அப்பாச்சி பைக்குகளை கூட நிறைய பேர் வாங்குறது இல்ல!! டிவிஎஸ்-இல் இந்த பைக்கிற்கு தான் செம்ம டிமாண்ட்!
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம் என்றால் அதில் சந்தேகமே இல்லை. ஒவ்வொரு மாதத்திலும் இலட்சக்கணக்கில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். அதேபோல், இந்த நிறுவனத்தில் இருந்து வெளிநாடுகளுக்கும் ஆயிரக்கணக்கில் இருசக்கர வாகனங்கள் ஒவ்வொரு மாதமும் அனுப்பி வைக்கப்படுகின்றன.
இந்தியாவில் மட்டும் பார்த்தால், கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் மொத்தம் 3,44,957 இருசக்கர வாகனங்களை டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் வெறும் 2,75,934 இருசக்கர வாகனங்கள் மட்டுமே டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

இந்த வகையில் கடந்த மாதத்தில் டிவிஎஸ் 2-வீலர்கள் விற்பனை ஆனது 25.01%, அதாவது சுமார் 69,023 யூனிட்கள் அதிகரித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிக பேரால் வாங்கப்படும் 2-வீலர் ஜூபிட்டர் ஸ்கூட்டர் ஆகும். கடந்த அக்டோபர் மாதத்திலும் சுமார் 91,824 ஜூபிட்டர் ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு உள்ளன.
ஆனால், 2022 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 77,042 மட்டுமே ஆகும். இந்த வகையில் பார்க்கும்போது, ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை ஆனது 14,782 அதிகரித்துள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தை தேடிவரும் வாடிக்கையாளர்களுள் 4இல் ஒருவர் நிச்சயமாக ஜூபிட்டர் ஸ்கூட்டரை வாங்குவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

ஜூபிட்டருக்கு அடுத்து 2வது இடத்தில் எக்ஸ்.எல் உள்ளது. இந்த பிரபலமான மினி-பைக் கடந்த மாதத்தில் மொத்தம் 53,162 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் 44,638 எக்ஸ்.எல் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதன்படி பார்க்கும்போது, எக்ஸ்.எல் பைக்குகளின் விற்பனையும் ஏறக்குறைய 19% அதிகரித்துள்ளது.
3வது இடத்தில் ரைடர் உள்ளது. டிவிஎஸ் நிறுவனத்தில் மட்டுமில்லாமல், ஒட்டு மொத்தமாகவே மோட்டார்சைக்கிள்கள் சந்தையில் டிவிஎஸ் ரைடர் வேகமாக வளர்ச்சிக் கண்டு வருகிறது. இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்ட சமயத்தில் கூட பெரியதாக யாரும் கண்டுக் கொள்ளவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் சமீப மாதங்களாக, ஒவ்வொரு மாதத்திலும் ஏறக்குறைய 50 ஆயிரம் ரைடர் பைக்குகள் விற்பனையாகுகின்றன.

கடந்த 2023 அக்டோபர் மாதத்திலும் 47,483 ரைடர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. ஆனால், 2022 அக்டோபர் மாதத்தில் இந்த எண்ணிக்கையில் பாதியாக, வெறும் 24,153 ரைடர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இதற்கடுத்து 4வது இடத்தில் அப்பாச்சி பைக்குகள் உள்ளன. ரைடர் பைக்குகளின் எழுச்சி, அப்பாச்சி பைக்குகளின் வீழ்ச்சி என்றுதான் சொல்ல வேண்டும்.
ஏனெனில், ஒவ்வொரு மாதமும் அப்பாச்சி பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை குறைந்துக் கொண்டே வருகிறது. இருப்பினும், கடந்த அக்டோபர் மாதத்திலும் எப்படியோ 39,187 அப்பாச்சி பைக்குகளை டிவிஎஸ் விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022 அக்டோபரில் ஏறக்குறைய 41 ஆயிரம் அப்பாச்சி பைக்குகளை டிவிஎஸ் விற்பனை செய்திருந்தது. இதற்கடுத்து 5வது இடத்தில் எண்டார்க் ஸ்கூட்டர் 34,476 யூனிட்கள் விற்பனை உடன் உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் மோட்டாரின் அடையாளமே அதன் எக்ஸ்.எல் மற்றும் அப்பாச்சி பைக்குகள் தான். ஆனால், இதில் அப்பாச்சி பைக்குகள் மெல்ல, மெல்ல தனது ஆதிக்கத்தை இழந்து வருவது போல் தெரிகிறது. ஆனால், இதனை முன்னரே அறிந்தாற்போல் டிவிஎஸ் நிறுவனம் ரைடர் பைக்கை அறிமுகப்படுத்திவிட்டது. இதனால், வருங்காலங்களில் ரைடர் பைக்குகளிலும் பல்வேறு விதமான சிசி என்ஜின்களை எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications









