ஒரே மாதத்தில் 3 இலட்சம் பேர் வாங்கிய பைக்... ஹோண்டா ஆக்டிவா கூட 2வது இடத்தில்தான்!
ஹீரோ ஸ்பிளெண்டர் (Hero Splendor) பைக் தான் இன்னும் சில காலத்திற்கு இந்தியாவின் நம்பர் ஒன் பைக்காக விளங்கும் என்பதை வெளிக்காட்டும் விதமாக கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் இந்தியாவில் விற்பனையான டாப்-10 இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன.
உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையான இந்தியாவில் இருசக்கர வாகனங்களை வாங்குவதற்கே அதிக வாடிக்கையாளர்கள் உள்ளனர். நம் நாட்டின் பொருளாதார நிலைமை அவ்வாறானதாக உள்ளது. கார்கள் விற்பனையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது என்றாலும், இருசக்கர வாகனங்களின் விற்பனை அதனை காட்டிலும் வேகமாக அதிகரித்து வருகிறது.

கடந்த 2023 செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவின் சிறந்த விற்பனை இருசக்கர வாகனமாக ஹீரோ ஸ்பிளெண்டர் 3,19,692 யூனிட்களின் விற்பனை உடன் முதலிடத்தை பிடித்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் சற்று குறைவாக 2,90,649 ஸ்பிளெண்டர் பைக்குகளை மட்டுமே ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில், ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை 9.99% அதிகரித்துள்ளது.
அதேபோல், கடந்த 2023 ஆகஸ்ட் மாதத்திலும் 2,89,930 ஸ்பிளெண்டர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 2-வீலராக ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் 2வது இடத்தை பிடித்துள்ளது. ஆனால், ஆக்டிவா ஸ்கூட்டர்களின் விற்பனை 2022 செப்டம்பரை விட, கடந்த செப்டம்பர் மாதத்தில் கணிசமாக குறைந்துள்ளது.

ஏனெனில், 2022 செப்டம்பரில் 2,45,607 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் அதனை காட்டிலும் 4.30% குறைவாக 2,35,056 ஆக்டிவா ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 3வது இடத்திலும் ஹோண்டா தயாரிப்பாக, ஷைன் மோட்டார்சைக்கிள் உள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ள ஷைன் பைக்குகளின் எண்ணிக்கை 1,61,544 ஆகும்.
ஆனால், 2022 செப்டம்பரில் 1.45 லட்சம், கடந்த 2023 ஆகஸ்ட்டில் 1.48 லட்ச ஷைன் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஹோண்டா ஷைனை தொடர்ந்து 4வது இடத்தில் பஜாஜ் பல்சர் பைக்குகள் 1,20,126 யூனிட்களின் விற்பனை உடன் உள்ளன. 2022 செப்டம்பரிலும் பல்சர் பைக்குகளின் விற்பனை 1 இலட்சத்தை தாண்டியது என்றாலும், கடந்த 2023 ஆகஸ்ட்டில் 90,685 பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்திருந்தது.

இந்த லிஸ்ட்டில் 5வது மற்றும் 6வது இடங்களில் ஹீரோ மோட்டோகார்பின் எச்.எஃப் டீலக்ஸ் பைக்கும், டிவிஎஸ் மோட்டாரின் ஜூபிட்டர் ஸ்கூட்டரும் உள்ளன. இவற்றின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 84,118 மற்றும் 83,130 ஆகும். இதில், எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் 2022 செப்டம்பரில் 93,596 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ஜூபிட்டர் ஸ்கூட்டர்களின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை, கடந்த சில வருடங்களாக ஒரே மாதிரியாகவே தொடர்கிறது.
ஜூபிட்டரை போன்று பிரபலமான ஸ்கூட்டரான சுஸுகி ஆக்ஸஸ் 57,041 யூனிட்கள் விற்பனை உடன் 7வது இடத்தை தனதாக்கி உள்ளது. ஆனால், 2022ஆம் ஆண்டில் ஆக்ஸஸ் ஸ்கூட்டர்கள் 46,851 என்ற அளவிலேயே விற்பனையாகி இருந்தன. ஆக்ஸஸுக்கு அடுத்து 8வது மற்றும் 9வது இடங்களில் கிட்டத்தட்ட ஒரே அளவிலான விற்பனை எண்ணிக்கைகளுடன் டிவிஎஸ் ரைடர் மற்றும் பஜாஜ் பிளாட்டினா பைக்குகள் உள்ளன. கடைசி 10வது இடத்தில் டிவிஎஸ் எக்ஸ்.எல் உள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த வருடங்களில் 2.50 இலட்சம் என்ற அளவில் பதிவாகி வந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கின் விற்பனை சமீப காலமாக 3 இலட்சத்தை நெருங்கி வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்தில் வெற்றிக்கரமாக 3 இலட்சத்தை கடந்துள்ளது. ஸ்பிளெண்டரை போல் இந்த லிஸ்ட்டில் நம்மை கவரக்கூடிய மற்றொரு பைக் டிவிஎஸ் ரைடர் ஆகும். சமீப மாதங்களில் இந்த டிவிஎஸ் பைக்கை நிறைய பேர் வாங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications
