டிஎஃப்டி திரையும், ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு வசதியும் இந்த ஸ்கூட்டர்ல இடம்பெற போகுது! ஆக்டிவா, ஓலா விற்பனையாகுமா
பிரபல இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான டிவிஎஸ் (TVS), வெகு விரைவில் இந்திய மின்வாகன சந்தையில் ஓர் புதுமுக இருசக்கர வாகனத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. அந்த புதுமுக வாகனம் கிரியான் (Creon) எனும் மாடாலை தழுவியதாக இருக்கும் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
கிரியான், இது ஓர் கான்செப்ட் (Concept) மாடலாகும். டிவிஎஸ் நிறுவனம் 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவிலேயே இந்த வாகனத்தை முதல் முறையாக காட்சிப்படுத்தியது. அந்த முதல் பார்வையிலேயே பலரின் கவனத்தை கிரியான் கவர்ந்துவிட்டது. இதை அடிப்படையாகக் கொண்டே டிவிஎஸ் நிறுவனம் தற்போது தன்னுடைய புதிய இருசக்கர வாகனத்தை உருவாக்கி இருக்கின்றது.

இதையே கூடிய விரைவில் அது பொதுப் பார்வைக்கும் கொண்டு வர இருக்கின்றது. விரைவில் விற்பனைக்குக் கொண்டு வரும் ஓர் முயற்சியாக இந்த பணிகளில் டிவிஸ் தற்போது தீவிரம் காட்டியிருக்கின்றது. இந்த நிலையிலேயே புதிய வாகனத்தின் பக்கம் இருசக்கர வாகன காதலர்களை ஈர்க்கும் பொருட்டு, அதில் இடம் பெற இருக்கும் சில முக்கிய அம்சங்களின் படங்களை டீசர் படத்தின் வாயிலாக வெளியிட்டு இருக்கின்றது, டிவிஎஸ்.
இதன் வாயிலாக விரைவில் அறிமுகமாக இருக்கும் புதுமுக வாகனத்தில் டிஎஃப்டி திரை மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு உள்ளிட்ட மிக சூப்பர் சூப்பரான அம்சங்கள் எல்லாம் இடம் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது. இந்த அம்சங்களே ஓலாவின் புகழ்பெற்ற எஸ்1 ப்ரோ எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு மிக சிறந்த போட்டியாளனாக அதை மாற்றி இருக்கின்றது.
ஸ்மார்ட் வாட்சை இந்த வாகனத்தில் இணைக்க முடியும் என்பதால், அந்த ஸ்மார்ட் வாட்ச்சையே நம்மால் ரிமோட்டாக பயன்படுத்த முடியும் என்பது தெளிவாக தெரிகின்றது. அதாவது, வாகனத்தை லாக் செய்தல், அன்லாக் செய்தல் மற்றும் பூட்டை திறத்தல், மூடுதல் உள்ளிட்டவற்றை ஸ்மார்ட்வாட்ச் வாயிலாக செய்துக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுபோன்று இன்னும் பல சிறப்பு வசதிகளுடன் இந்த வாகனம் விற்பனைக்கு வர இருக்கின்றது. ஆனால், என்னென்ன மாதிரியான சிறப்பு அம்சங்களை எல்லாம் அந்த வாகனம் பெற இருக்கின்றது என்கிற முழுமையான விபரம் இதுவரை வெளியிடப்படவில்லை. அறிமுகத்தின்போது இதுகுறித்த அனைத்து விபரங்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
அதேவேளையில், இருசக்கர வாகன பிரியர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக டிவிஎஸ் நிறுவனம் வெளியிட்ட டீசர் படங்கள் வாயிலாக இந்த புதுமுக வாகனம் ஸ்போர்ட்டியான தோற்றத்தில் வர இருப்பதும், எல்இடி ஹெட்லேம்ப் மற்றும் கவர்ச்சியான இன்னும் பல அம்சங்களைப் பெற இருப்பது உறுதியாகி இருக்கின்றது.
டிவிஎஸ் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவின் மின்சார இருசக்கர வாகன சந்தையில் ஐக்யூப் எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதைத்தொடர்ந்தே இரண்டாவது தயாரிப்பையும் விற்பனைக்குக் கொண்டு வரும் முயற்சியில் டிவிஎஸ் களமிறங்கி இருக்கின்றது. தற்போது இந்திய மின்சார இருசக்கர வாகன உலகின் தலைவனாக மாறி இருக்கின்ற ஓலா, எஸ்1, எஸ்1 ப்ரோ, எஸ்1எக்ஸ், எஸ்1 ஏர் என பலதரப்பட்ட மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
மேலும், தன்னுடைய தயாரிப்புகளை இன்னும் கூடுதலாக விரிவாக்கம் செய்யும் விதமான பணியில் ஈடுபட்டு வருகின்றது. அடுத்ததாக எலெக்ட்ரிக் பைக்கையும், அதற்கு அடுத்ததாக எலெக்ட்ரிக் காரையும் ஓலா அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே டிவிஎஸ் தற்போது இரண்டாவது தயாரிப்பை இந்தியாவில் அறிமுகம் செய்யும் பணியில் களமிறங்கி இருக்கின்றது. இதுவும் ஐக்யூப்பை போல அதிகம் பிரீமியம் வசதிகள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டிவிஎஸ் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கும் இந்த புதிய டூ-வீலர் மாடலுக்கு இந்தியாவில் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் காணப்படுகின்றது. ஆகையால், இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஓலாவின் மின்சார வாகனங்களுக்கு, ஏன், ஹோண்டா ஆக்டிவாவிற்குகூட போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








