இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் டிவிஎஸ் பிராண்டின் டிரெண்ட்டாக மாறி வருகிறது!! விற்பனை அசூர வளர்ச்சி!
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான சந்தை நம் நாட்டில் வளர்ந்து வரும் நிலையில், இதனை உறுதிப்படுத்தும் விதமாக கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பது குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அத்துடன், டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்கள் எண்ணிக்கை எத்தனை என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்தில் மொத்தமாக 3,45,848 வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. 2022ஆம் ஆண்டில் இதே ஆகஸ்ட் மாதத்தில் இந்த நிறுவனம் விற்பனை செய்த எண்ணிக்கைகளுடன் ஒப்பிட்டு பார்த்தால், கிட்டத்தட்ட 12,061 வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் அதிகமாக விற்பனை செய்துள்ளது. அதாவது, 3.61%.

இதில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்டவை மற்றும் வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை என இரண்டும் அடங்குகின்றன. அதுமட்டுமின்றி, டிவிஎஸ் பிராண்டில் இருந்து 3 சக்கர வாகனங்களும் சில விற்பனை செய்யப்படுகின்றன. அவையும் 3,45,848இல் அடங்குகின்றன. கடந்த ஆகஸ்ட்டில் உள்நாட்டில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் வாகனங்கள் என்று பார்த்தால், 2,58,333 ஆகும். 2022 ஆகஸ்ட்டில் 2,40,676 வாகனங்களை மட்டுமே டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது.
இந்த வகையில், டிவிஎஸ் வாகனங்களின் உள்நாட்டு விற்பனை 7.34% அதிகரித்துள்ளது. ஆனால் வெளிநாட்டு ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. ஏனெனில், 2022 ஆகஸ்ட்டில் 93,111 வாகனங்களை டிவிஎஸ் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்திருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் அந்த எண்ணிக்கை சற்று குறைந்து 87,515 ஆக பதிவாகி உள்ளது. இதனை காட்டிலும், டிவிஎஸ் 3-வீலர்களின் விற்பனை கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை காட்டிலும், இந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெகுவாக குறைந்துள்ளது.

கடந்த ஆகஸ்ட்டில் டிவிஎஸ் பிராண்டில் இருந்து 13,738 மூன்று சக்கர வாகனங்கள் விற்கப்பட்டு உள்ளன. அதுவே, 2022 ஆகஸ்ட்டில் விற்கப்பட்டவை 18,248 ஆகும். டிவிஎஸ் 3-சக்கர வாகனங்கள் இந்தியாவில் ஒவ்வொரு மாதத்திலும் 1,000- 2,000 என்ற அளவில் மட்டுமே விற்பனையாகுகின்றன. 3-சக்கர வாகனங்களின் விற்பனையை பொறுத்தவரையில், வெளிநாட்டு ஏற்றுமதியை தான் டிவிஎஸ் பெரிதும் நம்பியுள்ள்ளது. டிவிஎஸ் இருசக்கர வாகனங்கள் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 3,32,110 யூனிட்கள் விற்கப்பட்டு உள்ளன.
இது 2022 ஆகஸ்ட்டில் விற்பனையான 3,15,539 டிவிஎஸ் இருசக்கர வாகனங்களை காட்டிலும் 5.25% அதிகம் ஆகும். மொத்த 3,32,110 டிவிஎஸ் 2-வீலர்களில் 2,56,619 இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். மீதி 75,491 மட்டுமே வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டவை. அதாவது, சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் உள்நாட்டில் அதன் 2-வீலர்கள் விற்பனையையே பெரிதும் சார்ந்துள்ளது.

உண்மையில், டிவிஎஸ் மோட்டாரின் உள்நாட்டு 2-வீலர் விற்பனை ஒவ்வொரு மாதமும் குறிப்பிடத்தக்க அளவில் முன்னேற்றம் கண்டு வருகிறது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் கூட 7.23% வளர்ச்சிக் கண்டு உள்ளது. டிவிஎஸ் மோட்டார்சைக்கிள்கள் 1,53,047 யூனிட்கள் கடந்த ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. 2022 ஆகஸ்ட்டில் இதனை காட்டிலும் சற்று அதிகமாக 1,57,118 டிவிஎஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் 1,42,502 யூனிட்கள் கடந்த ஆகஸ்ட்டில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
ஆனால் 2022 ஆகஸ்ட்டில் வெறும் 1,21,866 டிவிஎஸ் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன. டிவிஎஸ் ஸ்கூட்டர்களின் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணம் டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரான ஐக்யூப் ஆகும். ஏனெனில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் வெறும் 4,418 டிவிஎஸ் ஐக்யூப் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனையாகி இருந்த நிலையில், கடந்த ஆகஸ்ட்டில் சுமார் 440.67% அதிகமாக 23,887 ஐக்யூப் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டு உள்ளன. டிவிஎஸ் மொபெட் 2-வீலர்கள் கடந்த மாதத்தில் 36,561 யூனிட்கள் விற்கப்பட்டு உள்ளன.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: டிவிஎஸ் பிராண்டில் இருந்து மோட்டார்சைக்கிள்கள் அதிகம் விற்கப்படுகிறதா அல்லது ஸ்கூட்டர்கள் விற்கப்படுகிறதா என்றால் தற்போதைக்கு மோட்டார்சைக்கிள்கள் தான். ஆனால் எதிர்காலத்தில் ஸ்கூட்டர்களே டிவிஎஸ் நிறுவனத்தின் நம்பிக்கைக்குரியவைகளாக இருக்கும். இதற்கு முக்கிய பங்கு வகிக்கக்கூடியதாக ஐக்யூப் விளங்கும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









