வெறும் ரூ.1.11 லட்சத்தில் ஹீரோவின் புதிய பைக்... இந்த 5 விஷயத்தை தெரிஞ்சிகிட்டால் உடனே புக் பண்ணிடுவீங்க!!
ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி (Xtreme 160R 2V) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த பைக்கின் பெயரில் உள்ள 2வி என்பது என்ஜின் சிஸ்டத்தில் உள்ள 2 வால்வுகளை குறிக்கிறது. இந்தியாவின் நம்பர் ஒன் 2-வீலர் நிறுவனமாக விளங்கும் ஹீரோ மோட்டோகார்பில் இருந்து விற்பனை செய்யப்படும் ஸ்டைலிஷான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று எக்ஸ்ட்ரீம் 160ஆர் ஆகும். 160சிசி பஜாஜ் பல்சர் பைக்கிற்கு போட்டியாக விளங்கும் இந்த ஹீரோ பைக் அதன் ஸ்டைலான தோற்றத்தினாலும், பவர்ஃபுல்லான என்ஜின் மூலமாகவும் வாடிக்கையாளர்களால் அறியப்படுகிறது.
புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.11 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரேயொரு கருப்பு வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த பைக்கில் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளது. புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்கில் இடம்பெற்றுள்ள 5 முக்கியமான அம்சங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டிசைன் அப்டேட்கள்: ஏற்கனவே விற்பனையில் உள்ள ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் வழங்கப்படுவதை போன்று, புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்கில் புதிய டிசைனில் டெயில்லைட் மற்றும் சிங்கிள்-பீஸில் இருக்கை வழங்கப்பட்டுள்ளது. இருக்கை அமைப்பு ரைடரின் சவுகரியத்திற்கு ஏற்ப சிறிது மாற்றப்பட்டுள்ளது. அதேபோல், பின் இருக்கை பயணிகளுக்கான இருக்கையும் கொஞ்சம் கீழிறக்கப்பட்டு உள்ளது.
பவர்டிரெயின்: புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்கில் 163.2சிசி, சிங்கிள்-சிலிண்டர் 2-வால்வு என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 8,500 ஆர்பிஎம்-இல் 15 எச்பி மற்றும் 6,500 ஆர்பிஎம்-இல் 14 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக இந்த என்ஜின் உள்ளது. டைமண்ட் ஃப்ரேமில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பைக்கில் பெட்ரோல் டேங்க் 12 லிட்டர்கள் கொள்ளளவில் வழங்கப்பட்டுள்ளது.

சஸ்பென்ஷன் & பரிமாண அளவுகள்: இந்த புதிய எக்ஸ்ட்ரீம் பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளது. 145 கிலோ எடை கொண்ட புதிய எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்கில் தரையில் இருந்து ரைடர் இருக்கை ஆனது 795மிமீ உயரத்தில் வழங்கப்பட்டுள்ளது. எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் கிடைக்கும் அதே அளவுகளில் தான் இந்த பைக்கிலும் டயர்கள் கிடைக்கும்.
சிங்கிள்-சேனல் ஏபிஎஸ்: எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கில் ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்படும் நிலையில், இந்த புதிய பைக்கில் சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் வழங்கப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த பைக்கில் பின் சக்கரத்தில் டிரம் பிரேக் வழங்கப்பட்டுள்ளதால், சிங்கிள்-சேனல் ஏபிஎஸ் தான் வழங்க முடியும். இந்த மாற்றத்தால், 4வி பைக்கை விட இந்த 2வி பைக்கின் விலை சுமார் ரூ.28,000 குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விற்பனையில் போட்டியாக உள்ள மற்ற பைக்குகள்: ரூ.1.11 லட்சத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் 2வி பைக்கிற்கு விற்பனையில் பஜாஜ் ஆட்டோவின் என்150 மற்றும் யமஹாவின் எஃப்.இசட் பைக்குகள் போட்டியாக உள்ளன. இதில் பல்சர் என்150-இன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.25 லட்சமாகவும், யமஹா எஃப்.இசட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.1.17 லட்சம் - ரூ.1.30 லட்சம் வரையிலும் உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி பைக்கிற்கும், 2வி பைக்கிற்கும் இடையேயான வித்தியாசம் என்னவென்றால், 4வி பைக்கில் என்ஜின் சிஸ்டத்தில் 4 வால்வுகளும், 2வி பைக்கில் 2 வால்வுகளும் இருக்கும். இவை தவிர்த்து தோற்றத்தில் பெரியதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால், கூடுதல் வால்வுகளினால் 4வி பைக்கில் பெர்ஃபார்மன்ஸ் சிறப்பாக இருக்கும் என்பதை மறக்காதீர்கள்.


Click it and Unblock the Notifications









