எலக்ட்ரிக் பைக்குகள் பல்வேறு ஆப்ஷன்களில்!! இந்தியாவில் இத்தனை மாடல்கள் விற்பனையில் இருக்கா... உலக இவி தினம்!
உலக இவி தினம் (World EV Day) ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் 9ஆம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. ஆனால், மற்ற வல்லரசு நாடுகளுடன் ஒப்பிடுகையில் நம் இந்தியா இன்னமும் எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில் சற்று பின்தங்கியே உள்ளது. குறிப்பாக, எலக்ட்ரிக் கார்கள் போன்ற 4-சக்கர வாகனங்களுக்கான மார்க்கெட் நம் நாட்டில் இன்னமும் ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளதை ஒப்புக்கொண்டு தான் ஆக வேண்டும்.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் எலக்ட்ரிக் வாகனங்கள் என்று பார்த்தால், அவை எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களே ஆகும். எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்கள் கூட அவ்வளவாக விற்பனையாகுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், தற்போதைக்கு மார்க்கெட்டில் விற்பனையில் இருக்கும் எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கையை விரல் விட்டு எண்ணிவிடலாம். அவற்றுள் முக்கியமான சிலவற்றை பற்றி உலக இவி தினமான இன்று பார்க்கலாம்.

அல்ட்ராவொயலெட் எஃப்77: தற்போதைக்கு, இந்தியாவின் அதிவேகமான எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் இதுதான். சுமார் 207 கிலோ எடை கொண்ட இந்த எலக்ட்ரிக் சூப்பர் பைக்கில் நிறைய கூர்மையான பேனல்கள் வழங்கப்படுகின்றன. இந்த பைக்கில் பொருத்தப்படும் அளவில்-பெரியதான 10.34kWh பேட்டரி தொகுப்பை முழுவதுமாக சார்ஜ் செய்வதன் மூலம் பைக்கை 307கிமீ தொலைவிற்கு இயக்கி செல்லலாம்.
ரெவோல்ட் ஆர்வி400: இந்தியாவில் தற்போதைக்கு ஓரளவிற்கு விற்பனையாகக்கூடிய எலக்ட்ரிக் பைக் இதுதான். நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கான இது, தினசரி பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருக்கும். அதிகப்பட்சமாக மணிக்கு 85கிமீ வேகத்தில் இயங்கக்கூடிய இந்த எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரியை ஒருமுறை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால், அதிகப்பட்சமாக 80கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம். இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு பெற்ற எலக்ட்ரிக் பைக்கும் இதுதான்.

ஒபென் ரோர்: ரெவோல்ட் ஆர்வி400-ஐ போன்று நேக்டு ஸ்ட்ரீட்ஃபைட்டர் பைக்கான ஒபென் ரோர், அதேநேரம் பழமையான பைக்குகளின் சில டச்களையும் கொண்டுள்ளது. அதாவது, பழமை & புதுமை இரண்டும் சேர்ந்த கலவையாக ஒபென் ரோர் விளங்குகிறது. இந்த எலக்ட்ரிக் பைக்கில் 4.4kWh பேட்டரி தொகுப்பு பொருத்தப்படுகிறது. இதனை முழுவதுமாக சார்ஜ் செய்தால், சுமார் 200கிமீ தொலைவிற்கு பைக்கை இயக்கி செல்லலாம் என உறுதியளித்துள்ளது, ஒபென் நிறுவனம்.
கோமகி ரேஞ்சர்: ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை போன்று, தாழ்வான க்ரூஸர் பைக்குகளும் எலக்ட்ரிக்கில் கிடைக்கின்றனவா? என நீங்கள் கேட்டால் அதற்கு சிறந்த உதாரணம் இந்த பைக் ஆகும். தோற்றத்தில் பஜாஜ் அவெஞ்சர் போன்று இருக்கும் இந்த எலக்ட்ரிக் க்ரூஸர் பைக்கின் ரேஞ்ச் 250கிமீ ஆகும். இந்த பைக்கின் டாப்-ஸ்பீடு 80 kmph ஆகும்.

ஹோப் ஆக்ஸோ: இந்த வரிசையில் நாம் பார்க்கும், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற மற்றொரு எலக்ட்ரிக் பைக். இதில் 3.75kWh என்ற அளவில் சிறியதான பேட்டரி தான் பொருத்தப்படுகிறது. ஆனால், இதனை முழுவதுமாக சார்ஜ் செய்தால் 150கிமீ தொலைவிற்கு பைக்கில் பயணிக்கலாம் எனவும், பைக்கின் டாப்-ஸ்பீடு 95kmph எனவும் பைக்கை தயாரிக்கும் ஹோப் எலக்ட்ரிக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
டார்க் க்ராடோஸ் ஆர்: அல்ட்ராவொயலெட் எஃப்77 பைக்கை போன்று ஸ்டைலிஷான எலக்ட்ரிக் பைக் டார்க் க்ராடொஸ் ஆர் ஆகும். சிங்கிள் சார்ஜில் 180கிமீ தொலைவிற்கு பயணிக்கக்கூடியது என கூறப்படும் க்ராடோஸ் ஆரின் டாப்-ஸ்பீடு 105kmph ஆகும். வீட்டு உபயோக சார்ஜரை கொண்டு இந்த பைக்கின் பேட்டரியை 20%- 80% சார்ஜ் செய்ய 3 மணிநேரங்கள் தேவைப்படும். அதேவேளையில், ஃபாஸ்ட் சார்ஜரை கொண்டு 0-80% சார்ஜை வெறும் 1 மணிநேரத்தில் சார்ஜ் நிரப்பிவிடலாமாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலக்ட்ரிக் கார்களை போன்று, புது, புது எலக்ட்ரிக் பைக்குகள் தொடர்ச்சியாக சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இதனால், இந்தியாவின் எலக்ட்ரிக் பைக்குகள் வரிசை இன்னும் விரிவடையும் காலம் வெகு தொலைவில் இல்லை. ஆனால், 2-வீலர் சேல்ஸில் முன்னணியில் இருக்கும் நிறுவனங்கள் எதுவும் இன்னமும் எலக்ட்ரிக் பைக்குகள் தயாரிப்பில் இறங்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications









