யமஹாவில் அதிக பேர் வாங்கும் பைக்!! புதிய பெயிண்ட் ஆப்ஷன்களில் அறிமுகம்... தீபாவளிக்கு ஒன்றை வாங்கி போடுங்கள்!!
யமஹா (Yamaha) நிறுவனம் அதன் எஃப்.இசட்-எஸ் எஃப்.ஐ வி4 மோட்டார்சைக்கிளில் புதிய டார்க் மேட் நிலம் மற்றும் மேட் கருப்பு என்கிற இரு புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்தி உள்ளது. அதனை பற்றியும், இந்த யமஹா பைக்கை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.
பிரபல ஜப்பானிய மோட்டார்சைக்கிள் நிறுவனமான யமஹா இந்தியாவில் 'தி கால் ஆஃப் தி ப்ளூ' என்ற பெயரில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கில் புதியதாக கவர்ச்சிக்கரமான இரு பெயிண்ட் ஆப்ஷன்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன.

இந்தியாவில் பிரபலமான ஸ்போர்ட்ஸ் பைக்குகளுள் ஒன்று யமஹா எஃப்.இசட்-எஸ் ஆகும். யமஹாவில் இருந்து இந்திய சந்தையில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 2-வீலர் எஃப்.இசட் ரக பைக் ஆகும். இதனாலேயே மற்ற 2-வீலர்களை அப்டேட் செய்கிறதோ இல்லையோ... எஃப்.இசட் பைக்குகளை யமஹா அவ்வப்போது அப்டேட் செய்துவிடுகிறது. இந்த வகையில், தற்போது யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கில் இரு புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன.
டார்க் மேட் நீலம் மற்றும் மேட் கருப்பு என்பவை அந்த இரு புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் ஆகும். இந்த புதிய நிறங்களில் யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.1,28,900 நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் இல்லாமல், மெட்டாலிக் கிரே, மெஜஸ்டிக் சிவப்பு மற்றும் மெட்டாலிக் கருப்பு போன்ற வழக்கமான பெயிண்ட் ஆப்ஷன்களிலும் யமஹா எஃப்.இசட்-எஸ் மோட்டார்சைக்கிளை வாங்கலாம்.
புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை தவிர்த்து, பைக்கின் மற்ற இயந்திர பாகங்களில் வேறெந்த மாற்றமும் இல்லை. யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கில் 149சிசி என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 7,250 ஆர்பிஎம்-இல் 12.4 பிஎஸ் மற்றும் 5,500 ஆர்பிஎம்-இல் 13.3 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது.

யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கில் டிராக்ஷன் கண்ட்ரோல், முன் & பின் டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ், மல்டி-ஃபங்க்சன் எல்சிடி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், எல்இடி ஹெட்லைட், டயர் ஹக்கிங் ரியர் மட்கார்ட், என்ஜினுக்கு அடிப்பகுதியில் கார்ட், ப்ளூடூத் சார்ந்த ஒய்-கனெக்ட் செயலி உள்ளிட்ட பயணிகளின் சவுகரியத்திற்கான அம்சங்கள் இடம்பெறுகின்றன.
இதில் ஒய்-கனெக்டட் செயலி மூலமாக மொபைல் கால் அழைப்புகள், எஸ்.எம்.எஸ் மற்றும் இ-மெயில் போன்ற நோட்டிஃபிகேஷன்களையும், போனின் பேட்டரி சார்ஜ் நிலையையும், பைக்கின் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வாயிலாகவே அறியலாம். சஸ்பென்ஷனுக்கு இந்த பைக்கில் முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்குகளும், பின்பக்கத்தில் இரட்டை ரியர் ஷாக்குகளும் வழங்கப்படுகின்றன.
பிரேக் பணியை கவனித்துக் கொள்ள 282மிமீ டிஸ்க் முன்பக்கத்திலும், 220மிமீ டிஸ்க் பின்பக்கத்திலும் கொடுக்கப்படுகின்றன. இந்த யமஹா ஸ்போர்ட்ஸ் பைக்கில் சக்கரங்கள் 17 இன்ச்சில் வழங்கப்படுகின்றன. யமஹா எஃப்.இசட்-எஸ் பைக்கிற்கு விற்பனையில் போட்டியாக சுஸுகி ஜிக்ஸெர், ஹோண்டா சிபி ஹார்னெட் 160ஆர் மற்றும் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர்160 4வி உள்ளிட்டவை உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் நெருங்கி வரும் சூழலில், இந்த சமயத்தில் வாடிக்கையாளர்களை கவர இவ்வாறான ஒரு முயற்சியை யமஹா கையில் எடுத்துள்ளது. பைக்கில் சில மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென்றால், நீண்ட நாட்கள் ஆகலாம் மற்றும் செலவு அதிகமாகலாம். ஆதலால், இவ்வாறு புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை கொண்டுவருவது தான் எளிமையான வழி ஆகும்.


Click it and Unblock the Notifications








