ஹீரோ பைக்கின் மார்க்கெட் காலியாக போகுது!! கம்மியான விலையில் புது 200சிசி ஹோண்டா பைக்... விற்பனைக்கு அறிமுகம்!
இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கு சமீப காலங்களில் அதிக வரவேற்பு கிடைக்க ஆரம்பித்துள்ளது. மற்ற பைக்குகளை விட தரையில் இருந்து சற்று மேல்நோக்கி தூக்கப்பட்ட அட்வென்ச்சர் பைக்குகள் பார்ப்பதற்கே சற்று வித்தியாசமாக இருக்கும். இந்த பைக்குகளின் முக்கிய சிறப்பம்சம், இவற்றை எந்தவொரு சாலைக்கும் கொண்டு செல்லலாம் என்பதாகும். அதாவது, சாலையே இல்லாத காட்டுவழி பாதைகளுக்கு கூட இவற்றை தைரியமாக கொண்டு செல்லலாம். அவ்வாறான அட்வென்ச்சர் ரக பைக்காக சிபி200எக்ஸ் மாடலை சில வருடங்களுக்கு முன் ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த நிலையில், இந்த ஹோண்டா பைக் தற்போது மேம்படுத்தப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் அட்வென்ச்சர் பைக்குகளுள் ஒன்று ஹோண்டா சிபி200எக்ஸ் ஆகும். ஹீரோ மோட்டோகார்ப்பின் பிரபலமான எக்ஸ்பல்ஸ் 200 பைக்கிற்கு போட்டியாக 2021ஆம் ஆண்டில் சிபி200எக்ஸ் பைக்கை ஹோண்டா அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து, கடந்த 2023ஆம் ஆண்டில் புதிய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு மேம்படுத்தப்பட்ட ஹோண்டா சிபி200எக்ஸ் பைக் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த நிலையில் தற்போது, 2024 சிபி200எக்ஸ் பைக்கை ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா ஹார்னெட் 2.0 மோட்டார்சைக்கிளை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுவதால், சிபி200எக்ஸ் பைக்கை பார்த்தால் உங்களுக்கு ஹார்னெட் 2.0 பைக் ஞாபகத்திற்கு வரலாம். ஆனால், அட்வென்ச்சர் பைக் என்பதால், சிபி200எக்ஸ் பைக்கில் ரைடிங் பொசிஷன் கொஞ்சம் வித்தியாசமாக வழங்கப்படுகிறது.
2024 ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.47 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த அட்வென்ச்சர் பைக்கில் அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச் கொடுக்கப்படுகிறது. இதனால், க்ளட்ச் லிவரை மாற்றுவது இந்த பைக்கில் எளியதாக இருக்கும். இதனால், 2024 சிபி200எக்ஸ் பைக் நகர்புற சாலைகளில் ஓட்டுவதற்கு ஏற்றதாக இருக்கும்.

அசிஸ்ட் ஸ்லிப்பர் க்ளட்ச் ஆனது கியரை குறைக்கும்போது பைக்கின் சக்கரங்கள் லாக் ஆகுவதை தடுக்கும். இதற்கேற்ப 2024 ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கில் அகலமான ஹேண்டில்பார்ஸ் கொடுக்கப்படுவதால், சவுகரியமாக அமர்ந்து பயணம் செய்யலாம். மேலும், அட்வென்ச்சர் பயணங்களுக்கு ஏற்றவாறு நன்கு நிமிர்ந்த ரைடிங் பொசிஷனை வழங்கக்கூடியதாக இந்த பைக்கின் ஹேண்டில்பார் கொடுக்கப்பட்டுள்ளது.
இவை தவிர்த்து, இந்த ஹோண்டா அட்வென்ச்சர் பைக்கின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இந்த பைக்கில் ஹெட்லேம்ப் கௌல் மற்றும் பெட்ரோல் டேங்கிற்கு இடையே இடைவெளி வழங்கப்படுவதில்லை. இவற்றுடன், ரைடரின் சவுகரியத்திற்காக விண்ட்ஸ்க்ரீனை ஹோண்டா நிறுவனம் வழங்கியுள்ளது. மேலும், ரைடரின் கை விரல்களை பாதுகாக்கும் வகையில் ஹேண்டில்பாரில் க்னக்கில் கார்ட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில், எல்இடி விளக்குகள், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் மற்றும் எல்சிடி டிஸ்பிளே 2024 சிபி200எக்ஸ் பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இதில், ப்ளூடூத் உடன் இணைக்கக்கூடியதாக உள்ள எல்சிடி டிஸ்பிளே மூலமாக பயணத்திற்கான வழிக்காட்டியை பெறலாம். தோற்றத்தில் மட்டுமின்றி, ஹோண்டா ஹார்னெட் 2.0 பைக்கில் பொருத்தப்படும் அதே 184.4சிசி என்ஜின் தான் சிபி200எக்ஸ் பைக்கிலும் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 17 எச்பி மற்றும் 15.9 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஸ்போர்ட்ஸ் சிவப்பு, பேர்ல் நைட்ஸ்டர் பிளாக் மற்றும் டெசண்ட் ப்ளூ மெட்டாலிக் என மொத்தம் 3 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த பைக்கை வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் அட்வென்ச்சர் ரக பைக்குகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. இதனை ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக் நன்கு பயன்படுத்தி வருகிறது. ஆனால், எக்ஸ்பல்ஸ்200 பைக்கை விட விலை குறைவான ஹோண்டா சிபி200எக்ஸ் பைக்கை பெரும்பாலானோர் கண்டுக் கொள்வதில்லை. 2024 சிபி200எக்ஸ் பைக் ஆவது அதனை மாற்றுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









