ரெண்டும் ஒரே மாதிரிதான் இருக்கு.. அப்புறம் ஏன் வேற வேற பேருல அறிமுகம் செஞ்சாங்க.. வித்தியாசம் ஏதாவது இருக்கா?
பஜாஜ்-டிரையம்ப் கூட்டணியில் உருவாக்கப்பட்ட ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களும் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டன. இங்கிலாந்து நாட்டில் நடைபெற்ற டிரையம்ப் நிறுவனத்தின் நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே இரண்டு பைக்குகளும் வெளியீடு செய்யப்பட்டன. இந்த பைக்குகள் இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர உள்ளன.
இதை உறுதிப்படுத்தும் விதமாக அவற்றிற்கான ப்ரீ புக்கிங் பணிகள் தற்போது இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது. அடுத்த மாதம் அதிகாரப்பூர்வமாக இந்த இரு மோட்டார்சைக்கிள்களும் விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த நிலையிலேயே ப்ரீ புக்கிங்கை ஏற்கும் நடவடிக்கையில் பஜாஜ்-டிரையம்ப் கூட்டணி களமிறங்கி இருக்கின்றது.

ஜுலை 5ஆம் தேதி அன்றே ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் ஆகிய இரண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த இரண்டு மோட்டார்சைக்கிள்களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. ஆனால், வெவ்வேறு பெயர்களில் விற்பனைக்கு வந்திருக்கின்றன. இதன் வெவ்வேறு பெயர்களுக்கான காரணம் என்ன? இரு பைக்குகளுக்கும் இடையில் இருக்கும் வித்தியாசங்கள் என்ன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
தோற்றத்தில் காணப்படி கூடிய மாற்றங்கள் என்ன? பெரிய அளவில் தோற்றத்தில் மாற்றங்கள் வழங்கப்படவில்லை என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கை சற்று வித்தியாசமானதாக காட்ட வேண்டும் என்பதற்காக ஹெட்லைட்டில் சிறிய கிரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், ரேடியேட்டர் குவார்டு, சம்ப் குவார்டு, ஹேண்டு குவார்டுகள், ஹேண்டில்பார் பிரேஸ் மற்றும் நீளமான முன் பக்க மட்குவார்டு உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதுமட்டுமில்லைங்க சைலென்சர் விஷயத்திலும் வித்தியாசத்தை நம்மால் காண முடிகின்றது. 400எக்ஸ் மாடலில் இரு துளைகளை வெளிப்படையாகக் காட்டக் கூடிய எக்சாஸ்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், இது கருப்பு மற்றும் சில்வர் நிற கூறுகளால் அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது. ஆனால், ஸ்பீடு 400 மாடலில் முழுக்க முழுக்க இந்த எக்சாஸ்ட் சிஸ்டம் சில்வர் நிறத்தைக் கொண்டதாக இருக்கின்றது.
சஸ்பென்ஷன் செட்-அப்பில் காணப்படும் வித்தியாசம்: ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராப்ம்ளர் 400எக்ஸ் ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களிலும் ஒரே மாதிரியான சஸ்பென்ஷன் செட்-அப்பே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், மாடல்களுக்கு ஏற்ப அவை அளவில் மாறுபட்டு காட்சியளிக்கின்றன. குறிப்பாக, ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் மாடலில் சற்று அதிக அளவில் அவை காட்சியளிக்கின்றன. இரு பைக்குகளின் முன் பக்கத்திலும் 43 மிமீ யுஎஸ்டி பிக் பிஸ்டன் ஃபோர்க்குகளே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

