தமிழ்நாட்டு மானத்தை காப்பாற்ற டிவிஎஸ் போதும்!! 2-வீலர்கள் விற்பனையில் கொடிக்கட்டி பறக்குது!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. அதேபோல், கடந்த மாதத்திலும் சுமார் 3 இலட்ச 2-வீலர்கள் டிவிஎஸ்-இல் இருந்து விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தை சேர்ந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஓசூரில் தொழிற்சாலையை அமைத்து செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்து உள்நாட்டு சந்தையில் தற்சமயம் 12 விதமான 2-வீலர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், புதியதாக சமீபத்தில் இணைந்தது ரோனின் ஆகும். டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து அதிகளவில் விற்பனையாகும் 2-வீலராக தொடர்ந்து முதலிடத்தில் ஜூபிட்டர் உள்ளது.

கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 83,130 ஆகும். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பரிலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான 2-வீலர்களே விற்பனை செய்யப்பட்டன. இருப்பினும் துல்லியமாக பார்த்தால், 2022 செப்டம்பரை விட கடந்த செப்டம்பரில் 736 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
ஜூபிட்டருக்கு அடுத்து டிவிஎஸ் பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட 2-வீலராக 2வது இடத்தில் ரைடர் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் மட்டுமல்லாமல், இந்தியாவிலேயே தற்சமயம் வேகமாக வாடிக்கையாளர்களை கவர்ந்து வரும் மோட்டார்சைக்கிள்களுள் ஒன்றாக ரைடர் விளங்குகிறது. சில வருடங்களுக்கு முன் அறிமுகமான இந்த பைக்கிற்கு சமீப காலமாக தான் விற்பனை அதிகரித்து வருகிறது.

எந்த அளவிற்கு என்றால், 2022 செப்டம்பரில் வெறும் 21,766 ரைடர் பைக்குகள் மட்டுமே விற்பனையாகி இருந்தன. ஆனால், கடந்த செப்டம்பர் மாதத்தில் டபுள் மடங்கு அதிகமாக 48,753 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இந்த வகையில் டிவிஎஸ் ரைடர் பைக்குகளின் விற்பனை ஆனது 123.99% அதிகரித்துள்ளது.
இதற்கடுத்து 3வது இடத்தில், டிவிஎஸ் எக்ஸ்.எல் 44,943 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளது. ஆனால், 2022 செப்டம்பரில் இதனை காட்டிலும் சற்று அதிகமாக 47,613 எக்ஸ்.எல் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. அதாவது, கடந்த 2022 செப்டம்பர் மாதத்தை காட்டிலும், கடந்த செப்டம்பர் மாதத்தில் 2,670 எக்ஸ்.எல் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிவிஎஸ் மோட்டாரின் மற்றொரு பிரபலமான ஸ்கூட்டர் மாடலான எண்டார்க் இந்த வரிசையில் 4வது இடத்தில் உள்ளது. 2022 செப்டம்பரில் 31,497 எண்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதனை காட்டிலும் 606 யூனிட்கள் அதிகமாக கடந்த செப்டம்பரில் 32,103 எண்டார்க் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, சில இருசக்கர வாகன மாடல்களின் விற்பனை அதிகரித்த போதிலும், டிவிஎஸ்-இன் அடையாளமான அப்பாச்சி பைக்குகள் விற்பனை வெகுவாக குறைந்துள்ளது.
இந்த வரிசையில், 5வது இடத்தில் உள்ள அப்பாச்சி பைக்குகள் கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தமாக 26,774 பைக்குகள் விற்பனையாகி உள்ளன. ஆனால், 2022ஆம் ஆண்டின் இதே செப்டம்பர் மாதத்தில் சுமார் 42,954 அப்பாச்சி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கு அடுத்து 6வது இடத்தில் அனைவரையும் ஆச்சிரியப்படுத்தும் விதமாக ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உள்ளது. கடந்த செப்டம்பரில் மொத்தம் 20,276 ஐக்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனமாக டிவிஎஸ் மோட்டார் தொடர்ந்து வளர்ச்சி கண்டு வருகிறது. குறிப்பாக, டிவிஎஸ் மோட்டாரின் ரைடர் பைக்குகள் விற்பனை ஆனது புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. இந்த பைக்கின் விற்பனை எவ்வாறு, எதனால் திடீரென டாப் கியருக்கு சென்றுள்ளது என்பது விளங்காத புதிராகவே உள்ளது.


Click it and Unblock the Notifications









