,67,026 இருசக்கர வாகனங்களும், மீதி 9,124 3-சக்கர வாகனங்களும் ஆகும்.

அதுவே, 2022 பிப்ரவரியில் 2,67,625 இருசக்கர வாகனங்களையும், 14,089 3-சக்கர வாகனங்களையும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. மொத்தமாக, கடந்த ஆண்டு பிப்ரவரியில் 2,81,714 வாகனங்கள் டிவிஎஸ் பிராண்டில் இருந்து விற்பனையாகி இருந்தன. கடந்த பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 2,67,026 இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கூறினோம் அல்லவா, இதில் 2,21,402 மட்டுமே இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும்.
மீதி வெளிநாட்டு சந்தைகளுக்கு இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டவை. அதுவே, 2022 பிப்ரவரியில் வெறும் 1,73,198 இருசக்கர வாகனங்களை மட்டுமே உள்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வளர்ச்சியை ஸ்கூட்டர்கள் மூலமாகவே டிவிஎஸ் நிறுவனம் கண்டுள்ளது. ஏனெனில் டிவிஎஸ் பைக்குகளின் விற்பனை 2022 பிப்ரவரி உடன் ஒப்பிடும்போது கடந்த பிப்ரவரியில் கணிசமாக குறைந்துள்ளது.

எந்த அளவிற்கு என்றால், கடந்த 2022 பிப்ரவரியில் 1,43,523 டிவிஎஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,26,243 2-வீலர்களை மட்டுமே டிவிஎஸ் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால் டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது 21% வளர்ச்சி கண்டுள்ளது. ஏனென்றால், 2022 பிப்ரவரியில் 86,616 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன, ஆனால் 2023 பிப்ரவரியில் 1,04,825 ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
இதில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையை மட்டும் தனியாக எடுத்து பார்த்தோமேயானால், 15,522 ஆகும். ஆனால் 2022 பிப்ரவரியில் 2,238 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. டிவிஎஸ் பிராண்டில் இருந்து தற்போதைக்கு ஐக்யூப் என்ற ஒரேயொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கிறது. 100க்கும் மேற்பட்ட நகரங்களில் 200 தொடு மையங்கள் உடன் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பன செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடர்ச்சியாக 4வது மாதமாக 10,000 யூனிட்களுக்கு மேல் கடந்த பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், கடந்த மாதத்தில் பதிவு செய்யப்பட்டதுதான் 2020 ஜனவரியில் அறிமுகத்தில் இருந்து ஒரு மாதத்தில் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அதிகப்பட்ச விற்பனை எண்ணிக்கை ஆகும். வெளிநாட்டு ஏற்றுமதியை பொறுத்தவரையில் டிவிஎஸ் மோட்டார் பெரிய அளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
2022 பிப்ரவரியில் சுமார் 1,07,574 வாகனங்களை இந்தியாவில் தயாரித்து வெளிநாடுகளுக்கு இந்த நிறுவனம் அனுப்பி வைத்திருந்தது. ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்தில் இந்த எண்ணிக்கை ஆனது வெறும் 53,405ஆக மட்டுமே பதிவாகி உள்ளது. இதில் 2-சக்கர வாகன ஏற்றுமதி எண்ணிக்கை 45,624 ஆகும். ஆனால் 2022 பிப்ரவரியில் இதனை காட்டிலும் டபுள் மடங்காக 94,427 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் இருந்து டிவிஎஸ் ஏற்றுமதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








