அடேங்கப்பா... வெறும் 125சிசி ஸ்கூட்டரின் ஷோரூம் விலையே இவ்வளவா!! வெஸ்பா பிராண்டில் வாங்குறதே தனி கெத்து!
வெஸ்பா ட்யூயல் 125 மற்றும் 150 (Vespa Dual 125 & 150) ஸ்கூட்டர்கள் பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்டு இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றில் புதியதாக என்னென்ன அப்டேட்கள் கொண்டுவரப்பட்டுள்ளன என்பது குறித்த முழுமையான விபரங்களை இனி பார்க்கலாம்.
வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு அளவை கட்டுப்படுத்தும் விதமாக பாரத் ஸ்டேஜ் எமிஷன் ஸ்டாண்டட்களை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. இதில் 6வது ஸ்டாண்டட்கள் கடந்த 2020 ஏப்ரல் மாதத்தில் பிஎஸ்6 என்ற பெயரில் அமலுக்கு வந்தன. இதனை தொடர்ந்து, பிஎஸ்6 விதிமுறைகளில் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகள் கடந்த 2023 ஏப்ரல் 1ஆம் தேதி நடைமுறைக்கு வந்தன.

இதனாலேயே பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு இணக்கமாக அப்டேட் செய்யப்பட்ட வாகனங்கள் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வரிசையில், பியாஜியோ இந்தியா நிறுவனம் அதன் வெஸ்பா ட்யூயல் 125 மற்றும் 150 ஸ்கூட்டர்களை பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து அறிமுகப்படுத்தியுள்ளது.
பிஎஸ்6 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப இந்த ஸ்கூட்டர்களின் என்ஜின் திருத்தப்பட்டிருக்கும். இந்த அப்கிரேட் உடன் புதிய பெயிண்ட் தேர்வுகளையும் வெஸ்பா ட்யூயல் 125 மற்றும் 150 ஸ்கூட்டர்களில் பியாஜியோ நிறுவனம் புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. 2023 வெஸ்பா ட்யூயல் 125 & 150 ஸ்கூட்டர்களின் வி.எக்ஸ்.எல் வேரியண்ட்களை பேர்ல் வெள்ளை-அஸூரோ ப்ரோவென்ஸா; பேர்ல் வெள்ளை-பழுப்பு நிறம் மற்றும் பேர்ல் வெள்ளை-மேட் கருப்பு நிற பெயிண்ட் தேர்வுகளில் வாங்கலாம்.

ஆனால் ட்யூயல் 125 & 150 ஸ்கூட்டரின் விலைமிக்க எஸ்.எக்ஸ்.எல் வேரியண்ட்களை பேர்ல் வெள்ளை - மேட் சிவப்பு நிற பெயிண்ட் தேர்வில் மட்டுமே வாங்க முடியும். 2023 வெஸ்பா ட்யூயல் 125 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.32 லட்சத்தில் இருந்தும், ட்யூயல் 150 ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.49 லட்சத்தில் இருந்தும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
ஸ்கூட்டர்களின் பெயிண்ட் மாற்றத்துடன், ரைடர் கால் வைக்கும் ஃப்ளோர் போர்டின் நிறமும் கவர்ச்சிக்கரமான வண்ணங்களாக மாற்றப்பட்டுள்ளது. 2023 வெஸ்பா ட்யூயல் ஸ்கூட்டர்களை 4 விதமான பெயிண்ட் & ஃப்ளோர் போர்டு பெயிண்ட் கலவையில் வாங்க முடியும். இவற்றுடன் இந்த வெஸ்பா ஸ்கூட்டர்களில் பின் இருக்கை பயணிகளுக்காக வழங்கப்படும் பேக் ரெஸ்ட் கூடுதல் சவுகரியமானதாக மாற்றப்பட்டுள்ளது.

வெஸ்பா 125 ஸ்கூட்டரில் வட்ட வடிவிலும், வெஸ்பா 150 ஸ்கூட்டரில் செவ்வக வடிவிலும் ஹெட்லைட்களை பெற முடியும். மற்றப்படி இயந்திர பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை. வெஸ்பா ட்யூயல் 125 ஸ்கூட்டரின் 125சிசி என்ஜின் ஆனது 9.65 எச்பி மற்றும் 10.11 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது. அதுவே, 150சிசி என்ஜின் மூலமாக 10.64 எச்பி மற்றும் 11.26 என்எம் டார்க் திறன் வரையில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: வெஸ்பா ஸ்கூட்டர்கள் பொதுவாகவே விலைமிக்கவை என்பது நமக்கு தெரிந்த விஷயமே. ஆதலால் இந்த ட்யூயல் ஸ்கூட்டர்கள் லட்ச ரூபாய்களில் அறிமுகமாகி இருப்பது ஒன்றும் ஆச்சிரியமான விஷயம் அல்ல. வெஸ்பா ஸ்கூட்டர்கள் பழமையான இத்தாலியன் ஸ்டைலில் வடிவமைக்கப்படுகின்றன, இதுவே வெஸ்பா ஸ்கூட்டர்களின் அதிகப்படியான விலைக்கு காரணம் ஆகும். இவ்வளவு தொகையை கொடுத்து ஸ்கூட்டரை வாங்க தயாராக இருப்பவர்களுக்கு வெஸ்பாவின் இந்த ட்யூயல் ஸ்கூட்டர்கள் சிறந்த தேர்வாகும்.


Click it and Unblock the Notifications









