udChalo Launches VirBike இ-சைக்கிள்.. இப்படி ஒரு சைக்கிளை இதுக்கு முன்னாடி இந்தியா பாத்தே இருக்காது..
முன்னணி நுகர்வோர் தொழில்நுட்ப நிறுவனம் யுடி-சலோ (udChalo). இந்த நிறுவனமே விர் பைக் (Vir Bike) எனும் மின்சார மிதிவண்டியை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்திய ஆயுத படையால் ஈர்க்கப்பட்ட இ-சைக்கிள் இதுவாகும். இன்னும் புரியும்படி கூற வேண்டும் என்றால், இந்திய பாதுகாப்பு படை வீரர்களின் வீரத்தை மையப்படுத்தியே இந்த இ-சைக்கிளை யுடிசலோ நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது.
இந்தியா ஓர் பன்முக புவி அமைப்பைக் கொண்ட நாடு ஆகும். குறிப்பாக எல்லை பகுதிகள் மக்கள் வசிக்க துளியளவும் உகந்ததல்ல. வெயில், குளிர் மற்றும் மழை என அனைத்தும் அங்கு ஆக்ரோஷமானதாக இருக்கும். இத்தகைய பகுதியிலேயே, அதாவது கடும் குளிர், மழை மற்றும் வெயில் ஆகியவற்றை பொருட்படுத்தாமல் நாட்டிற்காக தங்களின் உயிரை பணயம் வைத்து பாதுகாப்பு பணியில் வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த மாதிரியான ஓர் வீரனை போலவே விர்-பைக் வடிவமைக்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது. அதாவது, எந்த மாதிரியான கடினமான சூழ்நிலைகளையும் தாங்கும் விதமாக விர்-பைக் எலெக்ட்ரிக் சைக்கிள் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் விர்பைக் எனும் பெயருக்கு பின்னால் இயற்பியலின் ஓம் விதி உள்ளது.
வோல்டேஜ், மின்சாரம் மற்றும் ரெசிஸ்டன்ஸ் ஆகியவற்றைக் குறிக்கக் கூடிய ஓர் சொல்லாக விர் இயற்பியலில் பயன்படுத்தப்படுகின்றது. இதனையே இ-சைக்கிளின் பெயரில் யுடிசலோ பயன்படுத்தி இருக்கின்றது. அதேவேளையில், விர் எனும் பெயருக்கு மற்றுமொரு அர்த்தமும் இருக்கின்றது. வீரன் என்பதே அதன் பொருள் ஆகும்.

இத்தகைய பன்முக பொருளைக் கொண்ட பெயரையே தனது எலெக்ட்ரிக் மிதிவண்டிக்கு யுடிசலோ தேர்வு செய்திருக்கின்றது. இந்த சைக்கிளை வெறும் ஈகோ-ஃப்ரெண்ட்லி வாகனமாக மட்டுமே அது தயாரிக்கவில்லை. பாக்கெட் ஃப்ரெண்ட்லீ வண்டியாகவும் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது. விர்-பைக் பிரத்யேகமாக சரக்குகளை ஏற்றும் விதமாக வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
டெலிவரி சேவையில் இதை பயன்படுத்தும்போது அதிக லாபத்தை ஈட்டிக் கொள்ள முடியும். மேலும், இதை பயன்படுத்த நம்பர் பிளேட், டிரைவிங் லைசென்ஸ் உள்ளிட்ட எந்த ஆவணங்களும் தேவைப்படாது. இதுமட்டுமில்லைங்க இந்த வாகனத்தை பயன்படுத்துவதன் வாயிலாக ஆண்டுக்கு 240 கிலோகிராம் கார்பன் வெளியீட்டைத் தவிர்க்க முடியும்.
எனவே சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் இந்த சைக்கிள் மிக முக்கியமான பங்களிப்பை வழங்கும் என தெளிவாக தெரிகின்றது. விர் பைக் மிகவும் ஸ்டைலான மற்றும் மெல்லிய தோற்றமுடைய எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இதனை கவர்ச்சிகரமான ஐந்து விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க யுடிசலோ திட்டமிட்டு இருக்கின்றது.
ஆலிவ் கிரீன் எடிசன் (Olive Green edition) சிறப்பு நிற தேர்வையும் இதில் விற்பனைக்கு வழங்க இருப்பாக நிறுவனம் தெரிவித்திருக்கின்றது, யுடிசலோ. ஆனால் இந்த நிற தேர்வை பிரத்யேகமாக பாதுகாப்பு படை வீரர்களுக்கு மட்டுமே விற்பனைக்கு வழங்க இருப்பதாக நிறுவனம் கூறியிருக்கின்றது.
அனைவரும் இ-சைக்கிளை சுலபமாக நாட வேண்டும் என்பதற்காக சுலப இஎம்ஐ திட்டத்திலும் இதனை விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. விர்பைக் தளத்தின் வாயிலாக மின்சார மிதி வண்டியை வாடிக்கையாளர்களால் வாங்கிக் கொள்ள முடியும். இ-சைக்கிளின் பக்கம் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக ஒரு வருட வாரண்டியை சைக்கிளுக்கு வழங்க இருப்பதாக யுடிசலோ தெரிவித்து இருக்கின்றது.
மேலும், நாடு முழுவதும் சர்வீஸ் செய்து கொள்ள ஏதுவாக தன்னுடைய நெட்வொர்க்கை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலும் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதன் வாயிலாக கூடுதலாக வாடிக்கையாளர்களை ஈர்க்க முடியும். இதனை வழக்கமான வாடிக்கையாளர்களுக்கு ரூ. 27,995 க்கும், ராணுவ வீரர்களுக்கு ரூ. 25,995க்கும் விற்பனைக்கு வழங்க நிறுவனம் திட்டமிட்டு இருக்கின்றது.
ஐபி 65 மற்றும் 67 தரத்திற்கு ஏற்ப விர்பைக் இ-சைக்கிள் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. மேலும், சைக்கிளின் உருவாக்கத்தில் இலகு ரக எடைக் கொண்ட ஃப்ரேமும், டிஸ்க் பிரேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதன் டிஸ்க் பிரேக்குடன் எலெக்ட்ரிக் கட்-ஆஃப் அம்சமும் கொடுக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, அட்ஜஸ்டபிள் இருக்கையும் வாடிக்கையாளர்களின் சௌகரியமான பயண அனுபவத்திற்காக வழங்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இருசக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இ-மிதிவண்டிகளுக்கும் கணிசமான அளவு சிறப்பான வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இந்த நிலையிலேயே தரமான எலெக்ட்ரிக் மிதிவண்டியை புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இந்திய சந்தையில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








