ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை ரூ.1.25 லட்சம்!! அப்படி என்ன இருக்கிறது இந்த ஸ்கூட்டரில்? வேகமா இயங்கக்கூடியது
வேஹ் ஆட்டோமொபைல்ஸ் (Vegh Automobiles) நிறுவனம் அதன் புதிய அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டராக எஸ்60 -ஐ விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. விற்பனைக்கு வந்திருக்கும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலை, ரேஞ்ச் மற்றும் டாப்-ஸ்பீடு உள்ளிட்ட முக்கிய விபரங்களை இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான டிமாண்ட் தொடர்ந்து இந்தியாவில் அதிகரித்து வருவதால், புது புது இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தொடர்ச்சியாக சந்தையில் களம்புகுந்த வண்ணம் உள்ளன. இந்த வகையில், இவி உற்பத்தியில் இறங்கிய வேஹ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தில் இருந்து புதிய அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் 'எஸ்60' என்ற பெயரில் விற்பனைக்கு வந்துள்ளது.

நடைபெற்றுவரும் 2023 இவி இந்தியா ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள புதிய எஸ்60 எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ.1.25 லட்சம் ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் எஸ்60 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வேஹ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையத்தின் வாயிலாக வாங்கலாம்.
மேட் கருப்பு, லைட் கிரே, வெள்ளை மற்றும் இளம் பச்சை என்கிற 4 விதமான பெயிண்ட் தேர்வுகளில் புதிய வேஹ் எஸ்60 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏஐஎஸ்156, நிலை 2-க்கு அனுமதிக்கப்பட்ட 3kWh பேட்டரி வழங்கப்பட்டு உள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 120கிமீ-க்கும் அதிகமான தொலைவிற்கு ஸ்கூட்டரை இயக்கலாம் என வேஹ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு 0-இல் இருந்து 100% சார்ஜை 4- 5 மணிநேரங்களில் நிரப்பி விடலாம். இந்த பேட்டரியின் மூலம் ஆற்றலை பெறும் எலக்ட்ரிக் மோட்டாரில் இருந்து அதிகப்பட்சமாக 2.5 கிலோவாட்ஸ் வரையிலான இயக்க ஆற்றல் ஸ்கூட்டருக்கு கிடைக்கும். வேஹ் நிறுவனத்தின் அதிவேக எலக்ட்ரிக் ஸ்கூட்டரான இதில் அதிகப்பட்சமாக மணிக்கு 75கிமீ வேகத்தில் இயங்க முடியும்.
தொழிற்நுட்ப அம்சங்களாக, டிஜிட்டல் டிஸ்பிளே, ஒருங்கிணைக்கப்பட்ட பிரேக்கிங் சிஸ்டம் மற்றும் 3 ரைட் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இதில் ரைட் மோட்கள், ஸ்கூட்டரின் பேட்டரியின் செயல்படுதிறனை ஒவ்வொரு விதமாக மாற்றும். இதனால், புதிய எஸ்60 எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் நகர்புற சாலைகளில் மட்டுமின்றி, கிராம புற சாலைகளிலும் தேவையான வேகத்தில் இயங்க முடியும் என வேஹ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

அகலமான இருக்கையை கொண்டுள்ள இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன் வழங்கப்பட்டுள்ளது. புதிய எஸ்60 எலக்ட்ரிக் ஸ்கூட்டரை தொடர்ந்து மற்றொரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சந்தையில் அறிமுகப்படுத்தும் பணியில் வேஹ் ஆட்டோமொபைல்ஸ் நிறுவனம் ஈடுப்பட்டு வருகிறது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்60 -இன் அப்டேட் செய்யப்பட்ட வெர்சனாக இருக்கும் என கூறப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த வருடங்களில் இந்தியாவில் அதிகளவில் குறை-வேக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே அறிமுகம் செய்யப்பட்டன. அதாவது, அவை அதிகப்பட்சமாக 25kmph வேகத்தில் இயங்கக்கூடியவைகளாக இருந்தன. இதனால், அவற்றை இயக்க டிரைவிங் சைலன்ஸ் தேவையில்லை என்பதை பயன்படுத்தியே வரிசையாக அத்தகைய ஸ்கூட்டர்கள் களமிறக்கப்பட்டன. ஆனால் தற்போது, ஹை-ஸ்பீடு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் அறிமுகங்கள் அதிகரிக்க துவங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications









