கார் கூட இதைவிட ச்சீப்பான விலையில் கிடைக்கும்!! புது ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை வாங்கனும்னா சொத்தை விற்கனும்!
ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) நிறுவனம் ரோடு கிளைட், ஃபேட் பாய் மற்றும் பிரேக் அவுட் என அதன் விலையுயர்ந்த 10 லக்சரி மோட்டார்சைக்கிள்களை சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
அமெரிக்காவை சேர்ந்த பிரபல மோட்டார்சைக்கிள் நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் அதன் நேரடி வணிகத்தை நிறுத்திக் கொண்டு நம் நாட்டை விட்டு வெளியேறியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். அதன்பின், இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் உடன் ஹார்லி-டேவிட்சன் கூட்டணி சேர்ந்தது.

இந்தியாவில் தற்சமயம் ஹார்லி-டேவிட்சன் பைக்குகளை விற்பனை செய்வது, அவற்றிற்கான சர்வீஸ்களை வழங்குவது உள்ளிட்ட பணிகளை ஹீரோ மோட்டோகார்ப் தான் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், சில புதிய ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளன. இதனை, ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹார்லி-டேவிட்சன் நிறுவனங்கள் இரண்டும் கூட்டாக சேர்ந்து அறிவித்துள்ளன.
மேலும், இந்த பைக்குகளுக்கான விலைகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதன்படி புதியதாக மொத்தம் 10 ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த 10 பைக்குகளும் இந்தியாவில் உற்பத்தி செய்யப்பட போவதில்லை. அதாவது, முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி செய்யப்பட உள்ளன.

இந்த 10 ஹார்லி-டேவிட்சன் பைக்குகளில் சில மாடல்கள் ஏற்கனவே இந்தியாவில் விற்பனை செய்யப்படுபவை ஆகும். அதாவது, அவை அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதேநேரம், சில பைக்குகள் முற்றிலும் புதியதாக இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு உள்ளன. தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள 10 ஹார்லி-டேவிட்சன் பைக்குகளிலேயே குறைந்த விலையில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது என்று பார்த்தால், அது நைட்ஸ்டர் ஆகும்.
ஆனால், அதன் எக்ஸ்-ஷோரூம் விலையே ரூ.13.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதிகப்பட்ச விலையில் ஹார்லி-டேவிட்சன் ரோடு கிளைட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ஆனது ரூ.41.79 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சனின் ஸ்போர்ட்ஸ் பிரிவு பைக்குகளுக்கு உலகில் பல நாடுகளில் சிறப்பான வரவேற்பு உள்ளது.

இந்த பிரிவில் நைட்ஸ்டர், நைட்ஸ்டர் ஸ்பெஷல் மற்றும் ஸ்போர்ட்ஸ்டர் எஸ் என 3 புதிய பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இதில் நைட்ஸ்டர் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.13.39 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு இருக்க, மற்ற இரண்டின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.14.09 லட்சம் மற்றும் ரூ.16.49 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
பான் அமெரிக்கா பைக்கின் விலையுயர்ந்த ஸ்பெஷல் வேரியண்ட் மட்டும் இந்தியாவில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பான் அமெரிக்கா ஸ்பெஷல் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.24.64 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவற்றுடன், ஃபேட் பாப் (ரூ.21.49 லட்சம்), ஃபேட் பாய் (ரூ.25.69 லட்சம்), ஹெரிடேஜ் (ரூ.27.19 லட்சம்), பிரேக் அவுட் (ரூ.30.99 லட்சம்) மற்றும் ஸ்ட்ரீட் கிளைட் (ரூ.38.79 லட்சம்) உள்ளிட்ட மோட்டார்சைக்கிள்களும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹார்லி-டேவிட்சனின் ஆதிக்கம் முடிந்துவிட்டது என நாம் நினைத்து கொண்டிருக்கும் நிலையில், அதிரடியாக 10 விலையுயர்ந்த ஹார்லி-டேவிட்சன் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த பைக்குகளில் குறிப்பாக, ஹார்லி-டேவிட்சன் பிரேக் அவுட் ஆனது கிட்டத்தட்ட சுமார் 10 வருடங்களுக்கு பிறகு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