பின் பக்கத்தில் கேஸ்-சார்ஜட் மோனோஷாக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ப்ரீ-லோடு அட்ஜெஸ்ட்மென்ட் வசதிக் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த சஸ்பென்ஷன்கள் ஸ்பீடு 400 பைக்கின் முன் பக்கத்தில் 140 மிமீட்டரையும், பின் பக்கத்தில் 130 மிமீட்டரையும் கொண்டிருக்கின்றது. இதைவிட 10 மிமீ மற்றும் 20 மிமீட்டர் அதிகம் உயரம் கொண்டதாகவே ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் அந்த சஸ்பென்ஷன்கள் காட்சியளிக்கின்றன.
பிரேக்கிங் சிஸ்டத்தில் உள்ள வித்தியாசங்கள்: இரு பைக்குகளிலும் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஆனால், அவை அளவில் வித்தியாசமானதாக உள்ளன. இரு பைக்குகளின் முன் பக்கத்திலும் 230 மிமீ டிஸ்க் பிரேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், பின் வீலில் மட்டும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் மாடலில் 320 மிமீட்டர் கொண்ட டிஸ்க்கும், ஸ்பீடு 400-இல் 300 மிமீ டிஸ்க்கும் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.

வீல் அளவிலும், டயரிலும் காணப்படும் வித்தியாசம்: ஸ்பீடு 400 ஓர் ரோட்ஸ்டர் ரக பைக் என்பதால் இரு முனைகளிலும் 17 அங்குல அலாய் வீல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. ஆனால், ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் மாடலில் முன் பக்கத்தில் 19 அங்குல அலாய் வீலும், பின் பக்கத்தில் 17 அங்குல அலாய் வீலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டயரைப் பொருத்தவரை ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் இரு விதமான பயன்பாட்டு வசதிக் கொண்ட மெட்ஸெலர் கரூ டயர்களும், ஸ்பீடு 400 பைக்கில் மெட்ஸெலர் ஸ்போர்டெக் எம்9ஆர்ஆர் வழக்கமான சாலை பயன்பாட்டிற்கான டயர்களும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், ஸ்விட்சபிள் ஏபிஎஸ் வசதி ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

ஸ்பீடு 400 மற்றும் ஸ்கிராம்பளர் 400எக்ஸ் பைக்குகளின் அளவுகளில் காணப்படும் வித்தியாசம் என்ன? ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் சற்று அளவில் பெரியதாக உள்ளது. ஸ்கிராம்பளர் 400எக்ஸ் மாடலின் வீல் பேஸ் 1,418 மிமீட்டராக உள்ளது. இதன் இருக்கை உயரம் 835 மிமீ ஆகும்.
அதேவேளையில், ஸ்பீடு 400இன் வீல் பேஸ் 1,377 மிமீட்டராகவும், இருக்கை உயரம் 790 மிமீட்டராகவும் உள்ளது. இந்த அளவு வித்தியாசத்தாலும், சிறப்பம்சங்கள் வித்தியாசத்தாலும் ஸ்கிராம்ப்ளர் 400எக்ஸ்-இன் எடையும் சற்று அதிகமாக உள்ளது. ஸ்கிராம்ப்ளர் 400 எக்ஸ் மாடலின் எடை 179 கிலோவாக உள்ளது. இதைவிட 9 கிலோ எடை குறைவானதே ஸ்பீடு 400 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே ஸ்கிராம்பளர் 400எக்ஸ் மற்றும் ஸ்பீடு 400 ஆகிய இரு மோட்டார்சைக்கிள்களுக்கும் இடையில் காணப்படும் வித்தியாசங்கள் ஆகும். பலர் இந்த பைக் பார்க்க ஒரே மாதிரி இரட்டையர்களைப் போல இருக்கே இவற்றை ஏன் வேற வேற பெயர்களில் விற்பனைக்குக் கொண்டு வந்தாங்க என்கிற சந்தேகம் எழும்பிய வண்ணம் இருந்தது. ஆனால், இரண்டும் வெவ்வேறு பயன்பாட்டு வசதிக் கொண்டவை என்பதனாலேயே அவற்றிற்கு வித்தியாசமான பெயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.


Click it and Unblock the Notifications









