ஜப்பான் புரோடெக்ட் னு நிறைய பேர் நம்பி வாங்குறாங்க!! யமஹாவில் இருந்து எத்தனை 2-வீலர்ஸ் விற்பனையாகுது தெரியுமா?
ஜப்பானை சேர்ந்த பிரபல இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான யமஹா (Yamaha)-இல் இருந்து கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இருசக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளுடன் வெளியாகியுள்ளன.
இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று யமஹா ஆகும். யமஹா இந்தியா நிறுவனத்தில் இருந்து கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 64,182 2-வீலர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே 2022 செப்டம்பர் மாதத்தில் வெறும் 56,939 இருசக்கர வாகனங்களை மட்டுமே இந்தியாவில் யமஹா விற்பனை செய்திருந்தது.

யமஹாவில் இருந்து இந்திய சந்தையில் தற்சமயம் ரே இசட்.ஆர், எஃப்.இசட், ஃபேஸினோ, ஆர்15, எம்டி15 மற்றும் ஏரோக்ஸ் என 6 இருசக்கர மாடல்கள் விற்பனை செய்யப்படுகின்றன. 2022 செப்டம்பர் மாதத்திலும் 6 விதமான இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டு கொண்டிருந்தன. ஆனால் அந்த சமயத்தில் ஏரோக்ஸ் ஸ்கூட்டருக்கு பதிலாக எஃப்.இசட்25 என்ற 250சிசி பைக் விற்பனையில் இருந்தது.
இந்திய சந்தையில் யமஹா பிராண்டில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனையாகக்கூடிய இருசக்கர வாகனமாக கடந்த சில வருடங்களாக எஃப்.இசட் விளங்கிவந்தது. ஆனால், கடந்த 2023 செப்டம்பர் மாத விற்பனையில் எஃப்.இசட்-ஐ ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் முந்தி முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த 2023 செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 15,904 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2022 செப்டம்பரில் வெறும் 8,143 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. ரே இசட்.ஆர் ஸ்கூட்டரின் விற்பனை வளர்ச்சியினால், 2வது இடத்திற்கு சரிந்துள்ள எஃப்.இசட் கடந்த செப்டம்பர் மாதத்தில் வெறும் 14,872 பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு உள்ளது. அதுவே, 2022 செப்டம்பரில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான எஃப்.இசட் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இவை இரண்டிற்கு அடுத்து 3வது இடத்தில் யமஹா ஃபேஸினோ என்ற இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களுள் ஒன்று உள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 12,014 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதுவே, 2022 செப்டம்பரில் 10,348 ஃபேஸினோ ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. 4வது இடத்தில் ஆர்15 மோட்டார்சைக்கிளும், 5வது இடத்தில் எம்டி15 மோட்டார்சைக்கிளும் உள்ளன.

இதில் ஆர்15 பைக்குகள் கடந்த மாதத்தில் 11,131 யூனிட்களும், எம்டி15 பைக்குகள் 8,691 யூனிட்களும் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இவை இரண்டின் விற்பனையும் 2022 செப்டம்பரில் விற்பனையானவற்றை விட அதிகமாகும். யமஹாவின் மேக்ஸி-ஸ்கூட்டரான ஏரோக்ஸ் 1,570 யூனிட்கள் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ளது. ஆர்15 மற்றும் எம்டி15 பைக்குகளில் பொருத்தப்படும் அதே 155சிசி என்ஜின் தான் இந்த ஸ்கூட்டரில் பொருத்தப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இதற்கு யமஹாவின் கடந்த செப்டம்பர் மாத விற்பனை ரிப்போர்ட் சரியான உதாரணம் ஆகும். ஆனால் மறுப்பக்கம், இந்தியாவில் இருந்து யமஹா 2-வீலர்கள் ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளது. உள்நாட்டு விற்பனையில் மட்டுமின்றி, இந்தியாவை வெளிநாட்டு ஏற்றுமதியிலும் யமஹா பெரிதும் நம்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications









