யமஹா உருவாக்கிய ஹேண்டில் பார் இல்லாத பைக்.. எப்படிங்க இந்த வண்டிய ஓட்டுறது? நாம ஓட்டவே தேவையில்ல அதுவே போகும்!
உலக புகழ்பெற்ற இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா ஹேண்டில்பார் இல்லாத இரண்டு சக்கர வாகனத்தை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹேண்டில்பார் இல்லாத அந்த பைக்கை எப்படி இயங்கும்? அதன் சிறப்புகள் என்ன? இதுபோன்ற அனைத்து முக்கிய தகவல்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா, ஹேண்டில்பாரே இல்லாமல் ஓர் இரண்டு சக்கர வாகனத்தை தயாரித்து இருக்கின்றது. இந்த வாகனத்தில் ஹேண்டில் பார் மட்டுமில்லைங்க ஸ்டாண்டும் வழங்கப்படவில்லை. இப்போது விற்பனையில் இருக்கும் இரண்டு சக்கர வாகனங்களில் முக்கியம் என கூறப்படும் பல்வேறு கருவிகள் இல்லாமலேயே இந்த பைக்கை யமஹா தயார் செய்திருக்கின்றது.

அப்படி என்றால் இந்த பைக்கை எப்படி ஓட்டுவது என்கிற சந்தேகம் உங்களுக்கு வரலாம். ஆனால், இந்த பைக்கை இயக்க மனித தலையீடே தேவையில்லை. அதற்கு பதிலாக தானாக இயங்கும் வசதியே இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. ஆமாங்க, இது ஓர் ஏஐ தொழில்நுட்ப வசதிக் கொண்ட பைக் ஆகும்.
மேலும், இதற்கு செல்ஃப் பேலன்ஸிங் வசதியும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதனால்தான், ஹேண்டில் பார் மற்றும் சைடு ஸ்டாண்டு இந்த பைக்கில் வழங்கப்படவில்லை. சைடு இல்லாமலேயே ஸ்டடியாக நிற்கவே இந்த பைக்கிற்கு செல்ஃப் பேலன்ஸிங் திறன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த இருசக்கர வாகனத்தை யமஹா நிறுவனம் கான்செப்ட் மாடலாகவே தற்போது தயார் செய்திருக்கின்றது.

இதற்கு மோட்டாராய்டு 2 (Motoroid 2) என பெயர் சூட்டப்பட்டு இருக்கின்றது. மேலும், இதன் உருவம் மற்றும் அம்சங்களை வைத்து பார்க்கையில் இந்த பைக் விற்பனைக்கு வர இன்னும் பல தசாப்தங்கள் ஆகும் என எதிர்பாக்கப்படுகின்றது. இதற்கேற்ப, இந்த பைக் பற்றிய எந்தவொரு தகவலையும் யமஹா நிறுவனம் பகிர்ந்துக் கொள்ளவில்லை.
அதாவது, இருசக்கர வாகனம் எப்போது உற்பத்தி செய்யப்படும்? மற்றும் எப்போது அறிமுகம் செய்யப்படும்? என்கிற விபரங்களையே மூடி மறைத்திருக்கின்றது. அதேவேளையில், இது ஓர் எலெக்ட்ரிக் பைக் என்பது தற்போது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக சைலென்சர் மோட்டாராய்டு 2-வில் இடம் பெறவில்லை.

இதேபோல், எலெக்ட்ரிக் ஹப் மோட்டார் பைக்கின் பின் பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ஹப் மோட்டார் ஸ்விங்கார்மில் பொருத்தப்பட்டு இருக்கின்றது. தொடர்ந்து, இந்த பின் வீல் சாய்தல், நிமிர்தல் போன்றவற்றை செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது. பைக்கின் முக்கிய பாகங்கள் பல மையப் பகுதியில் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டு இருக்கின்றது.
எடை பகிர்வை சமநிலைப்படுத்தும் நோக்கில் இவ்வாறு செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், ஸ்விங்கார்ம் மற்றும் பேட்டரி பாக்ஸ் ஆகிய டில்ட் செய்துக் கொள்ளும் வகையில் இணைக்கப்பட்டு இருக்கின்றது. இந்த சிஸ்டத்திற்கு யமஹா நிறுவனம் ஆக்டீவ் மாஸ் சென்டர் கன்ட்ரோல் சிஸ்டம் (Active Mass Center Control System) என பெயர் சூட்டி இருக்கின்றது.
இதுதவிர இந்த எலெக்ட்ரிக் பைக்கில் முகத்தை அடையாளம் காணும் வசதி, கெஸ்ட்சர் கன்ட்ரோல் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதன் வாயிலாக ரைடர் சொல்வதை அந்த வாகனம் கேட்டு தன்னிச்சையாக செயல்படும். இத்தகைய தரமான பைக்கையே யமஹா நிறுவனம் தற்போது தயார் செய்து இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த பைக்கை கை அசைத்து வா என கூப்பிட்டாலும் அது தானாக நகர்ந்து வரும். அத்துடந், பாதைக்கு ஏற்ப அது தன்னுடைய வழித் தட்தை மாற்றி அது பயணிக்கும். இதுதவிர, ரைடரை பாதுகாப்பு அழைத்துச் செல்ல ஏதுவாக பின் பக்கத்தில் ஓர் ஹோல்டர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
அது, ரைடரை இருக்கி பற்றியவாறு ரைடு செய்ய உதவும். அதாவது, சீட் பெல்டைபோல் இது இயங்கும். எனவே பாதுகாப்பான ரைடு இதன் வாயிலாக உறுதிச் செய்யப்படும். இத்தகைய சிறப்பான எலெக்ட்ரிக் பைக்கே மோட்டராய்டு 2 ஆகும். இந்த பைக் இப்போதே பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









