ராயல் என்பீல்டுக்கு போட்டியாக டிவிஎஸ் களமிறக்கும் புதிய பைக்! மொத்த கூட்டமும் அந்த பக்கம் சாய போகுது!
மிகவும் பிரபலமான ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் பைக்குகளுக்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது. குறிப்பாக ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சிசி இன்ஜின் திறன் கொண்ட பைக்குகளுக்கு என தனியாக ஏராளமான ரசிகர்கள் இருந்து வருகின்றனர்.
ராயல் என்பீல்டு நிறுவனத்தின் இன்டர்செப்டார் 650 (Interceptor 650), கான்டினென்டல் ஜிடி 650 (Continental GT 650) மற்றும் சூப்பர் மீட்டியோர் 650 (Super Meteor 650) ஆகிய 650 சிசி பைக்குகள் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இதில், ராயல் என்பீல்டு சூப்பர் மீட்டியோர் 650 வெகு சமீபத்தில்தான் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது.

இந்த சூழலில், ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 650 சிசி பைக்குகளுக்கு போட்டியாக, புதிய பைக் ஒன்றை உருவாக்கும் பணிகளில் டிவிஎஸ் (TVS) நிறுவனம் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. ராயல் என்பீல்டு நிறுவனம் வரும் காலங்களில் இன்னும் பல்வேறு 650 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
650 சிசி பைக்குகளை விற்பனை செய்வதன் மூலம் நல்ல லாபம் ஈட்ட முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவேதான் ராயல் என்பீல்டு நிறுவனம் தொடர்ச்சியாக 650 சிசி பைக்குகளை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இதை புரிந்து கொண்டுள்ள டிவிஎஸ் நிறுவனமும், ராயல் என்பீல்டு உடன் நேருக்கு நேராக மோத முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய 650 சிசி பைக்கை உருவாக்குவதற்காக, ஐரோப்பிய நிறுவனம் ஒன்றுடன் டிவிஎஸ் கூட்டணி அமைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய பைக் 600 - 750 சிசி திறன் கொண்டதாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அத்துடன் இந்த பைக்கில் வழங்கப்படவிருப்பது, ட்வின் சிலிண்டர் இன்ஜின் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கான பணிகள் ஏற்கனவே வேகம் எடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், டிவிஎஸ் நிறுவனம் இன்னமும் மௌனம் சாதித்து வருகிறது. எனவே டிவிஎஸ் நிறுவனத்தின் இந்த புதிய பைக் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் கூடிய விரைவில் இந்த புதிய பைக்கை எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே ராயல் என்பீல்டு நிறுவனத்தின் 350 சிசி பைக்குகளுடன் மோதுவதற்கு பல்வேறு நிறுவனங்களும் முயன்று, தோல்வியடைந்து விட்டன. இந்திய சந்தையில் சற்றும் அசைக்க முடியாதபடி, ராயல் என்பீல்டு நிறுவனம் மிகப்பெரிய அளவில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த சூழலில்தான் 650 சிசி செக்மெண்ட்டில் ராயல் என்பீல்டு உடன் மோதுவதற்கு டிவிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த தகவல்கள் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை டிவிஎஸ் நிறுவனம் வெகு விரைவில் வெளியிடும் என நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். அதனை தெரிந்து கொள்வதற்கு டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்.


Click it and Unblock the Notifications








