ஜொமேட்டோல சாப்பாடு ஆர்டர் பண்ணா இந்த வண்டிலாதான் சோறு வரும்! விலை குறைவுன்றதால ஆயிரக் கணக்குல களமிறக்கிட்டாங்க
பிரபல மின்சார வாகன வாடகை நிறுவனமான யூலு-வும், ஆன்லைன் சாப்பாடு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவும் கூட்டணி அமைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஃபூட் டெலிவரி சேவையை விரிவாக்கம் செய்யும் விதமாக இந்த இணைவை ஜொமேட்டோ அரங்கேற்றி இருக்கின்றது. இதற்காக பல ஆயிரக் கணக்கான மின்சார இருசக்கர வாகனங்களை யூலு, ஜொமேட்டோவிற்கு வழங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆகையால், இனி சாப்பாடு டெலிவரிகள் யூலுவின் மின்சார வாகனங்களிலேயே செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. யூலுவின் புகழ்பெற்ற இருசக்கர வாகன மாடல்களில் டிஇஎக்ஸ் இவி (DeX EV)-யும் ஒன்று. இதனையே ஜொமேட்டோவின் டெலிவரிக்காக யூலு வழங்கி இருக்கின்றது. 25 ஆயிரம் முதல் 35 ஆயிரம் வரை யூலு டிஇஎக்ஸ் எலெக்ட்ரிக் வாகனங்கள் ஜொமேட்டோவின் ஃபூட் டெலிவரி சேவைக்காக ஒப்படைக்கப்பட இருக்கின்றன.

இதில், 4 ஆயிரத்திற்கும் அதிகமான யூலு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்டன. அதாவது, ஏற்கனவே ஜொமேட்டோவின் டெலிவரி பார்ட்னர்கள் ஏற்கனவே யூலு மின்சார வாகனத்தில் சாப்பாடுகளை டெலிவரியை கொடுக்க ஆரம்பித்துவிட்டனர். முக்கிய நகர்புற பகுதிகளிலேயே அவை பயன்பாட்டிற்குக் களமிறக்கப்பட்டு இருக்கின்றன.
யூலுவின் மின்சார இருசக்கர வாகனங்களை வேறு சில நிறுவனங்களும் தங்களின் சேவைகளில் ஈடுபடுத்தி வருவது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே பிரபல ஆன்லைன் சாப்பாடு டெலிவரி நிறுவனமான ஜொமேட்டோவும் யூலுவை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றது. இந்தியாவில் காற்று மாசு என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது.

ஆகையால், ஒட்டுமொத்த நாடும் மின் வாகன பயன்பாட்டை நோக்கி மிக வேகமாக நகர தொடங்கி இருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய பங்களிப்பாக பெட்ரோலால் இயங்கும் வாகனங்களை தவிர்க்க தொடங்கி இருக்கின்றது, ஜொமேட்டோ. இதேபோல், அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற பிற முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்களும் தங்களின் சேவையில் மின்சார வாகனங்களைப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஜொமேட்டோ நிறுவனம் அடுத்து வரும் நாட்களிலும் மின்சார இருசக்கர வாகனங்களை அதிகளவில் தன்னுடைய டெலிவரி பணியில் பயன்படுத்த இருப்பதாக தெரிவித்து இருக்கின்றது. அந்தவகையில், 2030ஆம் ஆண்டிற்குள் 100 சதவீதம் பசுமை இயக்கத்தை நோக்கி நகர தொடங்கி இருப்பதாக அது தெரிவித்து இருக்கின்றது.

யூலு டிஇஎக்ஸ் ஓர் ஒருவர் மட்டுமே அமர்ந்து பயணிக்கும் வசதிக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். பிரத்யேகமாக டெலிவரி சேவைக்கு என்றே இந்த வாகனத்தை யூலு உருவாக்கி இருக்கின்றது. இதன் விலை ரூ. 1 லட்சம் ஆகும். ஆன்-ரோடில் 1.10 லட்சத்திற்கும் அதிகமாக இதன் விலை இருக்கும். இத்தகைய குறைவான விலைக் கொண்ட மின்சார இருசக்கர வாகனத்தையே ஜொமேட்டோ தன்னுடைய டெலிவரி சேவையில் இணைத்திருக்கின்றது.
இந்த வாகனத்தின் பின் பகுதி மற்றும் முன் பக்கத்தில் உள்ள கால் வைக்கும் பகுதி ஆகிய இரு பகுதிகளிலும் பார்சல்களை ஏற்றிச் செல்ல முடியும் குறிப்பிடத்தகுந்தது. 15 கிலோவிற்கும் அதிகமான எடைக் கொண்ட பொருட்களை இதில் ஏற்றி செல்லலாம் என்பது கவனிக்கத்தகுந்தது. டெலிவரி வாகனமாக இது இருந்தாலும் நவீன கால அம்சங்கள் சில இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், ஸ்மார்ட் டாக்லெஸ் மின்சார இருசக்கர வாகனமாக இது உருவாக்கப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
ஜொமேட்டோ, ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் போன்ற முன்னணி நிறுவனங்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல ஆரம்ப நிலை நிறுவனங்களும் தங்களின் டெலிவரி சேவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றன. ஏன், உள்ளூர் தண்ணீர் கேன் போடும் நபர் தொடங்கி ஆட்டோ டிரைவர்கள் வரை பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தத் தொடங்கி விட்டனர்.


Click it and Unblock the Notifications








