அதிரடியாக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைத்த ஹீரோ.. செம்ம மூவ் ஓலாவுக்கு அடுத்த மாசம் பெருத்த அடி நிச்சயம்
விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Vida V1 Electric Scooter)இன் விலையை அதிரடியாக ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் குறைத்திருக்கின்றது. விற்பனையை அதிகரிக்கும் விதமாக பல்வேறு முயற்சிகளில் நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்திய இருசக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), விடா (Vida) எனும் பிராண்டின்கீழ் எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி விடா பிராண்டில் ஒற்றை மாடல் மட்டுமே இரு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

விடா வி1 பிளஸ் (Vida V1 Plus) மற்றும் விடா வி1 ப்ரோ (Vida V1 Pro) ஆகியவையே அவை ஆகும். இவற்றின் விலையையே நிறுவனம் தற்போது குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சந்தையில் தற்போது போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது.
குறிப்பாக, ஒரு சில மின் வாகன உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளின் விலையை குறைத்திருக்கின்றன. ஆகையால், விடாவிற்கு இன்னும் கடுமையான போட்டி உருவாகி இருக்கின்றது. இந்த போட்டியைச் சமாளிக்கும் பொருட்டே ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனமும் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையைக் கடுமையாகக் குறைத்திருக்கின்றது.

25 ஆயிரம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு இருக்கின்றது. விலை குறைப்பினால் வி1 தேர்வின் விலை 1.20 லட்சமாகவும், வி1 ப்ரோவின் விலை ரூ. 1.40 லட்சமாகவும் குறைந்திருக்கின்றது. விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்திலேயே முதல் முறையாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
அப்போது, வி1 பிளஸ்க்கு ரூ. 1.45 லட்சமும், வி1 ப்ரோவிற்கு ரூ. 1.59 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இது மிக அதிக விலையாக சந்தையில் கருதப்பட்டது. மேலும், பலரின் எதிர்பார்பிற்கு பெருத்த ஏமாற்றத்தை வழங்கும் வகையில் இந்த உச்சபட்ச விலை அமைந்திருந்தது.

இந்த நிலையிலேயே வி1 ப்ரோ தேர்வில் ரூ. 19 ஆயிரமும், வி1 பிளஸ் தேர்வின் விலையில் ரூ. 25 ஆயிரமும் குறைக்கப்பட்டு இருக்கின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஏத்தர் எனெர்ஜி நிறுவனம் 450 எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை குறைத்தது.
இதேபோல், ஓலா நிறுவனம் அதன் இ-ஸ்கூட்டர்களின் விலையை குறைத்து ஆஃபர் வழங்கியது. ஆனால், குறிப்பிட்ட சில தினங்களுக்கு மட்டுமே குறைவான விலையில் அவை விற்பனைக்கு வழங்கப்பட்டன. ஆகையால், சென்ற மாதங்களில் நிறுவனத்தின் விலை பலமடங்கு வளர்ச்சி அடைந்தது. கடந்த 2023 ஏப்ரலில் மாதத்தில்கூட ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை 30 ஆயிரத்தைத் தாண்டி இருப்பதாக நிறுவனம் தெரிவித்து உள்ளது.
இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கும் அமோக வரவேற்பைப் பெற வேண்டும் என்பதற்காக விலையைத் தற்போது குறைத்திருக்கின்றது. இதுதவிர, தற்போது விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனைக்குக் கிடைக்கும் நகரத்தின் எண்ணிக்கையையும் ஹீரோ மோட்டோகார்ப் விரிவாக்கம் செய்திருக்கின்றது. 100க்கும் நகரங்களில் விற்பனைக்குக் கிடைக்கச் செய்யும் முயற்சியில் அது களமிறங்கி இருக்கின்றது.
சமீபத்திலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சென்னையில் தொடங்குவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தகுந்தது. விடா வி1 பிளஸ் ஓர் முழு சார்ஜில் 143 கிமீ தூரம் வரை பயணிக்கும். இந்த அதிகபட்ச ரேஞ்ஜ் திறனுக்காக இ-ஸ்கூட்டரில் 3.44 kWh பேட்டரி பேக் பொருத்தப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.4 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 40 கிமீ வேகத்தை அது எட்டிவிடும். 6 kW பீக் பவரையும், 25 என்எம் டார்க்கை வெளியேற்றும் பிஎம்எஸ்எம் மோட்டாரே வி1 பிளஸ் தேர்வில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதே மோட்டாரே விடா வி1 ப்ரோவிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ஆனால் பேட்டரி பேக் விஷயத்தில் அது மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. 3.94 kWh பேட்டரி பேக்கே வி1 ப்ரோவில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 165 கிமீ தூரம் பயணிக்க முடியும்.
ஒரே மின்சார மோட்டார் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 80 கிமீ ஆகவே இருக்கின்றது. ஆனால், பிக்-அப் வேகம் சற்று அதிகமாக இருக்கின்றது. 0-40 கிமீ வேகத்தை 3.2 செகண்டுகளிலேயே வி1 ப்ரோ எட்டிவிடும். அதேவேளையில், இந்த வேகத்தை வி1 பிளஸ் எட்ட 3.4 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விலையை குறைத்திருக்கின்றது. மேலும், விற்பனைக்குக் கிடைக்கும் நகரங்களின் எண்ணிக்கையையும் அது அதிகரிக்கச் செய்திருக்கின்றது. எனவே அடுத்து வரும் மாதங்களில் நிறுவனத்தின் இ-ஸ்கூட்டர்களின் விற்பனைக்கு அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









