ஹீரோ நிறுவனம் அமைதியாக பல தரமான சம்பவங்களை செஞ்சிட்டு வருகிறது!! டாப்-10 லிஸ்ட்டில் 4 இடங்களில் ஹீரோ 2-வீலர்ஸ்
உலகின் மிக பெரிய பைக் மார்க்கெட் இந்தியா என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு கார்களை காட்டிலும் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை நம் நாட்டில் அதிகமாக உள்ளது. ஸ்கூட்டர்கள் இல்லாமல், கடந்த 1 வருடத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
வழக்கம்போல், கடந்த 2023-24ஆம் நிதியாண்டிலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட பைக்காக ஹீரோ ஸ்பிளெண்டர் முதலிடத்தை பிடித்துள்ளது. ஸ்கூட்டர்களையும் இந்த லிஸ்ட்டில் சேர்த்தால் கூட ஸ்பிளெண்டர் தான் லிஸ்ட்டில் முதலிடத்தை வகிக்கும். ஏனெனில், இந்தியாவின் தேசிய பைக் என சொல்லும் அளவிற்கு ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

2023 ஏப்ரல் மாதத்தில் இருந்து 2024 மார்ச் மாதம் வரையில் சுமார் 32 லட்சத்து 93,324 ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதற்கு முந்தைய 2022-23ஆம் நிதியாண்டில் இதனை காட்டிலும் 37,580 ஸ்பிளெண்டர் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், ஸ்பிளெண்டர் பைக்குகளின் விற்பனை ஆனது 1.15% கடந்த நிதியாண்டில் அதிகரித்துள்ளது.
ஹீரோ ஸ்பிளெண்டருக்கு அடுத்து 2வது இடத்தில் ஹோண்டா ஷைன் பைக் உள்ளது. நடந்து முடிந்த 2023-24ஆம் நிதியாண்டில் மொத்தம் 14 லட்சத்து 82,957 ஷைன் பைக்குகளை ஹோண்டா விற்பனை செய்துள்ளது. ஆனால், 2022-23ஆம் நிதியாண்டில் இதனை காட்டிலும் கிட்டத்தட்ட 2 லட்சத்து 73,932 ஷைன் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வரிசையில் 3வது இடத்தில் பஜாஜ் பல்சர் உள்ளது.

இந்தியாவில் பஜாஜ் பல்சர் பைக்குகள் 125சிசி-இல் இருந்து அதிகப்பட்சமாக 250சிசி வரையில் விற்பனையில் உள்ளன. 400சிசி பல்சர் பைக்கையும் அறிமுகம் செய்ய பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தயாராகி வருகிறது. கடந்த 1 வருடத்தில் மொத்தம் 14 லட்சத்து 10,974 பல்சர் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், 2022-23ஆம் நிதியாண்டில் 10 லட்சத்திற்கும் சற்று அதிக எண்ணிக்கையிலான பல்சர் பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
அதாவது, கடந்த 2023-24 நிதியாண்டில் சுமார் 3 லட்சத்து 81,917 பல்சர் பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்த லிஸ்ட்டில் 4வது இடத்தை ஹீரோ மோட்டோகார்பின் மற்றொரு பிரபலமான பைக்கான எச்.எஃப் டீலக்ஸ் பெற்றுள்ளது. கடந்த 1 வருடத்தில் மொத்தம் 10 லட்சத்து 34,178 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

ஆனால், 2022-23 நிதியாண்டில் இதனை காட்டிலும் 17,865 யூனிட்கள் அதிகமாக 10 லட்சத்து 52,043 எச்.எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த 4 பைக்குகள் மட்டுமே கடந்த 2023-24 நிதியாண்டில் 10 இலட்சம் யூனிட்களுக்கும் மேல் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். 5வது இடத்தில் பஜாஜ் பிளாட்டினா உள்ளது. ஆனால், விற்பனை எண்ணிக்கையில் ஹீரோ எச்.எஃப் டீலக்ஸ் மற்றும் பஜாஜ் பிளாட்டினாவுக்கு இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
ஏனெனில், கடந்த நிதியாண்டில் 5 லட்சத்து 2,486 பிளாட்டினா பைக்குகள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன. 6வது மற்றும் 7வது இடங்களில் டிவிஎஸ் பைக்குகளான ரைடர் மற்றும் அப்பாச்சி உள்ளன. இவை இரண்டின் கடந்த நிதியாண்டின் விற்பனை எண்ணிக்கைகள் முறையே 4 லட்சத்து 78,443 மற்றும் 3 லட்சத்து 78,072 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் முறையே ஹீரோ பேஷன் (3,56,273), ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 (3,22,370) மற்றும் ஹீரோ கிளாமர் (2,35,219) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்குகளின் பாதி விற்பனை எண்ணிக்கை அளவிற்கு கூட 2வது இடத்தில் உள்ள ஹோண்டா ஷைன் பைக்குகள் கடந்த நிதியாண்டில் விற்பனையாகவில்லை. இதில் இருந்து, இந்திய கஸ்டமர்கள் மத்தியில் ஸ்பிளெண்டர் பைக்குகள் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன என்பதை அறியலாம்.


Click it and Unblock the Notifications









