ராயல் என்ஃபீல்டு கூட இப்படிப்பட்ட பைக்கை உருவாக்குமா என்பது சந்தேகம் தான் - கார்களில் இருக்க வேண்டிய என்ஜின்!!
ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகள் என்றால் யாருக்கு தான் பிடிக்காமல் இருக்கும். புது, புது டிசைனில் எத்தனை மாடர்ன் பைக்குகள் வந்தாலும், கிளாசிக் தோற்றத்தில் இருப்பதினாலேயே நிறைய பேருக்கு ராயல் என்ஃபீல்டு பைக்குகளை பிடித்துள்ளது. ராயல் என்ஃபீல்டு பைக்குகள் தற்சமயம் அதிகப்பட்சமாக 650சிசி என்ஜின் உடன் கிடைக்கின்றன. ஆனால், இங்கு ஒரு ராயல் என்ஃபீல்டு பைக் 1000சிசி என்ஜின் உடன் விற்பனைக்கு கிடைக்கிறது. எந்த நிறுவனம் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை விற்பனை செய்கிறது? எந்த மாதிரியான 1000சிசி என்ஜினை பைக்கில் பொருத்தியுள்ளனர்? என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
1000சிசி என்ஜினை கொண்ட ராயல் என்ஃபீல்டு பைக் என்கிற பெயரில் ஒரு வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பதிவிட்டிருப்பவரின் பெயர் சையது ஒமர் சித்திக். கஸ்டமைஸ் செய்யப்பட்ட அந்த 1000சிசி ராயல் என்ஃபீல்டு பைக்கை ஓட்டுவதை வீடியோவாக பதிவு செய்து சையது ஒமர் சித்திக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவரது இன்ஸ்டா பதிவின்படி பார்க்கும்போது, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கார்பெர்ரி மோட்டார்சைக்கிள்ஸ் என்கிற நிறுவனம் இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கில் 1000சிசி என்ஜினை பொருத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்த அங்கீகாரம் பெற்ற பைக் கஸ்டமைஸ் நிறுவனம் தற்போது இந்தியாவில் சத்தீஸ்கர் மாநிலத்திலும் செயல்பட்டு வருகிறது.
அதாவது, 1000சிசி என்ஜினை கொண்ட இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை இந்தியாவில் இருப்பவர்களாலும் வாங்க முடியும். இதுகுறித்து சையது ஒமர் சித்திக் தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "கார்பெர்ரி டபுள் பேரல் 1000 (Carberry Double Barrel 1000) என அழைக்கப்படும் இந்த பைக் இப்போது இந்தியாவில் வசிப்பவர்களுக்கு கிடைக்கிறது. இது வி-ட்வின் என்ஜினை கொண்டுள்ளது. இது தற்போதுள்ள என்ஜின்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கார்பெர்ரி 1000சிசி கார்பரேட்டட் என்ஜின் மற்றும் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்திற்கு இணையான நீண்ட ஸ்ட்ரோக்கை கொண்டுள்ளது. கார்பெர்ரி மோட்டார்சைக்கிள்ஸ் முதலில் ஒரு ஆஸ்திரேலிய நிறுவனம். இப்போது இந்தியாவின் சத்தீஸ்கரில் உள்ளது. இந்த நிறுவனம் ராயல் என்ஃபீல்டு பைக்குகளை தனிப்பயனாக்கம் செய்து வருகிறது. இது அவர்களின் சமீபத்திய தயாரிப்பு" என குறிப்பிட்டுள்ளார்.
இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ள 1000சிசி என்ஜின் ஆனது ஓர் வி-ட்வின் என்ஜின் ஆகும். அதாவது, இரு 500சிசி என்ஜின்கள் V-வடிவில் ஒன்றாக இந்த பைக்கில் இணைக்கப்பட்டுள்ளன. இந்த 500சிசி என்ஜின்களை கார்பெர்ரி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனம் உருவாக்கவில்லை. இந்த 500சிசி என்ஜின்களை ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அதன் பழைய 500சிசி பைக்குகளுக்காக உருவாக்கியது ஆகும். 500சிசி ராயல் என்ஃபீல்டு பைக்குகள் எதுவும் தற்போது விற்பனையில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கஸ்டமைஸ் 1000சிசி ராயல் என்ஃபீல்டு பைக்கில் அதிகப்பட்சமாக 52 பிஎச்பி மற்றும் 82 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த பைக்கின் தோற்றத்தை பொறுத்தவரையில், அடிப்படையில் இது ஓர் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 பைக் ஆகும். அதாவது, கிளாசிக் 350 பைக்கில் இருந்து என்ஜினை நீக்கி, அதற்கு பதிலாக வேறு இரு ராயல் என்ஃபீல்டு பைக்குகளில் இருந்து எடுக்கப்பட்ட 500சிசி என்ஜின்கள் ஒன்றோடு ஒன்று இணைத்து 1000சிசி என்ஜினாக பொருத்தப்பட்டுள்ளது.
இந்த வேலைப்பாடுகள் அனைத்தையும் மேற்கொண்டது கார்பெர்ரி மோட்டார்சைக்கிள்ஸ் ஆகும். என்ஜினுடன் இந்த பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் மற்றும் 7-பிளேட் கிளட்ச் இணைக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, கிளாசிக் 350 பைக்கில் வழங்கப்படும் அதே பெட்ரோல் டேங்க், ஹெட்லைட் மற்றும் டெயில்லைட் உள்ளிட்டவை தான் இந்த பைக்கிலும் இடம்பெற்றுள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மக்கள் மத்தியில் பிரபலமான மாருதி சுஸுகி ஆல்டோ 800 காரை விட இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கின் என்ஜின் ஆற்றல் அதிகமாகும். கார்பெர்ரி மோட்டார்சைக்கிள்ஸ் நிறுவனத்தின் இந்த கஸ்டமைஸ் 1000சிசி ராயல் என்ஃபீல்டு பைக்கின் விலை எவ்வளவு என்பது தெரியவில்லை. இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்குவது அவரவர் விருப்பம்.


Click it and Unblock the Notifications









