இந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கின் மூலம் வெளிநாட்டு நிறுவனங்களை அதிர வைத்த இந்திய நிறுவனம் - 2023 ஆட்டோ எக்ஸ்போ!
இந்தியாவில் சூப்பர் எலக்ட்ரிக் பைக்குகளை தயாரிக்கும் நிறுவனமாக அறியப்படும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் கிரேட்டர் நொய்டாவில் எஃப்99 என்ற புதிய எலக்ட்ரிக் பைக்கை காட்சிக்கு நிறுத்தி வைத்துள்ளது. இந்த புதிய அல்ட்ராவொய்லெட் எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
பெங்களூரை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமான அல்ட்ராவொய்லெட், எஃப்77 என்ற சூப்பர் பைக்கின் மூலமாக இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் ஓர் கவனிக்கத்தக்க இடத்தை பிடித்துள்ளது என்றால், அது மிகையில்லை. அல்ட்ராவொய்லெட் எஃப்77 சமீபத்தில், கடந்த நவம்பர் மாதத்தில் நடிகர் துல்கர் சல்மானின் முன்னிலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

மேலும் அதே தினத்தில் எஃப்77 பைக்கின் லிமிடெட் எடிசன் பைக்கும் மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது நடைப்பெற்று வரும் 2023 இந்திய ஆட்டோ எக்ஸ்போவில் பங்கெடுத்து கொண்டுள்ள அல்ட்ராவொய்லெட் நிறுவனம் எஃப்99 என்ற செயல்திறன்மிக்க சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை பார்வையாளர்களின் காட்சிக்கு நிறுத்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

இது ஓர் சூப்பர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளுக்கான கான்செப்ட் ஆகும். அதாவது இந்த கான்செப்ட் வாகனத்தின் அடிப்படையில் பிற்காலத்தில் பைக்குகள் அல்ட்ராவொய்லெட் பிராண்டில் இருந்து வெளிவரும். தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி பார்த்தோமேயானால், எஃப்99 ஆனது ரேஸ் டிராக் பயன்பாட்டிற்கு மட்டுமே ஏற்ற சூப்பர் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் ஆகும். அதாவது இந்த பைக்கை சாதாரண சாலையில் உபயோகப்படுத்த இயலாது.
எஃப்99 ரேஸ் டிராக் பைக்கை அதிகப்பட்ச ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் வடிவமைத்து தயாரித்து வெளியீடு செய்வதாக ஆட்டோ எக்ஸ்போவில் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், எஃப்99 சூப்பர் எலக்ட்ரிக் பைக்கில் அதிகப்பட்சமாக கிட்டத்தட்ட 65 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெற முடியும். இந்த ஆற்றலில் ஓர் காரினாலேயே குறிப்பிடத்தக்க வேகத்தில் இயங்க முடியும்.

இத்தகைய என்ஜினை பெற்றுள்ள எஃப்99 பைக்கின் டாப்-ஸ்பீடு ஆனது 200kmph ஆகும். இவை தவிர்த்து பைக்கின் பேட்டரி உள்பட எந்த விபரத்தையும் அல்ட்ராவொய்லெட் நிறுவனம் தற்போதைக்கு வெளியிடவில்லை. தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய அல்ட்ராவொய்லெட் எஃப்99 கான்செப்ட் பைக் நமக்கு விலையுயர்ந்த கேடிஎம் சூப்பர் நாக்டு பைக்குகளை நினைவூட்டுகிறது. குறிப்பாக, கேடிஎம் 1290 சூப்பர் ட்யூக் ஆர்ஆர் மோட்டார்சைக்கிள் தான் நமது நினைவிற்கு வருகிறது.
எஃப்99 பைக்கின் பக்கவாட்டிலும், பின்பக்கத்திலும் விங்லெட்கள் பொருத்தப்பட்டுள்ளன. முன்பக்கத்தில் ஹெட்லேம்ப் முழுவதுமாக பேனல்களால் மூடப்பட்டதாக காட்சியளிக்கிறது. பைக்கில் சைடு மிரர்களுக்கு பதிலாக மெல்லிய க்னக்கிள் பாதுகாப்பான்கள் வழங்கப்பட்டுள்ளதை பார்க்கப்படுகிறது. இவை பின்னால் வரும் வாகனங்களை காண உதவும் என்பது மட்டுமின்றி, ரைடரின் கால் முட்டிகளுக்கும் பாதுகாப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications








