யமஹா ஸ்கூட்டரில் யாரும் எதிர்பார்க்காத வசதி... இந்தியாவிலேயே முதல்முறையாக - சேல்ஸ் பிச்சிக்க போகுது!!
யமஹா நிறுவனம் அதன் 2023 ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரை மிக மிக முக்கியமான பாதுகாப்பு அம்சத்துடன் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. அது என்ன பாதுகாப்பு அம்சம்? அதன் பயன்கள் என்னென்ன? என்பதை பற்றி இனி விரிவாக பார்க்கலாம்.
பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிமுறையின் 2ஆம் கட்ட கட்டுப்பாடுகளினால் யமஹா நிறுவனம் இந்தியாவில் விற்கப்படும் அதன் 2-வீலர்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்துள்ளது. இதன்படி, சந்தையில் பிரபலமான ஆர்15 வி4 பைக்கில் குயிக் ஷிஃப்டரை இனி புதிய இண்டென்சிட்டி வெள்ளை நிற பெயிண்ட் தேர்விலும் பெறலாம். இதற்கு முன், ரேசிங் நீல நிற பெயிண்ட் தேர்வில் மட்டுமே குயிக் ஷிஃப்டர் வசதி வழங்கப்பட்டு வந்தது.

ஆர்15 பைக்கின் 3ஆம் தலைமுறை மாடலான ஆர்15எஸ் பிஎஸ்6-இன் 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப ஒபிடி2-க்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் எல்சிடி திரையையும் ஆர்15எஸ் பைக் பெற்றுள்ளது. ஆர்15 பைக்கின் நாக்டு-வெர்சனாக விளங்கும் எம்டி-15 பைக் டார்க் மேட் நீலம் மற்றும் மெட்டாலிக் கருப்பு என 2 விதமான பெயிண்ட் தேர்வுகளில் புதிய வேரியண்ட்டை பெற்றுள்ளது.
எம்டி-15 பைக்கின் இந்த வேரியண்ட்டை ஒய்-கனெக்ட் வசதி உடன் வாங்குவதும், வாங்காததும் வாடிக்கையாளர்களின் விருப்பம் ஆகும். அத்துடன் புதிய எம்டி-15 பைக்கிலும் ட்யூவல்-சேனல் ஏபிஎஸ் போன்ற அம்சங்களை பெறலாம். இவை எல்லாவற்றையும் விட, ஆர்15 பைக்கின் ஸ்கூட்டர் வெர்சன் எனப்படும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் ஏகப்பட்ட புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் நம்மை மிகவும் கவர்வது, டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் ஆகும்.
இந்தியாவில் விற்கப்படும் மேக்ஸி ரக ஸ்கூட்டர்களிலேயே முதல்முறையாக யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் சுருக்கமாக டிசிஎஸ் எனப்படும் டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டத்தை பெற்றுள்ளது. இந்த தொழிற்நுட்ப அம்சத்தின் முக்கிய சிறப்பம்சம், சக்கரங்களின் சுழற்சியை கட்டுப்படுத்தி குறைப்பதாகும். இதனால் வாகனத்தின் செயல்படுதிறன் மேம்படுவது மட்டுமின்றி, எந்தவொரு சாலையிலும் சிறப்பான ஹேண்ட்லிங் கிடைக்கும்.

இந்த தொழிற்நுட்ப அம்சத்துடன் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 2023 யமஹா ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் ஆன்-போர்டு அம்சமாக டையாக்னாஸ்டிக்ஸ்-2 சிஸ்டமும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் புதிய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டர் 20% எத்தனால் கலக்கப்பட்ட பெட்ரோலை ஏற்கும். அத்துடன், ஹசார்ட் சிஸ்டத்தை ஸ்டாண்டர்ட் அம்சமாக பெற்றிருக்கும் புதிய ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரில் புதிய சில்வர் நிற பெயிண்ட் தேர்வையும் யமஹா அறிமுகப்படுத்தி உள்ளது.
யமஹா நிறுவனம் ஏரோக்ஸ் ஸ்கூட்டரில் 155சிசி ப்ளூ கோர் என்ஜினை விவிஏ தொழிற்நுட்பத்துடன் பொருத்துகிறது. சிவிடி கியர்பாக்ஸ் உடன் இணைக்கப்படும் ஏரோக்ஸ் 155 ஸ்கூட்டரின் லிக்யுடு-கூல்டு, 4-ஸ்ட்ரோக், SOHC, 4-வால்வு என்ஜின் அதிகப்பட்சமாக 8,000 ஆர்பிஎம்-இல் 15 பிஎஸ் மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 13.9 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து
டிராக்ஷன் கண்ட்ரோல் சிஸ்டம் கார்களில் வழங்கப்படுவதை தாண்டி, தற்போதைய காலத்தில் இருசக்கர வாகனங்களிலும் வழங்கப்பட ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. டிராக்ஷன் கண்ட்ரோலை இந்தியாவில் முதலாவதாக பெறும் ஸ்கூட்டர் தான் ஏரோக்ஸ் 155 ஆகும். ஆனால் பைக்குகளில் ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதத்திலேயே தனது எஃப்.இசட் மற்றும் எம்டி பைக்குகளில் யமஹா வழங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








