டூவீலர்ல பின்னாடி உக்காந்து போகும்போது கை எங்க இருக்கணும் தெரியுமா? இதுக்கு பின்னால இவ்ளோ பெரிய விஷயம் இருக்கா
டூவீலர்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்களை பில்லியன் ரைடர் (Pillion Rider) என்பார்கள். தற்போது வரை டூவீலர்களில் பின்னால் அமர்ந்து செல்வதை நாம் அனைவரும் மிகவும் சாதாரணமான ஒரு விஷயமாகதான் நினைத்து கொண்டிருக்கிறோம். ஆனால் உண்மை வேறு விதமாக உள்ளது. பில்லியன் ரைடர்கள் செய்யும் சிறு சிறு விஷயங்கள் பெரும் விபத்துக்களுக்கு காரணமாகின்றன.
அந்த விஷயங்களை எல்லாம் தவிர்த்தால் மட்டுமே நீங்கள் சிறந்த பில்லியன் ரைடர்-ஆக இருக்க முடியும். எனவே டூவீலர்களில் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்ய கூடாது? என்பதை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம். இந்த விஷயங்களை எல்லாம் நீங்கள் மனதில் வைத்து செயல்பட்டால், சாலை விபத்துக்களை பெரும் அளவிற்கு தவிர்க்க முடியும். எனவே சிறிய விஷயம்தானே என அலட்சியமாக இருக்க வேண்டாம்.

இப்படிதான் பிடிக்கணுமா!
பொதுவாக டூவீலர்களின் பின்னால் 'க்ராப் ரெயில்' இருக்கும். பில்லியன் ரைடர்கள் பிடித்து கொள்வதற்காகவே 'க்ராப் ரெயில்'வழங்கப்படுகிறது. ஒருவேளை டூவீலரை ஓட்டும் நபரை பிடிக்க வேண்டியதாக இருந்தால், எப்படி பிடிக்க வேண்டும்? என்ற முறை உள்ளது. இதன்படி உங்கள் கைகள் டூவீலரை ஓட்டுபவரின் இடுப்பை சுற்றி பிடித்து கொண்டிருக்க வேண்டும். அதுவும் தளர்வாகதான் இருக்க வேண்டும். இறுக்கமாக பிடித்தால், டூவீலரை ஓட்டுபவருக்கு அசௌகரியம் ஏற்படும்.
ஆனால் ஒரு சில பில்லியன் ரைடர்கள், டூவீலரை ஓட்டுபவரின் தோள் பட்டைகளில் கைகளை போட்டு கொண்டு பயணம் செய்கின்றனர். இது முற்றிலும் தவறான விஷயம் என்பதை அனைவரும் உணர வேண்டும். ஏனெனில் உங்கள் கைகள் தோள் பட்டையில் இருந்தால், டூவீலரை ஓட்டுபவரால் உடலை சுதந்திரமாக இயக்க முடியாது. இது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும். எனவே இனிமேல் டூவீலர் ஓட்டுபவரின் இடுப்பை சுற்றி பிடித்து கொள்வதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

இந்த பொறுப்பு உங்களுக்கும் இருக்கு!
டூவீலர்களில் 2 சக்கரங்கள் மட்டுமே இருக்கும். எனவே எடை பகிர்மானத்தில் சிறிய மாற்றம் நிகழ்ந்தால் கூட விபத்துக்கள் ஏற்படலாம். எனவே உங்கள் உடலை தேவையில்லாமல் அசைப்பதை தவிர்த்து விடுங்கள். நீங்கள் உடலை தேவையில்லாமல் அசைத்தால், பேலன்ஸ் பாதிக்கப்படும். அத்துடன் டூவீலரை ஓட்டுபவரின் கவனமும் சிதறி விடும். டூவீலரின் பேலன்ஸ் பாதிக்கப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு, ஓட்டுபவருக்கு மட்டுமானது அல்ல. பில்லியன் ரைடருக்கும் அந்த பொறுப்பு உள்ளது.
சொல்லீட்டு பண்ணுங்க!
ஆனால் அசையாமல் வர முடியாது என்பதிலும் உண்மை இருக்கவே செய்கிறது. நீங்கள் அசௌகரியமாக உணர்ந்தாலோ, அசைய வேண்டிய தேவை ஏற்பட்டாலோ, டூவீலரை ஓட்டுபவருக்கு தெரியப்படுத்துங்கள். அதன்பின் டூவீலரை நிறுத்தி, உங்கள் தேவைகளை நிறைவேற்றி கொள்ளலாம். டூவீலரை ஓட்டுபவருக்கு தெரியாமல் நீங்கள் திடீரென அசைவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், அது சாலை விபத்துக்களுக்கு வழிவகுக்கும் என்பது எப்போதும் உங்கள் மனதில் இருக்க வேண்டும்.
அட சாயாம வாங்கப்பா!
அதேபோல் உங்கள் உடல் எடையை டூவீலரை ஓட்டுபவர் மேல் திணிக்காதீர்கள். ஒரு சில பில்லியன் ரைடர்கள், டூவீலரை ஓட்டுபவரின் முதுகில் சாய்ந்து கொண்டு செல்கிறார்கள். அத்துடன் டூவீலரை ஓட்டுபவர் பிரேக் பிடிக்கும்போதும், அவர் மேல் திடீரென வேகமாக சாய்கிறார்கள். இவை எல்லாம் விபத்துக்களுக்கு காரணமாக அமையலாம். க்ராப் ரெயிலை இறுக்கமாக பிடித்து கொள்வதன் மூலம் இந்த பிரச்னைகளை எல்லாம் தவிர்க்கலாம்.
இந்த 3 விஷயங்களையும் பண்ண கூடாது!
இவை எல்லாம் தவிர பின்னால் உட்கார்ந்து கொண்டு தூங்கி கொண்டே செல்வது, சாலையில் ஏதாவது வித்தியாசமான ஒன்றையோ அல்லது ஆச்சரியமான ஒன்றையோ பார்த்தால் உடனே டூவீலரை ஓட்டுபவரை அங்கே பார்... அங்கே பார் என கவனத்தை திசை திருப்புவது போன்ற செயல்களிலும் ஈடுபட வேண்டாம். அத்துடன் குடிபோதையில் இருக்கும்போது டூவீலரை ஓட்டுவதை தவிர்ப்பதுடன், டூவீலரின் பின்னால் உட்கார்ந்து கொண்டு பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். இது உங்கள் மூளையை மழுங்கடிக்க செய்து, விபத்துக்களில் சிக்க வைத்து விடும். இந்த பாதுகாப்பு டிப்ஸ்கள் (Safety Tips) உங்களுக்கு பயன் அளிக்கும் என நம்புகிறோம்.


Click it and Unblock the Notifications








