TVS Raider பைக்கின் மலிவு விலை தேர்வு அறிமுகம்.. ஹோண்டா சிபி ஷைனை இருந்த தடம் தெரியாம அழிக்க வந்த வில்லன்!
இந்தியாவின் மலிவு விலை ஸ்போர்டி லுக் கொண்ட இருசக்கர வாகன மாடல்களில் ரைடர் (Raider)-ம் ஒன்று. இது ஓர் டிவிஎஸ் (TVS) நிறுவன தயாரிப்பாகும். இந்த இருசக்கர வாகன மாடலிலேயே டிவிஎஸ் தற்போது ஒற்றை துண்டு அமைப்புடைய இருக்கை (Single Seat Version) தேர்வை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.
முன்பு இரட்டை துண்டு அமைப்புடைய இருக்கை (Split Seat) தேர்வில் மட்டுமே ரைடர் விற்பனைக்குக் கிடைத்து வந்தது. இப்போது வாடிக்கையாளர்களின் கவனத்தை கூடுதலாக ஈர்க்கும் பொருட்டு இந்த புதிய இருக்கை தேர்வில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது, டிவிஎஸ். இன்னும் தெளிவாகக் கூற வேண்டும் என்றாலும் மேலும் குறைவான விலையில் ரைடர் பைக்கை வாங்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு ஏதுவாக இந்த தேர்வை டிவிஎஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஆமாங்க, இரட்டை துண்டு அமைப்புடைய இருக்கையைக் கொண்ட ரைடரைக் காட்டிலும் இந்த ஒற்றைத் துண்டு இருக்கை, குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும். ஆயிரம் ரூபாய் குறைவான விலையிலேயே அது விற்பனைக்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றது. அறிமுகமாக ஒற்றை நீள இருக்கை அமைப்பைக் கொண்ட டிவிஎஸ் ரைடருக்கு ரூ. 93,719 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மற்ற தேர்வுகளான ஸ்பிளிட் டைப் இருக்கைக்கு ரூ. 94,719-ம், எஸ்எக்ஸ் தேர்விற்கு ரூ. 1 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இவையும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை குறைப்பிற்காக இருக்கையில் மாற்றம் கொண்டு வந்ததைபோல் சிறப்பம்சம் விஷயத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்குமா என உங்களுக்கு கேட்கத் தோன்றலாம்.

ஆனால், இதில் எந்த மாற்றத்தையும் டிவிஎஸ் செய்யவில்லை. ஸ்பிளிட் சீட் தேர்வில் இடம் பெற்றிருக்கும் அனைத்து அம்சங்களும் சிங்கிள் சீட் ரைடரிலும் இடம் பெற்றிருக்கும். எல்சிடி திரை உள்ளிட்ட அம்சங்களை சிங்கிள் சீட் ரைடரில் நம்மால் காண முடிகின்றது. அதேவேளையில், ரைடரின் உயர்நிலை தேர்வான எஸ்எக்ஸ்-இல் ஸ்மார்ட் எக்ஸோன்னக்ட் தொழில்நுட்பத்துடன் கூடிய 5 அங்குல தொடுதிரை வழங்கப்பட்டு இருக்கும்.
இதுபோன்று நவீன தொழில்நுட்ப வசதிகளை கூடுதலாக கொண்டிருக்கின்ற காரணத்தினாலேயே எஸ்எக்ஸ் தேர்வின் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கின்றது. எஞ்ஜினை பொருத்தவரை அனைத்து வேரியண்டுகளும் ஒரே மாதிரியானதாகவே இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 124.8 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே ரைடரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.4 பிஎச்பி பவரையும், 11.2 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். இந்த மோட்டாரில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸே இணைக்கப்பட்டு உள்ளது. சிறந்த ரைடிங் அனுபவத்தை பெற்றுக் கொள்ளும் விதமாக பவர் மற்றும் ஈகோ என இரு விதமான ரைடிங் மோட்கள் ரைடரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
இதில் ஈகோ மோடில் பயணிக்கும்போதே நல்ல மைலேஜை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். தொடர்ந்து, சௌகரியமான ரைடிங் அனுபவத்திற்காக இருசக்கர வாகனத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் சஸ்பென்ஷன்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன. இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக 240 மிமீ டிஸ்க்கு முன் பக்கத்திலும், 130 மிமீ டிரம் பிரேக் பின் பக்கத்திலும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
டிவிஎஸ் ரைடரின் டாப் ஸ்பீடு மணிக்கு 99 கிமீ ஆகும். இது வெறும் 5.9 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ எனும் வேகத்தை எட்டிவிடும் திறன் கொண்டது. கிளாமர் எக்ஸ்டெக், ஹோண்டா சிபி ஷைன் எஸ்பி உள்ளிட்ட இருசக்கர வாகனங்களுக்கு போட்டியாகவே இந்திய சந்தையில் டிவிஎஸ் ரைடர் விற்பனையில் இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
டிவிஎஸ் ரைடர் சிங்கிள் சீட் தேர்வு பட்ஜெட் விலையில் இருசக்கர வாகனங்களை வேண்டும் என நினைப்பவர்களுக்காகவே பிரத்யேகமாக களமிறக்கப்பட்டு இருக்கின்றது. பெரிய அளவில் இல்லை என்றாலும் ஆயிரம் ரூபாய் வரை குறைத்துக் கொள்ள முடியும் என்பது சிலருக்கு மிகப் பெரிய சேமிப்பாக தெரியலாம். இத்தகையோரை புதுமுக தேர்வு நிச்சயம் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








