எல்லாரும் பைசாவ தேத்தி வச்சுட்டு தயாரா இருங்க.. இந்த பிராண்டுல இருந்து மலிவு விலை இ-பைக் வர போகுதா!
கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் அல்ட்ராவைலட் ஆட்டோமோட்டிவ் (Ultraviolette Automotive). இந்த நிறுவனம் மின்சார இருசக்கர வாகன உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இயங்கி வருகின்றது. தற்போது நிறுவனத்தின்கீழ் ஒரே ஒரு எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மட்டுமே விற்பனையில் இருக்கின்றது.
அல்ட்ராவைலட் எஃப்77 (Ultraviolette F77) எனும் மாடலே அது ஆகும். இது இந்தியாவின் மிக மிக அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாகக் காட்சியளிக்கின்றது. ரூ. 3.80 லட்சம் தொடங்கி ரூ. 4.55 லட்சம் வரையிலான விலையில் இந்த பைக் விற்கப்படுகின்றது.

இந்த அதீத விலை பலருக்கு எட்டாக் கனியாக அந்த பைக்கை மாற்றி இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அல்ட்ராவைலட் நிறுவனம் தன்னுடைய பிராண்டின்கீழ் வெகு விரைவில் மலிவு விலையில் ஓர் எலெக்ட்ரிக் பைக்கைக் களமிறக்க இருப்பதாக தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் தற்போது எக்ஸ்44 எனும் புதுமுக இ-பைக்கிற்கு டிரேட்மார்க் பதிவைச் செய்திருக்கின்றது. இதன் வாயிலாக விரைவில் அல்ட்ராவைலட் புதிய மின்சாரை பைக்கைக் கொண்டு வர இருப்பது உறுதியாகி இருக்கின்றது. ஆனால், மலிவு விலையில்தான் அது விற்பனைக்கு வரும் என்பதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை.

குறிப்பாக, நிறுவனம் இதுகுறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடவில்லை. இருப்பினும், தற்போது நிறுவனம் மிக அதிக விலைக் கொண்ட ஒற்றை பைக் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருப்பதால், மலிவு விலைக் கொண்ட மோட்டார்சைக்கிளை அது இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதன் வாயிலாக கூடுதல் வாடிக்கையாளர்களை நிறுவனத்தால் ஈர்க்க முடியும். இதன் விலை ரூ. 2 லட்சத்திற்கும் குறைவாக நிர்ணயிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இந்த புதிய எக்ஸ்44 எலெக்ட்ரிக் பைக்கானது அல்ட்ராவைலட் எஃப்77-இன் சிறப்பம்சங்கள் குறைந்த வெர்ஷனாகவும் இருக்கலாம் என யூகிக்கப்படுகின்றது.

ஆனால், இதுவரை எந்த தகவலும் உறுதிச் செய்யப்படவில்லை. நிறுவனத்தின் மிக சிறந்த தயாரிப்பாக எஃப்77 இருக்கின்றது. ஃபைட்டர் ஜெட்களை தழுவி உருவாக்கப்பட்டதே இந்த வாகனம் ஆகும். மிக சிறந்த ஏரோடைனமிக்ஸ் மற்றும் அசத்தலான தொழில்நுட்ப வசதிகள் ஆகியவற்றைக் கொண்டதாக அது இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கில் மிக சிறந்த ரேஞ்ஜ் திறன் வழங்குவதற்காக 7.1 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 307 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இதைபோலவே இன்னும் பல விஷங்களில் இந்த பைக் மிக சிறந்ததாகக் காட்சியளிக்கின்றது. இந்த பைக்கால் வெறும் 2.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 60 கிமீ வேகத்தைத் தொட முடியும். இதுதவிர இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 152 கிமீட்டராக இருக்கின்றது. இதுபோன்ற ஏகப்பட்ட வசதிகளைத் தாங்கியதே இந்த இ-பைக் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மலிவு விலையில் விற்பனைக்கு வரும் இ-வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. எனவேதான் நிறுவனத்தின் புதிய தயாரிப்பு மலிவு விலையில் விற்பனைக்கு வரும் ஆணித்தனமாக நம்பப்படுகின்றது. ஆனால், இப்போது வரை அந்த வாகனத்தின் சிறப்பம்சம் மற்றும் பிற முக்கிய விபரங்கள் பற்றிய எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை.


Click it and Unblock the Notifications









