150கிலோவாக இருந்தாலும் அசால்டாக இழுத்து செல்லும் இ-ஸ்கூட்டர் வெளியீடு.. இதோட கிரவுண்ட் கிளியரன்ஸ் இவ்ளோவா!!
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான (Electric Vehicles) வரவேற்பு நாளுக்கு நாள் அதகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக, போர் காலத்தில் எதிரி நாட்டை படையெடுக்கும் போர் வீரர்களைப் போல நம் நாட்டை நோக்கி மின்சார வாகனங்கள் படை எடுத்துக் கொண்டு இருக்கின்றன.
இந்திய நிறுவனம், வெளிநாட்டு நிறுவனம், முன்னணி நிறுவனம் மற்றும் புதுமுக நிறுவனம் என பல இந்தியாவில் அதிக ஆர்வத்துடன் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே யாரும் அறிந்திராத புதுமுக நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய சூப்பரான எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்குக் களமிறக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அந்த வாகனத்தின் சிறப்புகள் என்ன? அவற்றின் விலை விபரம்? என அனைத்து முக்கிய தகவல்களையும்தான் இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம். யோ பைக்ஸ் (YO Bykes) எனும் நிறுவனமே அதன் புதுமுக எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத்தை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கும் பிராண்ட் ஆகும்.
யோ பைக்ஸ்-ம் ஓர் புதுமுக நிறுவனம்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. யோ டிரஸ்ட் ட்ரிஃப்ட் எச்எக்ஸ் (YO TRUST-Drift Hx), மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. அஹமதாபாத்-தில் வைத்தே இந்த இ-வாகன அறிமுக நிகழ்வை அது செய்திருக்கின்றது. நாட்டில் எரிபொருளில் வாகனங்களின் தடயமே இருக்கக் கூடாது என்கிற நோக்கில் இந்தியாவில் கால் தடம் பதித்திருக்கும் நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும்.
இதன் அடிப்படையிலேயே யோ டிரஸ்ட் ட்ரிஃப்ட் எச்எக்ஸ் எலெக்ட்ரிக் டூ-வீலரையும் அது தயார் செய்திருக்கின்றது. சொல்லப்போனால் ஓர் பெட்ரோல் டூ-வீலரைக் காட்டிலும் அதிக பயன்பாட்டை வழங்கும் வகையில் இந்த வாகனத்தை யோ பைக்ஸ் தயார் செய்திருக்கின்றது. பெட்ரோலில் இயங்கும் வாகனங்கள் அதிக பாரத்தைச் சுமப்பதில் பெயர்போனவையாக இருக்கின்றன.
இந்த திறனுக்கு டஃப் கொடுக்கும் வகையிலேயே யோ பைக்ஸ் நிறுவனம் யோ டிரஸ்ட் ட்ரிஃப்ட் எச்எக்ஸ்-க்கு 150 கிலோ எடையுள்ள பொருட்களை இழுத்துச் செல்லும் திறனை வழங்கி இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிலோ மீட்டர் ஆகும்.
மேலும், இது வெறும் 3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தையும், வெறும் 7 செகண்டுகளில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 65 கிலோ மீட்ட வேகத்தையும் எட்டும் திறனையும் யோ டிரஸ்ட் ட்ரிஃப்ட் எச்எக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டு இருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, சிங்கிள் சார்ஜில், அதாவது, ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்சை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும். இந்த சூப்பரான ரேஞ்ஜ் திறனுக்காக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 2.65 kWh பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் லித்தியம் அயன் பேட்டரி பேக் ஆகும்.
இதனை குறுகிய நேரத்தில் சார்ஜ் செய்துக் கொள்ளவும் முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 4-5 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. மேலும், இந்தியாவின் மிகவும் கரடு-முரடான சாலையை சமாளிக்கும் விதமாக 170 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸ் இந்த வாகனத்திற்குக் கொடுக்கப்பட்டு இருக்கின்றது.
ஆகையால், பள்ளம் - மேடுகளை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சமாளிக்காமல் போய்விடுமோ என்கிற கவலையே வேண்டாம். சஸ்பென்ஷனை பொருத்த வரை முன் பக்க வீலில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்கும், பின் பக்கத்தில் ஸ்விங் ஆர்ம் உடன் கூடிய ஷாக் அப்சார்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதுதவிர, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், காம்பி பிரேக் சிஸ்டம், பேட்டரி வார்னிங் அலாரம், பேட்டரி ரேஞ்ச் இன்டிகேட்டர், பன்முக ரைடிங் மோட்கள், துணிகள் எதுவும் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கான குவார்டு, பில்லியன் ஃபூட் ரெஸ்ட், மொபைலை சார்ஜ் செய்துக் கொள்ளும் வசதி, ஃப்ளூர் மேட் என ஏகப்பட்ட அம்சங்கள் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த இருசக்கர வாகனத்தின் ஒட்டுமொத்த எடையே 95 கிலோ மட்டுமே ஆகும். ஆகையால், கையாள்வதும் சுலபமே ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருப்பது 2500W BLDC ஹப் மோட்டார் ஆகும். இது இயங்கும்போது பெரிய அளவில் சத்தம் எதுவும் வராது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இதன் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இதன் விலைகள் அறிவிக்கப்படும் என நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், புக்கிங் பணிகளும் கூடிய விரைவில் தொடங்கப்பட இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் ஹீரோ நிறுவனத்தின் விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தொடங்கி இன்னும் பல மாடல்களுக்கு பெரும் போட்டியாளனாக மாறும்.


Click it and Unblock the Notifications








