யமஹா ஆர்15 பைக்கை வாங்கவே தனி கூட்டம் இருக்கும்போல!! ஒவ்வொரு மாதமும் விற்பனை டாப் கியரில் எகிறுது...
இந்தியாவின் முன்னணி மோட்டார்சைக்கிள் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் யமஹா கடந்த 2023 மே மாதத்தில் விற்பனை செய்த 2-வீலர்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
கொரோனா காலத்திற்கு பின் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை ஆனது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இதற்கு கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலர்களின் எண்ணிக்கையே சாட்சியாகும். ஏனெனில் கடந்த மே மாதத்தில் மொத்தம் 53,751 இருசக்கர வாகனங்களை இந்தியாவில் யமஹா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

இது 2022 மே மாதத்தில் யமஹா விற்பனை செய்த எண்ணிக்கையை விட கிட்டத்தட்ட 8,844 யூனிட்கள் குறைவாகும். ஏனெனில் அந்த மாதத்தில் வெறும் 44,907 இருசக்கர வாகனங்களை மட்டுமே யமஹா நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இத்தனைக்கும் அந்த சமயத்தில் மொத்தம் 6 விதமான 2-வீலர் மாடல்களை இந்தியாவில் யமஹா விற்பனை செய்துவந்தது.
ஆனால் தற்சமயம் 5 மாடல்கள் மட்டுமே விற்பனையில் உள்ளன. எஃப்.இசட், ஆர்15, ரே இசட்.ஆர், ஃபேஸினோ மற்றும் எம்டி15 என்பவை அவை ஆகும். அப்போது விற்பனையில் இருந்த எஃப்.இசட்25 பைக் இப்போது விற்பனையில் இல்லை. வழக்கம்போல் கடந்த மே மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலராக எஃப்.இசட் முதலிடம் வகிக்கிறது.

கடந்த மே மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எஃப்.இசட் பைக்குகளின் எண்ணிக்கை 16,919 ஆகும். ஆனால் 2022 மே மாதத்தில் 15,068 யமஹா எஃப்.இசட் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை ஆனது 12.28% அதிகரித்துள்ளது. அதாவது, கடந்த ஆண்டு மே மாதத்தை காட்டிலும் கடந்த மே மாதத்தில் 1,851 எஃப்.இசட் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
எஃப்.இசட் பைக்குகளுக்கு அடுத்து யமஹா பிராண்டில் இருந்து அதிகளவில் விற்பனை செய்யப்பட்ட மோட்டார்சைக்கிளாக ஆர்15 விளங்குகிறது. கடந்த மே மாதத்தில் மொத்தம் 11,280 ஆர்15 பைக்குகள் விற்கப்பட்டுள்ளன. ஆனால் 2022 மே மாதத்தில் ஆர்15 பைக்குகளின் விற்பனை எண்ணிக்கை வெறும் 7,120 மட்டுமே ஆகும். இந்த வகையில் ஆர்15 பைக்குகளின் விற்பனை 58.43% அதிகரித்துள்ளது.

3வது இடத்தில் யமஹா ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் உள்ளது. ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் விற்பனையில் பெரியதாக மாற்றமில்லை. 2022 மே மாதத்தில் 8,845 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், கடந்த மாதத்தில் ஏறக்குறைய ஆயிரம் யூனிட்கள் அதிகமாக 9,794 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்கப்பட்டுள்ளன. இதற்கடுத்து 4வது மற்றும் 5வது இடங்களில் ஃபேஸினோ ஸ்கூட்டர் மற்றும் எம்டி15 பைக் உள்ளன. இவற்றின் கடந்த மே மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 8,422 மற்றும் 7,156 ஆகும்.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: இந்தியாவில் வெறும் 5 இருசக்கர வாகனங்களை மட்டுமே விற்பனை செய்யும் யமஹா நம் நாட்டை ஓர் 2-வீலர் உற்பத்தி மையமாகவே பயன்படுத்துகிறது. ஏனெனில் இந்தியாவில் தயாரித்து மொத்தம் 8 விதமான 2-வீலர்களை வெளிநாட்டிற்கு யமஹா ஏற்றுமதி செய்கிறது. 2022 மே மாதம் சமயத்தில் யமஹா ஏற்றுமதி செய்யும் 2-வீலர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









