இந்த விஷயத்துல இந்தியாதான் நம்பர்1.. சீனாவால நெருங்ககூட முடியல! ஆனா இன்னொன்னுல இந்தியா பின் தங்கிருச்சு!
உலகளவில் பார்க்கையில் இந்தியாவிலேயே இருசக்கர வாகனங்கள் மிக அதிகளவில் விற்பனையாகிக் கொண்டு இருக்கின்றன என்பது தற்போது தெரிய வந்து உள்ளது. இந்த தகவலை வெளியிட்டது யார்?, எவ்வளவு இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன?, இந்தியாவிற்கு அடுத்தபடியான இடத்தில் வேறு எந்த எந்த நாடுகள் இருக்கின்றன?, என்பது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
2020 ஆம் ஆண்டின் நிலவரப்படி உலகின் எந்த நாட்டில் அதிகம் இருசக்கர வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன என்கிற புள்ளி விபரங்களே வெளியீடு செய்யப்பட்டு உள்ளன. சர்வதேச சாலை கூட்டமைப்பே அதுகுறித்த தகவலை வெளியிட்டு இருக்கின்றது. இரண்டு சக்கர வாகனங்கள் மட்டும் அல்ல எந்த நாட்டில் கார்கள் அதிகம் விற்பனையாகி இருக்கின்றன என்கிற புள்ளி விபரங்களையும் அது வெளியிட்டு இருக்கின்றது.

சர்வதேச சாலை கூட்டமைப்பு வெளியிட்டு இருக்கும் புள்ளி விபரங்களின்படி, உலக அளவில் இந்தியாவிலேயே இருசக்கர வாகனங்கள் மிக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி இருக்கின்றன என்பது தெரிய வந்து இருக்கின்றது. இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் இந்தோனேசியாவிலேயே அதிக எண்ணிக்கையில் டூ வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன.
அதேவேளையில், இருசக்கர வாகன விற்பனையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, கார்கள் விற்பனையில் சற்று பின் தங்கி இருக்கின்றது. இந்த பிரிவில் முதல் மூன்று இடங்களை வெளிநாடுகளே பிடித்து இருக்கின்றன. முதல் இடத்தை சீனாவும், இரண்டாவது இடத்தை அமெரிக்காவும், மூன்றாவது இடத்தை ஜப்பான் ஆகிய நாடுகளும் பிடித்து இருக்கின்றன.

இந்தியா கார்கள் விற்பனையில் எட்டாவது இடத்தையே பிடித்திருக்கின்றது. இதை வைத்து பார்க்கையில் நம் நாட்டில் டூ-வீலர் காதலர்களே அதிக எண்ணிக்கையில் இருக்கின்றனர் என்பது தெளிவாகத் தெரிகின்றது. ஒட்டுமொத்தமாக 2020 ஆம் ஆண்டு நிலவரப்படி நம் நாட்டில் 32.63 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றன.
இவற்றில் 75 சதவீதம் டூ-வீலர்கள் மட்டுமே ஆகும். இந்த தகவலை வாஹன் தளமும் உறுதிப்படுத்தி இருக்கின்றது. இத்துடன் கடந்த மூன்று ஆண்டுகளையும் சேர்க்கையில், இந்தியாவில் மட்டும் 34.8 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருப்பதும் இதே வாஹன் தளத்தில் இருக்கும் தரவுகளின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது.

இந்தியாவின் மஹாராஷ்டிரா மாநிலத்திலேயே இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் விற்பனையாகி இருக்கின்றன. அங்கு 3.78 கோடி வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதற்கு அடுத்தபடியாக உபி-யில் 3.49 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருக்கின்றது. மூன்றாவது இடத்திலேயே தமிழகம் இருக்கின்றது. இங்கு சுமார் 3.21 கோடி வாகனங்கள் விற்பனையாகி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.
நகரங்கள் வாரியாக பார்க்கையில் டெல்லியே வாகன விற்பனையில் முதல் இடத்தைப் பிடித்திருக்கின்றது. அங்கு இதுவரை 1.18 வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன. இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை கர்நாடகாவின் பெங்களூரு நகரம் பிடித்திருக்கின்றது. இங்கு 96.4 லட்சம் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
இதேபோல், நம் சென்னை உட்பட இந்தியாவின் பிற நகரங்களிலும் வாகனங்களின் விற்பனை மிக அமோகமான வளர்ச்சி பாதையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருப்பது தெளிவாக தெரிகின்றது. ஆகையால், அடுத்து வரும் நாட்களில் இந்தியாவின் மக்கள் தொகைக்கு இணையான எண்ணிக்கையில் வாகனங்களின் பதிவு எண்ணிக்கையும் இருக்கும் என தெரிகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையும் அதிகரித்துக் காணப்படுகின்றது. விரைவில், அவற்றின் விற்பனை ஐசிஇ (எரிபொருளில் இயங்கும்) வாகனங்களின் விற்பனையையே தோற்கடிக்கும் என கூறும் அளவிற்கு எலேக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. அதேவேளையில், வாகன உற்பத்தியாளர்களும் மின் வாகனங்களின் உற்பத்தியில் மிக தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றனர் என்பது இங்கு கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









