தமிழ்நாட்டில் தயாரிக்கப்படும் வாகனங்களுக்கு இதைவிட என்ன பெருமைங்க வேணும்!! டிவிஎஸ் சாதிச்சுடுச்சு
டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் அதன் சமீபத்திய மாடர்ன் மோட்டார்சைக்கிளான ரோனினை இந்தோனிஷியா நாட்டு சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த மாடர்ன் டிவிஎஸ் பைக்கை பற்றியும், இந்தோனிஷயா நாட்டு சந்தைக்காக பைக்கில் ஏதேனும் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளனவா என்பதை பற்றியும் இனி பார்க்கலாம்.
இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களுள் ஒன்று டிவிஎஸ் மோட்டார் ஆகும். தமிழகத்தை சேர்ந்த இந்த நிறுவனத்திற்கு ஓசூரில் தொழிற்சாலை உள்ளது. இந்தியா மிக பெரிய சந்தையாக இருப்பதால், நம் நாட்டில் முன்னணியில் இருக்கும் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உலகளவிலும் மிக பெரிய நிறுவனங்களாக விளங்குவது வழக்கமே.

இதற்கு சிறந்த உதாரணமாக ஹீரோ மோட்டோகார்ப்பை சொல்லலாம். அதேபோல், டிவிஎஸ் மோட்டாரும் பல்வேறு வெளிநாடுகளில் சந்தையை விரிவு செய்து, உலகின் பெரிய 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனிஷியாவில் தனது சந்தையை விரிவுப்படுத்தும் முனைப்பில் பிடி டிவிஎஸ் மோட்டார் உள்ளது.
இதன் வெளிப்பாடாகவே தற்போது ரோனின் மோட்டார்சைக்கிளை இந்தோனிஷியா நாட்டு சந்தையில் பிடி டிவிஎஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுவரையில் விலை குறைவான, பட்ஜெட் விலை 2-வீலர்களை மட்டுமே இந்தோனிஷியாவில் விற்பனை செய்துவந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ரோனின் மோட்டார்சைக்கிளின் அறிமுகத்தின் மூலமாக முதல்முறையாக பிரீமியம் தர மோட்டார்சைக்கிள் சந்தையில் நுழைந்துள்ளது.
இந்தோனிஷியா நாட்டு சந்தையில் டிவிஎஸ் ரோனின் பைக் எஸ்.எஸ் (SS) மற்றும் டிடி (TD) என்ற 2 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் எஸ்.எஸ் வேரியண்ட் சிங்கிள்-டோன் பெயிண்ட்டில் சிங்கில்-சேனல் ஏபிஎஸ் உடன் விற்பனை செய்யப்பட உள்ளது. சிங்கிள்-டோன் மற்றும் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் என்பதன் சுருக்கமே எஸ்.எஸ் ஆகும்.

மறுப்பக்கம், டிடி வேரியண்ட் எதிர்மாறாக டிரிபிள்-டோன் பெயிண்ட்டில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் உடன் கிடைக்கவுள்ளது. இந்தோனிஷியாவில், டிவிஎஸ் மோட்டாரின் விற்பனை மையங்களில் ரோனின் பைக்கை இந்த ஜூலை மாதத்தில் இருந்தே வாடிக்கையாளர்கள் டெலிவிரி பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிவிஎஸ் மோட்டாரின் ரெட்ரோ-ஸ்டைல் மாடர்ன் பைக்காக விளங்கும் ரோனின் இந்தியாவில் கடந்த 2022 ஜூலை மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பிறகு இந்தோனிஷியாவில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் ரோனின் பைக்கில் 225சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 20.1 எச்பி மற்றும் 19.93 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், இந்தோனிஷியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ரோனின் பைக்கிலும் மழை மற்றும் அர்பன் ஏபிஎஸ் என 2 விதமான ரைடிங் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
அத்துடன், க்ளைட் த்ரூ டெக்னாலஜி மற்றும் ஸ்மார்ட் ப்ளூடூத் இணைப்பு வசதி போன்றவற்றையும் இந்த பைக்கில் டிவிஎஸ் வழங்குகிறது. இதில் ஓட்டுனரின் குரல் கட்டுப்பாட்டின் மூலம் செயல்படும் ஸ்மார்ட் ப்ளூடூத் இணைப்பு வசதி பயணத்தின்போது தேவையான உதவிகளை வழங்கக்கூடியது. இதற்காக டிவிஎஸ் ஸ்மார்ட்எக்ஸோனெக்ட் மொபைல் செயலி பயன்பாட்டில் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் டிவிஎஸ் ரோனின் பைக்கின் விற்பனை பெரிய அளவில் இல்லாததை செல்லித்தான் ஆக வேண்டும். தற்போது விற்பனையில் ஜொலிக்க ஆரம்பித்துள்ள ரைடர் பைக்கை போன்று ரோனினின் விற்பனையும் வரும் மாதங்களில் வளர்ச்சி காணலாம். இதற்கிடையில், இந்தோனிஷியா நாட்டு சந்தைக்கு ரோனின் பைக் சரியாக இருக்கும் என்ற எண்ணத்தில் டிவிஎஸ் அறிமுகப்படுத்தி உள்ளதாகவே நாங்கள் பார்க்கிறோம்.


Click it and Unblock the Notifications








