இதில் ஒரு 2-வீலர் வந்தால் கூட பஜாஜின் ரேஞ்சே மாறிடும்!! எல்லாமே மிடில்-கிளாஸ் மக்களுக்கு ஏற்றது!
பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto), இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனம். குறிப்பாக, மோட்டார்சைக்கிள்களை விற்பனை செய்வதில் அதிக கவனம் செலுத்தக்கூடிய நிறுவனமாக பஜாஜ் விளங்குகிறது. இன்னும் சொல்லப்போனால், சேத்தக்கை தவிர்த்து பஜாஜ் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் மற்றவை அனைத்தும் மோட்டார்சைக்கிள்கள் ஆகும்.
புனேவில் தொழிற்சாலை அமைத்து செயல்படும் பஜாஜ் நிறுவனத்தின் அடையாளமாக பல்சர் பைக்குகள் விளங்குகின்றன. இன்னும் சொல்லப்போனால், பஜாஜ் நிறுவனத்தை தெரியாதவர்கள் கூட பல்சர் பைக்குகளை பற்றி அறிந்துள்ளனர். இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்ட்களுள் ஒன்று என்ற நிலையை விட்டு கீழிறங்கக் கூடாது என்பதற்காக அவ்வப்போது புது புது அறிமுகங்கள் பஜாஜில் இருந்து சந்தையில் களமிறங்குகின்றன. இந்த வகையில் அடுத்ததாக விற்பனைக்குவர உள்ள 6 பஜாஜ் 2-வீலர்களை இனி பார்க்கலாம்.

பல்சர் என்.எஸ்200: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் பஜாஜின் அடையாளமாக விளங்குவது பல்சர் ஆகும். இப்போதைக்கு பல்சர் பைக்குகள் 250சிசி வரையில் மட்டுமே கிடைக்கின்றன. ஆனால், விரைவில் 400சிசி-இல் பல்சர் பைக்கை பஜாஜ் களமிறக்குகிறது. என்.எஸ் பைக்குகள் வரிசையில் கொண்டுவரப்படும் புதிய 400சிசி பல்சர் பைக்கில் டோமினார் 400 பைக்கில் வழங்கப்படும் 373சிசி லிக்யுடு-கூல்டு சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்படுகிறது.
பஜாஜ் சிஎன்ஜி பைக்: ப்ரூஸர் இ101 என்ற குறியீட்டு பெயரில் தற்சமயம் அழைக்கப்படுகின்ற சிஎன்ஜி பைக் ஒன்றும் பஜாஜ் நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக விற்பனைக்கு வர உள்ளது. இந்த சிஎன்ஜி பைக் பஜாஜின் விலை குறைவான பைக்காக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, பஜாஜ் சிடி100, சிடி110 போன்ற விலை குறைவான பைக்குகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக இந்த சிஎன்ஜி பைக் இருக்கலாம்.

பஜாஜ் பல்சர் பி125: பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்சர் பைக்குகளை பொறுத்தவரையில் பல்வேறு விதமான யுக்திகளை கையாளுகிறது. முன்பு என்.எஸ், ஆர்.எஸ் ரக பல்சர் பைக்குகளை மட்டுமே பஜாஜ் விற்பனை செய்து வந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக என் மற்றும் பி வரிசை பைக்குகளையும் புதுமையான தோற்றத்தில் விற்பனை செய்து வருகிறது. இதில் பல்சர் பி வரிசையில் புதிய 125சிசி பைக் களமிறக்கப்படுகிறது.
பஜாஜ் சன்னி இவி: பஜாஜ் சன்னி ஸ்கூட்டரை உங்களில் சிலர் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பஜாஜ் சன்னி மீண்டும் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக சந்தையில் களமிறக்கப்பட உள்ளதாக சமீப மாதங்களாக செய்திகள் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. அதாவது, பஜாஜ் சேத்தக்கை போல், பஜாஜ் நிறுவனம் அதன் சன்னி ஸ்கூட்டரையும் மீண்டும் கொண்டுவருகிறது.

பஜாஜ் சிடி150எக்ஸ்: பல்சர் பைக்குகளில் எவ்வாறு புது, புது பிரிவுகளை உருவாக்குகிறதோ அதேபோன்று, சிடி பைக்குகளிலும் எக்ஸ் வரிசையை பஜாஜ் உருவாக்கி வருகிறது. ஏற்கனவே, சிடி110எக்ஸ் மற்றும் சிடி125எக்ஸ் பைக்குகள் விற்பனையில் இருக்கும் நிலையில், புதியதாக சிடி150எக்ஸ் பைக் விற்பனைக்கு வருகிறது.

விலை குறைவான பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக்: இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுள் ஒன்றான சேத்தக்கில் கடந்த மார்ச் மாதத்தில் சேத்தக் ப்ரீமியம் என்கிற பெயரில் புதிய விலைமிக்க வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, விலை குறைவான சேத்தக் ஸ்கூட்டரையும் பஜாஜ் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய வாகனங்களை பஜாஜ் ஆட்டோ நிறுவனம் கையாளும் யுக்தி சிறப்பானது. அதாவது, சந்தையில் அதிகம் விற்பனையாகும் பல்சர், சிடி போன்ற பைக்குகளிலேயே புதிய அப்டேட் வெர்சன்களை கொண்டுவர பஜாஜ் திட்டமிட்டுள்ளது. அதேநேரம் எலக்ட்ரிக்கிலும் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காக சேத்தக்கில் புதிய விலை குறைவான வேரியண்ட்டை கொண்டுவருகிறது.


Click it and Unblock the Notifications









