பஜாஜ் தயாரித்த யூலூ டெக்ஸ் ஜிஆர் பயன்பாட்டுக்கு வந்தாச்சு! யாரோட கைகளுக்கு போயிருக்கு தெரிஞ்சா ஆச்சரியப்படுவீக
யூலு (Yulu) இந்த பெயர் நீங்கள் அறியப்படாத ஒன்றாக இருக்கலாம். ஆனால், மும்பை போன்ற நகரத்தை நீங்கள் விசிட் செய்திருப்பின் இது என்ன மாதிரியான நிறுவனம் என்பது உங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். யூலு, இது ஓர் வாடகை வாகன சேவை நிறுவனம் ஆகும்.
தன்னுடைய வாடகை வாகன சேவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை மட்டுமே அது ஈடுபடுத்தி வருகின்றது. இந்த நிறுவனத்திற்கான இ-வாகனங்கள் பஜாஜ் நிறுவனத்தின் சேத்தக் டெக்னாலஜிஸ் லிமிடெட்டின்கீழ் தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மிராக்கிள் ஜிஆர் மற்றும் டெக்ஸ் ஜிஆர் (Yulu DeX GR) ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே யூலுவின் வாடகை வாகன சேவையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன.

இவை வாடகை வாகன சேவைக்கு மட்டுல்ல டெலிவரி சேவைக்கும் உகந்த வாகனங்களாக கருதப்படுகின்றன. இதன் அடிப்படையிலேயே, பெங்களூருவில் டெலிவரி பார்ட்னர்கள் சிலருக்கு யூலு டெக்ஸ் ஜிஆர் எலெக்ட்ரிக் வாகனங்கள் வழங்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு டெலிவரி பார்ட்னர்களுக்கு வழங்கப்பட்டு இருப்பது மூன்றாம் தலைமுறை யூலு டெக்ஸ் ஜிஆர் இவி-க்கள் ஆகும்.
இதை ஒப்படைக்கும் நிகழ்வு மிகவும் கோலாகலமாக பெங்களூருவில் நடைபெற்றது. இதில், நகரத்தின் காவல்துறை இணை ஆணையர் எம்என் அனுசோத் ஐபிஎஸ் உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. யூலு நிறுவனத்தின் மின்சார இருசக்கர வாகன பயன்பாட்டால் இதுவரை 15 ஆயிரம் மெட்ரிக் டன் கார்பன் வெளிப்பாடு தவிர்க்கப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவிக்கின்றது.
இந்த சூழலிலேயே தற்போது பெங்களூருவில் ஸ்விக்கி, சொமேட்டோ போன்ற டெலிவரி பார்ட்னர்கள் சிலரின் வசம் மின்சார இருசக்கர வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றினால், மேலும் கார்பன் வெளிப்பாடு நாட்டில் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, டெலிவரி பார்ட்னர்களின் அதிக லாபத்திற்கும் இந்த வாகனம் வழி வகுக்க இருக்கின்றது.
பெட்ரோல் வாகனங்களில் ஈட்டுவதைக் காட்டிலும் அதிகம் லாபம் இதன் வாயிலாக ஈட்ட முடியும். மூன்றாம் தலைமுறை டெக்ஸ் ஜிஆர் இவியில் இம்ப்ரூவ் செய்யப்பட்ட அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின் அனைத்து சாலைகளுக்கும் ஏற்ற வாகனமாக அது அப்டேட் செய்யப்பட்டு இருக்கின்றது.
மேலும், டெலிவரி பார்ட்னர்கள் தொடர்ச்சியாக வாகனத்தை இயக்கிக் கொண்டே இருந்தாலும் எந்த பிரச்னையையும் வழங்காத வண்ணம் அதனை நிறுவனம் வடிவமைத்திருக்கின்றது. யூலுவின் மிராக்கிள் ஜிஆர் மற்றும் டெக்ஸ் ஜிஆர் ஆகிய இரண்டும் மணிக்கு 25 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டவை ஆகும்.
ஆகையால், இவற்றை பதிவு செய்யவோ, இவற்றை லைசென்ஸ் வைத்திருக்கவோ தேவை இல்லை. இரண்டும் ஒரே பிளாட்பாரத்தில் வைத்தே தயாரிக்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. ஓர் முழு சார்ஜில் டெக்ஸ் ஜிஆர் 60 கிமீ தொடங்கி 80 கிமீ வரையில் ரேஞ்ஜ் தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஒருவர் மட்டுமே டெக்ஸ் ஜிஆர் இவியில் பயணிக்க முடியும்.
மீதமுள்ள இடம் சரக்குகளை ஏற்றி செல்வதற்காக ஒதுக்கப்பட்டு இருக்கின்றது. அதில் பெரிய கேரியர் கொடுக்கப்பட்டு இருக்கும். இதில், 15 கிலோ கிராம் வரையிலான எடை உள்ள பொருட்களை அதில் ஏற்றிச் செல்ல முடியும். ஸ்வாப்பபிள் பேட்டரி வசதிக் கொண்டதே இந்த டெக்ஸ் ஜிஆர் ஆகும்.
சார்ஜ் தீர்ந்துவிட்டால் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றிக் கொண்டு மீண்டும் ரைடை ஸ்டார்ட் செய்யலாம். இப்போதைய நிலவரப்படி புனே, மும்பை, புவனேஸ்வர், அஹமதாபாத், பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே யூலுவின் இ-வாகனங்கள் பயன்பாட்டில் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்மில் பலர் அறியாத தகவலாக இது இருக்கலாம். ஆனால், நீங்கள் மிகப் பெரிய வாகன காதலராக இருந்தால் கட்டாயம் உங்களுக்கு இந்த தகவல் தெரிந்திருக்கும். நமது இந்திய நிறுவனமான பஜாஜ் ஆட்டோவின் கை வசம் பல வெளிநாட்டு நிறுவனங்கள் இருக்கின்றன. இதேபோல், யூலு போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து வாடகை வாகன சேவை மற்றும் டெலிவரி நிறுவனங்களுக்கான வாகனங்களை அது தயாரித்து வருகின்றது.


Click it and Unblock the Notifications








